சுரேன் எழுதிய ‘பகல் கனவு’ வாசிப்பு

சுரேன் எழுதிய கதை குறித்த எனது வாசிப்பினை அவருக்கு அனுப்பினேன். அதனை இங்கு பகிர்கிறேன். ஒருவேளை சிறுகதை (அது எந்த வகைமை கதையாகினும்) குறித்து எனது மதிப்பீட்டினை ஓரளவு என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சுரேன் எழுதிய இந்தச் சிறுகதையை தீவிர இலக்கிய வகைமைக் கதையாக என்னால் அணுகமுடியவில்லை.

1

கதைச்சுருக்கம்:      

கிருஷ்ணன் பகல் கனவு காண்கிறான். தான் தற்கொலை செய்வதைப்போல. கடைசியாக அவன் கண்ட கனவு அவனது எட்டு வயதில் அவனது தாயும் தந்தையும் கிருஷ்ணனை பாட்டியிடம் விட்டுவிட்டு வெளியூர் சென்றபோது நள்ளிரவில் அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எறிவதுபோல கனவு கண்டு பதறி மூன்று நாள் பயத்திலேயே இருக்கிறான். பின்னர் அவர்கள் வந்ததும் அவர்களை நேரில் பார்த்ததுமே தெளிகிறான்.

இப்போது அவன் கண்ட பகல் கனவு. அவனுக்கு அச்ச்சதைக்கொடுக்கிறது. அந்த நாளில் நடக்கும் எதோ ஒரு சம்பவம் அவனது தற்கொலைக்குக் காரணமாக இருக்கும் என நம்புகிறான்.

கிருஷ்ணன் அலுவலகத்தில் மிகக் கவனமாகப் அன்றைய பணிகளைச் செய்கிறான். அலுவலகத்தில் அவனுக்கு எவ்விதப்பிரசினையும் இல்லை; என்ன நடக்கும் என வாசக மனம் அவனைப்போலவே ஆவல் கொள்கிறது; (இக்கதையில் எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று – கதையின் பிரதான பாத்திரமும் வாசக மனமும் அடுத்து நடப்பதைத் தெரியாமல் இருவருமே ஒன்றாகப் பார்வையாளர்களாக இருப்பது. இது அடிக்கடி பயன்படுத்தப்படும் யுக்தி என்றாலும் கூட. ‘கம்மட்டிபாடம்’ படத்தில் கையாளப்பட்ட யுக்தி) அந்தக் கனவினால் அவனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவன் தனியனாகிறான். இங்கு ஒன்றை சுரேன் திறம்படச் செய்திருக்கிறார் அதாவது அவனுக்குப் பிரச்சினை ஏற்படுவது போல காட்டி அதனை அவரே உடைக்கவும் செய்கிறார்; (ஹாலிவுட் த்ரில்லர் படங்களின் தாக்கம் இருப்பது போல உணர்ந்தேன்) கனவு கண்ட அந்த நாளில் அவனது அலுவலக நேரத்தில்,  மேலாளர் அழைப்பது – வேறு எதற்குமல்ல வாழ்த்துவதற்கு; புதிய நபர் வருகை – வேறு யாருமல்ல அவன் பழைய நண்பன் தான்; கிருஷ்ணன் ஒருதலையாய்க் காதலிக்கும் பெண் அதுநாள் வரை பேசாதவள் அழைப்பது – வேறு எதற்குமல்ல அவனை தனியாகச் சந்திக்க வேண்டும் என்பதை சொல்வதற்காக. ‘மௌனம் பேசியதே’ கதையைக் கூறி அதனையும் உடைப்பது; இவையெல்லாம். தன் நண்பனிடம் அவனது பயத்தைக் கூறும்போது “இல்லை மணி நீ நினைப்பது போல தற்கொலை என்பது நீண்ட நாட்களா திட்டம் போட்டுச் செய்யக் கூடிய காரியமில்லை, அது ஒரு நொடிப் பொழுதில் நிகழக் கூடியது, அந்த ஒரு நொடி தூண்டக் கூடிய உணர்வெழுச்சியில் நடக்கக்கூடியது. நீ சொல்வது போல அது வெறும் ஒரு நாளாகவோ அல்லது இருபத்தி நாலு மணி நேரமாகவோ இருக்கலாம் ஆனால் அந்த இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் எண்பத்தி ஆறாயிரத்தி நானூறு நொடிகள் ஒளிஞ்சுருக்கு. இதுல என்னத் தற்கொலைக்குத் தூண்டக்கூடிய ஒரு நொடி எதுவாயிருக்குமோன்னு நினச்சுதான் நான் பயப்படறேன்” என கிருஷ்ணன் சொல்லுமிடம் கதை மேலும் தீவிரமடைகிறது. எனது வாசக மனதிற்கு தீவரமடையவில்லை எனினும் கதையாக இது அங்கே ஒரு உச்சத்தைக் காண்கிறது. இவனது பயத்தை அறியும் நண்பன் அவனைக் காப்பதற்கு முன்வருகிறான். அவனது யோசனையின்படி இருவரும் திரையரங்கம் சென்று இரவு வெளியே உணவுண்டு தத்தமது வீடுகளை நோக்கிச் செல்கிறார்கள். இடையே வரும் தொலைபேசி அழைப்புகளை புறக்கணித்து நேரத்தைப் போக்குகிறார்கள். கிருஷ்ணன் இரவு 11.45க்கு (so conscious) வீடு வருகிறான். அப்போது அந்த (அவன் திரையரங்கில் இருந்த பொழுது பல முறை அழைத்த அதே எண்) அழைப்பு வருகிறது. யாரென்று தெரியவில்லை. பெண் குரல். அழைத்து ‘உன்னைக் காதலித்து ஏமாந்துவிட்டேன். நீ வாங்கித் தந்த புடவையைக் கொண்டு தூக்கில் தொங்கப்போகிறேன் எனக்கூறி அழைப்புத் துண்டிக்கப்படுகிறது. கிருஷ்ணன் யாரையும் காதலித்ததில்லை;.அழைத்த பெண் யாரென்று தெரியவில்லை. அவள் இப்போது சாகப்போகிறாள். காரணம் இவனது கனவு. பயந்து அதே எண்ணிற்கு அழைக்கிறான், அது அனைத்து வைக்கப்பட்டுள்ளது.

2

வாசிக்கத் தொடங்குகையில் பகல் கனவு என்ற தலைப்பும் கதையின் தொடக்கமும் கச்சிதமாக அமைந்துள்ளன எனத் தோன்றியது. முதலில் கிருஷ்ணனுக்கு வரும் பகல் கனவினை நான் ஒரு படிமமமாகவே பார்த்தேன். பின்னரே சுரேன் அதனை நேரடியாகவே விளக்கத் தொடங்கியபின் இது ‘நேரடியாக சொல்லப்படும் கதை’ என்று தோன்றியது. கிருஷ்ணன் சிறிய வயதிலேயே ஒரு கெட்ட கனவு கண்டு அதனால மூன்று நாட்கள் பயத்திலிருந்தவன் என்றொரு பின்னணி சொல்லப்படுகிறது; அதற்குக் காரணமாக கதையிலேயே ஒரு பாத்திரம் (கிருஷ்ணனின் பாட்டி) ‘தாய் தந்தையர் கிருஷ்ணனை அழைத்துப்போகாத ஏக்கம் தான் இந்தக் கெட்ட கனவிற்குக் காரணம் (தாய் தந்தையர் சென்ற பேருந்தானது தீப்பிடித்து எறிவது) என்று சொல்கிறது. எனவே ஏக்கம் தான் அவனுக்குக் கெட்ட கனவினைத் தருகிறது என்று வாசகமனதிற்குக் கடத்தப்படுகிறது. ‘எந்த ஏக்கம் அவனுக்கு இந்தப் பகல் கனவினைத் தோற்றுவித்தது என்ற கேள்வி இங்கு எழாமலில்லை. அவன் மென்மையான, ஏக்கம் கொண்ட மனிதனாக வளர்கிறான்; ஃப்ராய்டை படித்திருக்கிறான் (ஃபிராய்ட் மேற்கோள் வருமிடம் கிருஷ்ணன் அவரை வாசித்திருப்பதாகத்தான் தெரிகிறது); அவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான், இதனால் அவன் anti social அல்ல என்பது தெரிகிறது; அவன் அலுவலகப்பணிகளைத் திறம்பட செய்பவன்; அங்கு சிறந்த பணியாளன்; பிறகு ஏன் அவனுக்கு அந்தக் கனவு வந்தது என்ற நோக்கில் கதை வாசகமனதில் ஒரு சுவாரசியத்தை உண்டாக்குகிறது. கெட்ட / கொடுங்கனவு வந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்று கதைத் தொடக்கத்தில் சொல்லப்படவில்லை; அவனது தாய் தந்தையர் இறப்பது போல கண்ட கனவிற்குப் பிறகு (அப்போது அவன் எட்டு வயது சிறுவன்) எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. சில காலங்களுக்குப் பிறகு அவர்கள் இறக்கின்றனர். வயது முதிர்ச்சியால் அவர்கள் இறந்திருக்கலாம். அப்படித்தான் கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்கள் இறப்பு குறித்த விளக்கங்கள் ஏதுமில்லை. அவனைவிட்டு எங்கேயும் செல்லமாட்டார்கள் என்று (அவன் அம்மாவே சொல்லியது) நம்புகிறான்; அவனது பெற்றோர்கள் அவனை ஏமாற்றிவிட்டு / கொடுத்த வாக்கினை காப்பாற்றாமல் சென்றுவிட்டதாக வருந்துகிறான்;

இங்கு காலையில் கண்ட கனவிற்காக அவன் ஏங்குவது / பயப்படுவது மற்றும் மனம் சமநிலையற்று இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அன்றே அசம்பாவிதம் நடக்கும் என அவன் நினைப்பது வலுவானதாக இல்லை. இப்படி நினைக்கையில் சுரேன் “ஆனால் முதலில் சொன்ன கூற்றின்படி இந்தக் கதை தொடங்கும் நேரமும், அவன் கனவு கண்ட நேரமும் அந்த நாள் முடியக்கூடிய தருணமாக இல்லாமல். அந்த நாளின் தொடக்கமாக இருப்பதால். மீதமிருக்கக் கூடிய நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்புள்ளது ஆகவே நடப்பவைகளின் நிகழ்தகவுகளின் வழியேதான் நம்மைப் போலவே கிருஷ்ணனும் மீதமிருக்கும் நாளைத் தொடர வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிடுகிறார். இப்போது வாசக மனம் கிருஷ்ணனின் எட்டு வயதில் அவன் கண்ட கனவு நள்ளிரவில் (நாளின் முடிவில்) கண்டதால் அசம்பாவிதம் நடக்கவில்லை; இப்போது நாளின் தொடக்கத்தில் ([பகல் கனவு) கனவு கண்டதால் அவனுக்கு அசம்பாவிதம் நடக்கும் என ஆசிரியர் சொல்வதை வலுவற்றதாகப் பார்க்கிறது. இதனை ஆசிரியத் தொனியில் அதாவது வாசகர்களை விளித்து அவரே சொல்கிறார். பகல் கனவு என்பது நம் வாழ்வில் எப்படி பார்க்கப்படுகிறது? நடக்காத ஒன்றையே பகல் கனவாக காண்போம் என்றொரு பேச்சு உண்டு; மேலும் பகல் கனவு என்பது அரைத் தூக்கநிலை. ‘என்னடா பகல் கனவு கண்டுட்டு இருக்க’ பழக்கப்பட்ட கேள்வி தானே! ‘பகல் கனவு பலிக்காது’ என்பதும் சொல்லப்படுவது தானே!

  1. சிறுகதையில் ஒரு கதாபாத்திரமும் அதன் போக்கும் ஆசிரியர் முன்கூட்டியே விவரிக்கும் சிலவற்றால் கட்டமைக்கபடுகிறது. இல்லையெனில் பிரதான பாத்திரம் எத்தகையது என்பது உணர்த்தப்படவேண்டும். இங்கு கிருஷ்ணனின் பின்னணி குறித்து சொல்லபடுவது அந்த எட்டு வயது கதை தான். அதை வைத்தே நாம் அவன் காணும் கனவுகளை / அவனை எடை போடுகிறோம்.
  2. கதைக்கு ‘பகல் கனவு’ என்று தலைப்பு பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கிறது. அதவாது பகல் கனவு பலிக்காது என்பது தான். ஆசிரியர் பகல் கனவு பலிக்கும் என வாதாடலாம். ஆனால் நாம் சமூகத்திடம் கற்ற குழந்தைகள் தானே! ‘கனவு’ என்று மட்டும் வைத்திருக்கலாம். சில குழப்பங்கள் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்கும்.
  3. இதுபோன்ற முடிவில் சுவாரசியமாக முடிக்கப்படும் கதைகள் இன்னொரு தொடக்கத்தைக் கொண்டிருத்தல் தான் இக்கதைகளுக்குச் சிறப்பான முடிவாக இருக்கும். அதுவே இக்கதையின் வடிவப்பிரசினை. இறுதியில் அவன் மேலும் ஒரு கனவு காண்பதுபோல விவரித்து, அந்தக் கனவிலிருந்து / தூக்கத்திலிருந்து விளிப்பது போல முடித்திருந்தால் இது வடிவ ரீதியாக முழுமையடைந்திருக்கும் என நினைக்கிறேன். (இக்கதை வடிவ ரீதியாக முழுமையடைவில்லை) அதாவது அந்தக்கனவில் அவன் வாள் கொண்டு யாரையே வெட்டுவதைப்போல.. இப்போது வாசகமனம் ‘அடுத்து இவனது வாழ்வில் என்ன நடக்கும்?’ என எண்ணத்தொடங்கும். ஆனால் இக்கதையின் கட்டுமானமே வலுவற்றது. அவனது எட்டு வயதில் நடந்ததாகக் கூறும் சம்பவத்தில், அவன் கண்ட கனவில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. அது நள்ளிரவில் நடந்தது அதனால் ஒன்றும் ஆகவில்லை. இது நாளின் தொடக்கத்தில் கண்ட ‘பகல் கனவு’ எனவே நிச்சயம் ஏதாவது நடக்கும் என்பதை எப்படி ஆசிரியர் கட்டமைக்கிறார் என்று புரியவில்லை. என்ன அனுமானத்தில் இதனைக் கட்டமைத்தார்? பகல் கனவு குறித்து முதல் மேலே சொல்லிவிட்டேன்.
  4. இதனால் பாத்திரத்தை கட்டமைத்தல், கதை சொல்லல், துவக்கம், தலைப்பு என அனைத்திலும் பிரச்சினையும் வலுவற்ற தன்மையும் கொண்ட கதையாக இருக்கிறது ‘பகல் கனவு’. .
  5. பகல் கனவில் கிருஷணன் தற்கொலை செய்துகொள்கையில் ஒரு பெண் வருவதும் இறுதியில் ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஒரு பெண் காரணமாக இருப்பதும் நன்றாகத்தானிருக்கிறது. அனால் இவை எல்லாம் பழையவை.

3

கதையின் பேசு பொருளைப் பழையது என்று சொல்ல முடியவில்லை. யதார்தக்கதை என்றாலும் அந்த கனவு குறித்த mystry இதனை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது. அந்த mystryயினை நிறுவியவிதமும் கையாண்ட விதமும் ‘கதையினை’ வலுவற்றதாக ஆக்குகிறது. மொழி பிரச்சினை இல்லை எனினும் விவரிப்புகள் பழையவையாக எனக்குத் தோன்றுகின்றன. ஓரளவு எனக்குக் கதையில் பிரச்சினையாகத் தோன்றியதை சொல்லியிருக்கிறேன். உங்களது அடுத்த கதைகளில் இவைகள் களைந்தெரியப்பட்டால் இது சொல்லப்பட்டதற்கு அர்த்தம் கிடைத்துவிடும். இதனை தீவிர இலக்கிய வகைமைக்குள் என்னால் சேர்த்துக்கொள்ள இயலவில்லை. தமிழ் இலக்கியத்தில் இப்போதுள்ள scenario வேறு. இது pulp fiction வகையறா. அதிலும் முழுமையடையாத கதை. வாழ்த்துக்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.

யமுனை செல்வன்

கிருஷ்ணபுரம்

02.06.2017

 

 

Advertisements