சுரேன் எழுதிய ‘பகல் கனவு’ வாசிப்பு

சுரேன் எழுதிய கதை குறித்த எனது வாசிப்பினை அவருக்கு அனுப்பினேன். அதனை இங்கு பகிர்கிறேன். ஒருவேளை சிறுகதை (அது எந்த வகைமை கதையாகினும்) குறித்து எனது மதிப்பீட்டினை ஓரளவு என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சுரேன் எழுதிய இந்தச் சிறுகதையை தீவிர இலக்கிய வகைமைக் கதையாக என்னால் அணுகமுடியவில்லை.

1

கதைச்சுருக்கம்:      

கிருஷ்ணன் பகல் கனவு காண்கிறான். தான் தற்கொலை செய்வதைப்போல. கடைசியாக அவன் கண்ட கனவு அவனது எட்டு வயதில் அவனது தாயும் தந்தையும் கிருஷ்ணனை பாட்டியிடம் விட்டுவிட்டு வெளியூர் சென்றபோது நள்ளிரவில் அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எறிவதுபோல கனவு கண்டு பதறி மூன்று நாள் பயத்திலேயே இருக்கிறான். பின்னர் அவர்கள் வந்ததும் அவர்களை நேரில் பார்த்ததுமே தெளிகிறான்.

இப்போது அவன் கண்ட பகல் கனவு. அவனுக்கு அச்ச்சதைக்கொடுக்கிறது. அந்த நாளில் நடக்கும் எதோ ஒரு சம்பவம் அவனது தற்கொலைக்குக் காரணமாக இருக்கும் என நம்புகிறான்.

கிருஷ்ணன் அலுவலகத்தில் மிகக் கவனமாகப் அன்றைய பணிகளைச் செய்கிறான். அலுவலகத்தில் அவனுக்கு எவ்விதப்பிரசினையும் இல்லை; என்ன நடக்கும் என வாசக மனம் அவனைப்போலவே ஆவல் கொள்கிறது; (இக்கதையில் எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று – கதையின் பிரதான பாத்திரமும் வாசக மனமும் அடுத்து நடப்பதைத் தெரியாமல் இருவருமே ஒன்றாகப் பார்வையாளர்களாக இருப்பது. இது அடிக்கடி பயன்படுத்தப்படும் யுக்தி என்றாலும் கூட. ‘கம்மட்டிபாடம்’ படத்தில் கையாளப்பட்ட யுக்தி) அந்தக் கனவினால் அவனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவன் தனியனாகிறான். இங்கு ஒன்றை சுரேன் திறம்படச் செய்திருக்கிறார் அதாவது அவனுக்குப் பிரச்சினை ஏற்படுவது போல காட்டி அதனை அவரே உடைக்கவும் செய்கிறார்; (ஹாலிவுட் த்ரில்லர் படங்களின் தாக்கம் இருப்பது போல உணர்ந்தேன்) கனவு கண்ட அந்த நாளில் அவனது அலுவலக நேரத்தில்,  மேலாளர் அழைப்பது – வேறு எதற்குமல்ல வாழ்த்துவதற்கு; புதிய நபர் வருகை – வேறு யாருமல்ல அவன் பழைய நண்பன் தான்; கிருஷ்ணன் ஒருதலையாய்க் காதலிக்கும் பெண் அதுநாள் வரை பேசாதவள் அழைப்பது – வேறு எதற்குமல்ல அவனை தனியாகச் சந்திக்க வேண்டும் என்பதை சொல்வதற்காக. ‘மௌனம் பேசியதே’ கதையைக் கூறி அதனையும் உடைப்பது; இவையெல்லாம். தன் நண்பனிடம் அவனது பயத்தைக் கூறும்போது “இல்லை மணி நீ நினைப்பது போல தற்கொலை என்பது நீண்ட நாட்களா திட்டம் போட்டுச் செய்யக் கூடிய காரியமில்லை, அது ஒரு நொடிப் பொழுதில் நிகழக் கூடியது, அந்த ஒரு நொடி தூண்டக் கூடிய உணர்வெழுச்சியில் நடக்கக்கூடியது. நீ சொல்வது போல அது வெறும் ஒரு நாளாகவோ அல்லது இருபத்தி நாலு மணி நேரமாகவோ இருக்கலாம் ஆனால் அந்த இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் எண்பத்தி ஆறாயிரத்தி நானூறு நொடிகள் ஒளிஞ்சுருக்கு. இதுல என்னத் தற்கொலைக்குத் தூண்டக்கூடிய ஒரு நொடி எதுவாயிருக்குமோன்னு நினச்சுதான் நான் பயப்படறேன்” என கிருஷ்ணன் சொல்லுமிடம் கதை மேலும் தீவிரமடைகிறது. எனது வாசக மனதிற்கு தீவரமடையவில்லை எனினும் கதையாக இது அங்கே ஒரு உச்சத்தைக் காண்கிறது. இவனது பயத்தை அறியும் நண்பன் அவனைக் காப்பதற்கு முன்வருகிறான். அவனது யோசனையின்படி இருவரும் திரையரங்கம் சென்று இரவு வெளியே உணவுண்டு தத்தமது வீடுகளை நோக்கிச் செல்கிறார்கள். இடையே வரும் தொலைபேசி அழைப்புகளை புறக்கணித்து நேரத்தைப் போக்குகிறார்கள். கிருஷ்ணன் இரவு 11.45க்கு (so conscious) வீடு வருகிறான். அப்போது அந்த (அவன் திரையரங்கில் இருந்த பொழுது பல முறை அழைத்த அதே எண்) அழைப்பு வருகிறது. யாரென்று தெரியவில்லை. பெண் குரல். அழைத்து ‘உன்னைக் காதலித்து ஏமாந்துவிட்டேன். நீ வாங்கித் தந்த புடவையைக் கொண்டு தூக்கில் தொங்கப்போகிறேன் எனக்கூறி அழைப்புத் துண்டிக்கப்படுகிறது. கிருஷ்ணன் யாரையும் காதலித்ததில்லை;.அழைத்த பெண் யாரென்று தெரியவில்லை. அவள் இப்போது சாகப்போகிறாள். காரணம் இவனது கனவு. பயந்து அதே எண்ணிற்கு அழைக்கிறான், அது அனைத்து வைக்கப்பட்டுள்ளது.

2

வாசிக்கத் தொடங்குகையில் பகல் கனவு என்ற தலைப்பும் கதையின் தொடக்கமும் கச்சிதமாக அமைந்துள்ளன எனத் தோன்றியது. முதலில் கிருஷ்ணனுக்கு வரும் பகல் கனவினை நான் ஒரு படிமமமாகவே பார்த்தேன். பின்னரே சுரேன் அதனை நேரடியாகவே விளக்கத் தொடங்கியபின் இது ‘நேரடியாக சொல்லப்படும் கதை’ என்று தோன்றியது. கிருஷ்ணன் சிறிய வயதிலேயே ஒரு கெட்ட கனவு கண்டு அதனால மூன்று நாட்கள் பயத்திலிருந்தவன் என்றொரு பின்னணி சொல்லப்படுகிறது; அதற்குக் காரணமாக கதையிலேயே ஒரு பாத்திரம் (கிருஷ்ணனின் பாட்டி) ‘தாய் தந்தையர் கிருஷ்ணனை அழைத்துப்போகாத ஏக்கம் தான் இந்தக் கெட்ட கனவிற்குக் காரணம் (தாய் தந்தையர் சென்ற பேருந்தானது தீப்பிடித்து எறிவது) என்று சொல்கிறது. எனவே ஏக்கம் தான் அவனுக்குக் கெட்ட கனவினைத் தருகிறது என்று வாசகமனதிற்குக் கடத்தப்படுகிறது. ‘எந்த ஏக்கம் அவனுக்கு இந்தப் பகல் கனவினைத் தோற்றுவித்தது என்ற கேள்வி இங்கு எழாமலில்லை. அவன் மென்மையான, ஏக்கம் கொண்ட மனிதனாக வளர்கிறான்; ஃப்ராய்டை படித்திருக்கிறான் (ஃபிராய்ட் மேற்கோள் வருமிடம் கிருஷ்ணன் அவரை வாசித்திருப்பதாகத்தான் தெரிகிறது); அவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான், இதனால் அவன் anti social அல்ல என்பது தெரிகிறது; அவன் அலுவலகப்பணிகளைத் திறம்பட செய்பவன்; அங்கு சிறந்த பணியாளன்; பிறகு ஏன் அவனுக்கு அந்தக் கனவு வந்தது என்ற நோக்கில் கதை வாசகமனதில் ஒரு சுவாரசியத்தை உண்டாக்குகிறது. கெட்ட / கொடுங்கனவு வந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்று கதைத் தொடக்கத்தில் சொல்லப்படவில்லை; அவனது தாய் தந்தையர் இறப்பது போல கண்ட கனவிற்குப் பிறகு (அப்போது அவன் எட்டு வயது சிறுவன்) எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. சில காலங்களுக்குப் பிறகு அவர்கள் இறக்கின்றனர். வயது முதிர்ச்சியால் அவர்கள் இறந்திருக்கலாம். அப்படித்தான் கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்கள் இறப்பு குறித்த விளக்கங்கள் ஏதுமில்லை. அவனைவிட்டு எங்கேயும் செல்லமாட்டார்கள் என்று (அவன் அம்மாவே சொல்லியது) நம்புகிறான்; அவனது பெற்றோர்கள் அவனை ஏமாற்றிவிட்டு / கொடுத்த வாக்கினை காப்பாற்றாமல் சென்றுவிட்டதாக வருந்துகிறான்;

இங்கு காலையில் கண்ட கனவிற்காக அவன் ஏங்குவது / பயப்படுவது மற்றும் மனம் சமநிலையற்று இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அன்றே அசம்பாவிதம் நடக்கும் என அவன் நினைப்பது வலுவானதாக இல்லை. இப்படி நினைக்கையில் சுரேன் “ஆனால் முதலில் சொன்ன கூற்றின்படி இந்தக் கதை தொடங்கும் நேரமும், அவன் கனவு கண்ட நேரமும் அந்த நாள் முடியக்கூடிய தருணமாக இல்லாமல். அந்த நாளின் தொடக்கமாக இருப்பதால். மீதமிருக்கக் கூடிய நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்புள்ளது ஆகவே நடப்பவைகளின் நிகழ்தகவுகளின் வழியேதான் நம்மைப் போலவே கிருஷ்ணனும் மீதமிருக்கும் நாளைத் தொடர வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிடுகிறார். இப்போது வாசக மனம் கிருஷ்ணனின் எட்டு வயதில் அவன் கண்ட கனவு நள்ளிரவில் (நாளின் முடிவில்) கண்டதால் அசம்பாவிதம் நடக்கவில்லை; இப்போது நாளின் தொடக்கத்தில் ([பகல் கனவு) கனவு கண்டதால் அவனுக்கு அசம்பாவிதம் நடக்கும் என ஆசிரியர் சொல்வதை வலுவற்றதாகப் பார்க்கிறது. இதனை ஆசிரியத் தொனியில் அதாவது வாசகர்களை விளித்து அவரே சொல்கிறார். பகல் கனவு என்பது நம் வாழ்வில் எப்படி பார்க்கப்படுகிறது? நடக்காத ஒன்றையே பகல் கனவாக காண்போம் என்றொரு பேச்சு உண்டு; மேலும் பகல் கனவு என்பது அரைத் தூக்கநிலை. ‘என்னடா பகல் கனவு கண்டுட்டு இருக்க’ பழக்கப்பட்ட கேள்வி தானே! ‘பகல் கனவு பலிக்காது’ என்பதும் சொல்லப்படுவது தானே!

 1. சிறுகதையில் ஒரு கதாபாத்திரமும் அதன் போக்கும் ஆசிரியர் முன்கூட்டியே விவரிக்கும் சிலவற்றால் கட்டமைக்கபடுகிறது. இல்லையெனில் பிரதான பாத்திரம் எத்தகையது என்பது உணர்த்தப்படவேண்டும். இங்கு கிருஷ்ணனின் பின்னணி குறித்து சொல்லபடுவது அந்த எட்டு வயது கதை தான். அதை வைத்தே நாம் அவன் காணும் கனவுகளை / அவனை எடை போடுகிறோம்.
 2. கதைக்கு ‘பகல் கனவு’ என்று தலைப்பு பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கிறது. அதவாது பகல் கனவு பலிக்காது என்பது தான். ஆசிரியர் பகல் கனவு பலிக்கும் என வாதாடலாம். ஆனால் நாம் சமூகத்திடம் கற்ற குழந்தைகள் தானே! ‘கனவு’ என்று மட்டும் வைத்திருக்கலாம். சில குழப்பங்கள் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்கும்.
 3. இதுபோன்ற முடிவில் சுவாரசியமாக முடிக்கப்படும் கதைகள் இன்னொரு தொடக்கத்தைக் கொண்டிருத்தல் தான் இக்கதைகளுக்குச் சிறப்பான முடிவாக இருக்கும். அதுவே இக்கதையின் வடிவப்பிரசினை. இறுதியில் அவன் மேலும் ஒரு கனவு காண்பதுபோல விவரித்து, அந்தக் கனவிலிருந்து / தூக்கத்திலிருந்து விளிப்பது போல முடித்திருந்தால் இது வடிவ ரீதியாக முழுமையடைந்திருக்கும் என நினைக்கிறேன். (இக்கதை வடிவ ரீதியாக முழுமையடைவில்லை) அதாவது அந்தக்கனவில் அவன் வாள் கொண்டு யாரையே வெட்டுவதைப்போல.. இப்போது வாசகமனம் ‘அடுத்து இவனது வாழ்வில் என்ன நடக்கும்?’ என எண்ணத்தொடங்கும். ஆனால் இக்கதையின் கட்டுமானமே வலுவற்றது. அவனது எட்டு வயதில் நடந்ததாகக் கூறும் சம்பவத்தில், அவன் கண்ட கனவில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. அது நள்ளிரவில் நடந்தது அதனால் ஒன்றும் ஆகவில்லை. இது நாளின் தொடக்கத்தில் கண்ட ‘பகல் கனவு’ எனவே நிச்சயம் ஏதாவது நடக்கும் என்பதை எப்படி ஆசிரியர் கட்டமைக்கிறார் என்று புரியவில்லை. என்ன அனுமானத்தில் இதனைக் கட்டமைத்தார்? பகல் கனவு குறித்து முதல் மேலே சொல்லிவிட்டேன்.
 4. இதனால் பாத்திரத்தை கட்டமைத்தல், கதை சொல்லல், துவக்கம், தலைப்பு என அனைத்திலும் பிரச்சினையும் வலுவற்ற தன்மையும் கொண்ட கதையாக இருக்கிறது ‘பகல் கனவு’. .
 5. பகல் கனவில் கிருஷணன் தற்கொலை செய்துகொள்கையில் ஒரு பெண் வருவதும் இறுதியில் ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஒரு பெண் காரணமாக இருப்பதும் நன்றாகத்தானிருக்கிறது. அனால் இவை எல்லாம் பழையவை.

3

கதையின் பேசு பொருளைப் பழையது என்று சொல்ல முடியவில்லை. யதார்தக்கதை என்றாலும் அந்த கனவு குறித்த mystry இதனை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது. அந்த mystryயினை நிறுவியவிதமும் கையாண்ட விதமும் ‘கதையினை’ வலுவற்றதாக ஆக்குகிறது. மொழி பிரச்சினை இல்லை எனினும் விவரிப்புகள் பழையவையாக எனக்குத் தோன்றுகின்றன. ஓரளவு எனக்குக் கதையில் பிரச்சினையாகத் தோன்றியதை சொல்லியிருக்கிறேன். உங்களது அடுத்த கதைகளில் இவைகள் களைந்தெரியப்பட்டால் இது சொல்லப்பட்டதற்கு அர்த்தம் கிடைத்துவிடும். இதனை தீவிர இலக்கிய வகைமைக்குள் என்னால் சேர்த்துக்கொள்ள இயலவில்லை. தமிழ் இலக்கியத்தில் இப்போதுள்ள scenario வேறு. இது pulp fiction வகையறா. அதிலும் முழுமையடையாத கதை. வாழ்த்துக்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.

யமுனை செல்வன்

கிருஷ்ணபுரம்

02.06.2017

 

 

Advertisements

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பார்க்கிறீர்களா? அங்கு எதற்கு ஆர்.ஜே.பாலாஜி? 

தமிழகத்தில் தமிழ் கிரிகெட் கமெண்ட்ரி என்றால் அது பிராமணர்களால் மட்டும் தான் செய்ய முடியும் என்றொரு தொன்மத்தினை உருவாக்கிவிட்டார்கள். ஏற்கனவே இங்கிருந்து செல்லும் விளையாட்டு வீரர்கள் அனைவருமே பிராமணர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது இதுவும். அதிகார மட்டத்தில் இருக்கும் நபர்கள் என்று மாறுகிறார்களோ அன்றே இந்நிலை மாறும். அவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று இங்கு சொல்லவில்லை. எனக்கு பிராமணர்கள் மேல் எந்த வனமும் இல்லை. ஆனால் எப்படி அவர்கள் மட்டும் தமிழகத்திலிருந்து இந்த இரு துறைகளுக்கும் செல்கிறார்கள்.? என்பதே என் கேள்வி.

சரி, தமிழில் தமிழர்களுக்காக தனது சேனலைத் துவக்கியிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம். அதற்கு எதற்கு ஆர்.ஜே.பாலாஜியை வர்ணனையாளராக்கி உட்கார வைத்திருக்கிறார்கள். பாலாஜி நன்றாக கலாய்க்ககூடியவர். ஒரு குபீர்தனமான மேல்தட்டு அரசியல் பார்வையுடையவர். அவர் எதற்காக இங்கு? கலாய்ப்பது எப்போது கிரிகெட் வர்ணனைக்கு ‘தகுதி’யாக வரையறுக்கப்பட்டது? சரி இதனை இப்படி பார்க்கலாம். ஆர்.ஜே பாலாஜி எண்ணற்ற இளம் தலைமுறையினரை ரசிகர்களாகக் கொண்டவர். அவரது புகழ் வெளிச்சம் இவர்களுக்குத் தேவைப்படலாம்.

மேலும் இவர்கள் செய்யும் தமிழ் வர்ணனை தமிழ் தெரியாதவர்களுக்கும் எளிதாக புரிந்துவிடும். காரணம் இவர்கள்தான் தமிழிலேயே பேசுவதில்லையே.

இங்கு வேறு வழியே இல்லை. நாம் ஆங்கில வர்ணனையாளர்களி ஒப்பிடலுக்காக இழுத்தாக வேண்டும். அவர்களுக்கு ‘fielding setup’ குறித்து நன்கு தெரிந்திருக்கும். கிரிகெட் வரலாறு தெரியும். புதிய வீரர்களின் வருகை, அவர்களது பெயர்கள், அவர்களது சாதனை என அனைத்தையும் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். இங்கு பாலாஜி போன்றோருக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு முக்கிய வீரர்களின் ஆட்ட நுணுக்கங்கள், நிறை குறைகள், ஆடுகளத்தின் தன்மை என அனைத்தும் விரல் நுனியில் இருக்கும். காரணம் அதிலேயே ஊறித் திளைப்பதுதான். ஆங்கில வர்ணனையாளர்கள் சிலர் கிரிகெட் தொடர்பாக புத்தகங்களும் எழுதியிருக்கிறார்கள். சிலர் தொடர்ந்து சர்வதேச, தேசிய செய்திதாள்களில் பத்தி எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். நம் வர்ணனையாளர்கள் ஏன் இவ்வளவு தரமற்றுப் பேசுகிறார்கள்? இங்கு ‘தமிழில் பேசுவதால் தான் இப்படி கொச்சைப்படுத்துகிறீர்கள்’ எனச் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. தமிழ் தெரியாதவர்களும் இவர்களது வர்ணனைகளைப் புரிந்துகொள்ள இயலும். காரணம் இவர்கள் தான் தமிழில் பேசுவதில்லையே.

இவ்வளவு பெரிய நிறுவனம் ஒரு பிராந்திய மொழியில் தனது ஒளிபரப்பினைத் தொடங்கும்போது அது எப்படி செயல்பட்டிருக்க வேண்டும்?

 1. தமிழகம் முழுவதும் audition வைத்து தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். நல்ல குரல் வளம், கிரிகெட் பற்றிய புரிதல், பேச்சுத்திறன் ஆகியவை அவர்களுக்கு இருத்தல் வேண்டும். நல்ல தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலம் புதிதான திறமையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்த மாதிரியும் இருக்கும். இங்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் யார் செயல்படுவார்கள் ?
 2. இதுவரை இதுதான் என ‘தமிழ் கிரிகெட் வர்ணனைக்கு’ ஒரு தரம் / கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறது. அதனை நிபுணர் குழு கொண்டு இவர்களே புதிதாக கட்டமைக்க வேண்டும். அந்தக்குழுவில் இருப்பவர்களும் மேல்தட்டு பிராமணர்கள் தானோ என ஐயுறுகிறேன். மேல்தட்டு என்று வைத்துக்கொள்ளுங்கள்.
 3. தமிழில் வந்துகொண்டிருக்கும் discovery சேனலின் தமிழ் ஒரு உதாரணம். அவர்களுக்கென ஒரு பாணியினை அவர்களாக உருவாக்கிகொண்டார்கள்.
 4. தமிழ் வர்ணனை செய்பவர்கள்: ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கு பொதுத்தமிழில் பேசத்தெரிவதில்லை. தன்கள் வீட்டில் பேசுவதைப்போல தங்கள் சாதிய அடையாளங்களைப் பறைசாற்றும் வழக்கில் தான் பேசுகிறார்கள். வர்ணனைக்குப் பிறகு அடுத்த தொழிலைப் பார்க்கப் போய்விடுகிரார்ஜ்கள்.
 5. அர்பணிப்பு உணர்வு என்பது இவர்களிடம் இல்லை. அப்படிச்சொல்வதைவிட எனக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை எனச் சொல்லலாம்.

இவர்களைக் கேள்வி கேட்க யாருமேயில்லை என்பது உண்மை. ஆங்கில சேனலுக்கு மாறிக்கொண்டேன். உதிரத்தில் கிரிகெட் ஊறிய நமது குப்பனும் சுப்பனும் நல்ல தமிழில் வர்ணனை செய்யும்பொழுது வரலாமென இருக்கிறேன். இதில் தமிழ் உணர்வுமிக்க உணர்ச்சிமிக்க இளைஞனின் குமுறல் எனகொள்ளகூடாது. எரிச்சலிலேயே எவ்வளவு நேரம் பார்க்க இயலும்? நாணி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஓரளவு சென்சிபிலாகப் பேசுகிறார். மற்றவர்கள் வர்ணனை எல்லாம் அலுப்பாக இருக்கிறது. Medicore to the core.

இன்னொன்று இந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரும், முத்து, பாலாஜி தவிர்த்து முன்னால் கிரிகெட் ஆட்டக்காரர்கள் / இந்திய அணியிலிருந்து consistency / out of form காரணமாக கழட்டி விடப்பட்டவர்கள், இவர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

ஒரு வேளை இப்போது தான் சேனல் ஆரம்பிக்கப்படிருப்பதால் இவர்கள் அழைக்கப்படிருக்கலாம் எனவும் தோன்றுகிறது. சில நாட்களில் நல்ல குழுவினை உருவாகிக்கொள்வார்கள் எனத் தோன்றுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம் எதிர்காலத்தில் அஷ்வின், முரளி விஜய் போன்றோரை இங்கு பார்க்க இயலும். மேலும் இந்திய / ரஞ்சி / உள்ளூர் அணிகளில் ஆடி அணிக்குள் இடம் கிடைக்காதவர்களும் இங்கு வந்துவிடுவார்கள்.

பொதுவாகவே எனக்கொரு கேள்வியுண்டு. ஏன் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களை வர்ணனைக்கு அழைக்க வேண்டும்? கவாஸ்கர் போன்றவர்கள் அன்னகிளியுடன் ரிட்டயர்ட் ஆனவர்கள். அவர்களை வைத்து 20 20 கிரிகெட்டிற்கு வர்ணனை செய்வது என்னவொரு அபத்தம்!

 

கதாநாயகியை அறிமுகப்படுத்துதலும் தமிழ் சினிமாவும்

YouTubeல் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்களின் முன்னோட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பாம்புச் சட்டை என்ற திரைப்படத்தின் sneak peak என்று அவர்கள் வெளியிட்ட இரண்டு நிமிட வீடியோவினைப் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

Paambhu Sattai – Moviebuff Sneak Peek | Bobby Simha, Keerthi Suresh, Rajendran

இத்தனை வருட சினிமாவில், வணிகப்படங்களில் கதாநாயகியை அறிமுகப்படுத்த பல்வேறு புதிய யுக்திகளை (!) இயக்குனர்கள் கையாண்டுள்ளனர். இதோ இந்தப்படத்திலும் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் தான் கற்பனைத்திறனற்றவர் என்றால் துணை இயக்குனர்களுக்கு என்னவாயிற்று. இப்படியொரு மகா மட்டரகமான காட்சியினை எடுத்து அதனை படம் வெளியாவதற்கு முன்பே ரிலீஸ் வேறு செய்திருக்கிறார்கள்.

இவ்வளவு யோசிப்பதற்கு.. அதாவது

 1. கதாநாயகி அறிமுகம்
 2. காதலன் கதாநாயகியைப் பார்க்கும் காட்சி
 3. காதலன் காதலில் விழும் காட்சி
 4. கதாநாயகியைப் பின்தொடர்ந்து மனநிலை பாதிக்கப்பட்டவன் போல சுற்றும் காட்சி. அந்த stalking பாடல்
 5. பின்பு இருவரும் இணைவது.

இந்த வழிமுறையைப் பின்பற்றாமல் ஏன் அறிமுகப்படுத்தும்போதே இருவரையும் காதலர்களாக காட்டக்கூடாது. புதுமையான சிந்தனைகளே அல்லாத நான்கைந்து உலகப்படங்களை பார்த்துவிட்டு இரவல் வாங்கிய காமிராவில் நான்கைந்து அமெச்சூர் குறும்படங்களை எடுத்துவிட்டு  துணை இயக்குநராகி, பின்பு இயக்குநராகி அவர்கள் இயக்கும் படங்கள் இந்த கோலத்தில் தான் இருக்கின்றன.

இந்த template சங்கதிகளைப் பின்பற்றாத சுயமாக யோசிக்கும் அல்லது நல்ல கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் கொண்ட துணை இயக்குனர்களைக் கொண்ட இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மற்றுமொன்று கதாநாயகியின் தாராள உள்ளத்தைப் பார்த்து காதல் வருவதும், காதல் வந்ததும் முத்தமிடக் கதாநாயகன் பாய்வது போல கனவு காண்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. ஒன்று மற்றும் ஏற்கும்படி இருக்கிறது. தங்கள் கடமையை சரிவர செய்யாத பொறுப்பற்ற இன்றைய இளைஞர்களின் அப்பட்டமான நிலையை அப்படியே காட்டியது தான்.

கொஞ்சம் கூட sensibility இல்லாத இவர்களிடம் சினிமா மாட்டிக்கொண்டு படும்பாடு இருக்கிறதே.

ஆவணப்படம் என்பது…

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இரண்டு ஆவணப்படங்களைப் பார்த்தேன். எங்கள் தொடர்பியல் துறையில் வரிசையாக இந்த இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன. முதல் படம் ‘சாதிகளிடம் ஜாக்கிரதை’. இரண்டாவது படம் ‘டாக்டர் ஷூ மேக்கர்’.

முதல்படமான ‘சாதிகளிடம் ஜாக்கிரதை’, ஹரியான மாநிலத்தின் மிர்ச்பூர் என்ற பகுதியில் தலித்துகள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையினைப் பதிவு செய்கிறது. அங்கு ஜாட் என்ற ஆதிக்க சாதியின் கீழ் பல வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்கின்றனர் தலித்துகள். அங்கு காலம்காலமாக ஜாட் சமூகத்தினரே பல்வேறு முக்கிய அரசு பொறுப்புகளைப் பெற்றுவருகின்றனர். சமீபத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்கி ஜாட் சமூகத்தினரின் முன்னே மதிப்புடன் வாழத்தொடங்குகின்றனர் அப்பகுதி தலித் மக்கள். இது ஜாட் சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை. கீழ் சாதி மக்கள் எப்படி தலை நிமிர்ந்து நடக்கலாம் என்று நினைத்துப் பொறுமுகின்றனர். அப்படித்தான் படத்தில் சொல்லப்படுகிறது. மேலும் இந்தக் காட்சிகளெல்லாம் அனிமேசனாக காட்டப்படுகிறது. பின்னர் ஒரு நாள்.. அப்பகுதியின் தெரு ஒன்றில் தலித் ஒருவர் வளர்க்கும் நாய் ஒன்று ஜாட் சமூக மக்கள் இருவரைப் பார்த்து கடுமையாகக் குரைக்கிறது. இதுகண்டு கோபமடையும் அந்த இரண்டுபேரும் ‘ஒரு தலித் வளர்க்கும் நாய் ஒன்று நம்மைப் பார்த்து எப்படிக் குரைக்கலாம் என்று வெகுண்டு கத்தி, கபடா போன்ற சாமான்களுடன் தங்கள் சமூகத்தினர் சகிதமாக வந்து தலித் மக்கள் அனைவரையும் தாக்குகின்றனர். இதுவும் அனிமேசனில் காட்டப்படுகிறது. அந்தத் தாக்குதலில் தலித் மக்கள் பாதிப்படைகின்றனர். பின்னர் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இது நடந்தது ஆறு வருடங்களுக்கு முன்பு. ராணுவத்தினர் காவலுக்குப் போடப்படுகின்றனர். பாதித்த மக்களை ராகுல் காந்தி சென்று ‘பார்வையிட்டு மட்டும்’ வருகிறார். அப்பகுதி மனிதர் ஒருவராலேயே இது சொல்லப்படுகிறது. மோடி மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தங்களுக்கு நன்மை செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அப்போது மோடியின் உணர்சிகரமான ‘தலித்துகள், தாழ்த்தப்பட்டோர், கீழ் சாதியினர் இவர்கள் காக்கப்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சியானது அடிமட்டம் வரை செல்ல வேண்டும் என்ற காணொளித்துண்டு இணைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையிலிருக்கிறது. உச்ச நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு இறக்கப்பட்டுள்ளது. இது ஒரு தேசிய அவலம். இந்த வழக்கிற்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும். நடந்த அநீதிக்கு இருந்த ஒரு சாட்சியையும் ஜாட் சமூகத்தினர் கொன்றுவிட்டனர் என பாதிக்கப்பட்டவர் கூறுகிறார். கொல்லப்பட்டவர் புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. அதனை விபத்த்கு என ஜோடித்து வழக்கை முடித்துவிட்டனர் என்றும் சொல்கிறார். மேலும் வழக்கின் நிலைமை. என பல விஷயங்கள் பதிவுசெய்யப்படுகிறது. போலீசார் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு நழுவலாக பதில் சொல்லுகிறார்.                                 .

 1. என் பார்வையில் என்று சொல்வது அவசியமில்லை என்றே சொல்வேன். இது என்னுடைய பக்கம் அல்லவா. இது பொதுமைப்படுத்துதல் அல்ல. இரு ஆவணப்படங்கள் குறித்த எனது கருத்து மட்டுமே. இதனை ஏற்பதும் ஏற்காததும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம்.
 2. அனிமேசன் காட்சிகள் நவீன வடிவம் என்றாலும் ‘ஆவணப்படத்திற்கான கூறுகளை’ இழந்து இது டாகுட்ராமா என்ற வகைமைக்குள் சென்றுவிடுகிறது.
 3. பல காட்சிகள் stage செய்யப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
 4. பார்வையாளனிடம் கழிவிரக்கம் கோருவது ஆவணப்படமல்ல. இரு தரப்பு நியாயங்களையும் அல்லது அவ்வாறு அவர்கள் சொல்வதை சீரிய முறையில் ‘விசாரித்து’ (indepth investigation) கிடைக்கும் தகவல்களை / விளக்கங்களை முன்வைத்துவிட்டு அதன் இயக்குனன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
 5. மேலும் சம்பந்தப்பட்ட இருதரப்பு அதிகாரிகள் அனைவரையும் நேர்கண்டு பதிவு செய்துவிடவேண்டும். உதாரணத்திற்கு இரு தரப்பு வக்கீல்களையும் நேர்கண்டு அவர்கள் தரப்பினைக் கேட்டுக்கொள்ளவேண்டும். நிச்சயம் இருதரப்புமே முன்வருவார்கள் என்றே தோன்றுகிறது. அப்படி ஒருவர் வரவில்லை எனில் ஒரு தரப்பின் கருத்துக்களை மட்டும் வைத்து ஒரு பிரச்சினையை அணுகுவதைத் தவிர்ப்பது நலம். ‘நாங்கள் முயற்சித்தோம். ஆனால் மற்ற தரப்பினை பிடிக்க முடியவில்லை’ என்று நேர்மையாக ஆவணப்படம் எடுக்க நினைப்பவன் / ஒருதலைபட்சமற்றவன் ஒருபோதும் சொல்லமாட்டான்.
 6. இங்கு முடிவைத் தீர்மானித்து ஒரு தரப்பினைச் சென்றடைவது பார்வையாளனாக மட்டுமே இருக்கவேண்டும். இயக்குனரே ஒரு சார்பாகச் செயல்படுவதும், அல்லது பாதிக்கப்பட (victims) தரப்பினை மட்டும் வைத்து ஒரு ஆவணத்தை உருவாக்குவதும் சரியான முறையல்ல. இங்கு நம்பகத்தன்மை இயல்பாகவே குறைந்துவிடும். மேலும் பார்வையாளர்களை தவறான முடிவெடுக்கச் செய்துவிடும்.
 7. மேலும், நாம் சொல்லவரும் கருத்தில் மட்டுமே கவனம் கொள்ளவேண்டும். அது எப்படி சொல்லப்படுகிறதோ அப்படியே பார்வையாளனுக்கு முன் வைக்கப்படவேண்டும். இடையீடுகளான சோக இசை, மெதுவாக காட்சிகளை நகர்த்துதல் போன்றவை தேவையில்லை. கடும் எரிச்சலைத் தரக்கூடியவையாக இருக்கின்றன இந்த இடையீடுகள். இதெல்லாம் தொலைக்காட்சி நாடகம், நாடகீயமான சினிமா போன்றவற்றிற்குத் தான் தேவை. உண்மையை மட்டுமே ஆவணம் செய்யும் ஆவணப்படதிற்குத் தேவையில்லை. வேண்டுமெனில் அந்த சமூகத்தினரின் பாரம்பரிய பாடல்கள் போன்றவற்றை பின்னணி இசையாக பயன்படுத்தலாம். அல்லது அந்த சூழலின் இயல்பான சப்தமே போதுமானது. இயக்குனர்கள் ‘இத ஸ்லொவ் மோசன்ல காட்டுவோம். இங்க வயலின் ம்யூசிக் வைப்போம். அப்போதுதான் தாக்கம் ஏற்படுத்தும்’, என்று பார்வையாளர்களை எடைபோட்டுவிடுகிறார். உண்மையில் இவை இரண்டும் இல்லாமலேயே ஒரு பிரச்சினையைப் பேசும் ஆவணப்படம் அதற்குரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். இதனை சினிமாவின் தாக்கமாகத்தான் பார்க்கமுடிக்றது. அனைத்திலும் நமக்கு மசாலா தேவைப்பட ஆரம்பிதுவிட்டதன் நிலை. ஆனானப்பட்ட பிபிசி ஆவணப்படமே ஹன்ஸ் ஜிம்மரைக் கொண்டுள்ளதே J

இரண்டாவது படம் ‘டாக்டர்.ஷூ மேக்கர்’. வடசென்னை. அங்குள்ள ஒவ்வொரு யுவனுக்கும் கால்பந்து விருப்பமான விளையாட்டு. அவர்கள் உதிரத்தில் ஊறிய விளையாட்டு. அப்பகுதியில் மிகக்குறைந்த விலைக்கு கால்பந்து விளையாடுபவர்களுக்கு பூட் தைத்துக் கொடுக்கும் இம்மானுவேல் என்பவரைப் பற்றிப் பேசுகிறது இந்தப்படம். அவர் ஏன் ஷூ தைக்கத் தொடங்கினார் எனத்தொடங்கி அவரைப்பற்றி அப்பகுதியைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இம்மானுவேலின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் அவரைக் குறித்து சிலாகிப்பதும், இம்மானுவேலின் அன்றாட வாழ்க்கையும் காட்டப்படுகிறது.

 1. சமீபத்தில் வெளியான கிரிகெட் வீரர் தோணி குறித்தான திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது இப்படம். குறைகள் என்பதைப் பேசவே பேசாது.
 2. இதனை ஒரு நபரை ஆதாரிக்கும் ஒரு ரசிகனின் ‘fan made video’வாகத்தான் பார்க்க முடிகிறது.
 3. மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
 4. ஆவணப்படத்தின் முடிவானது சரியானதாக அமையவில்லை.

இரண்டும் அதனதன் உள்ளடக்கத்தில் முழுமையாக இருந்தாலும் ஒரு முழுமுற்றான ஆவணப்படம் என்ற நிலையினை எட்டவேயில்லை என்பதே எனது துணிபு. மேலும் ஆவணப்படம் என்றால் எப்படியிருக்கவேண்டும் என்ற புரிதல் சிறிதும் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்களாகவே இரண்டினையும் பார்க்கமுடிகிறது. Director biased, unbalanced, one-sided, docudrama என்றே இந்தப்படங்களை நான் வகைப்படுத்துவேன். இந்த வருடத்தில் மழை இல்லாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் இலட்சக்கணக்கான பயிர்கள் நாசமடைந்துள்ளன. நான் ஒரு கேமாரவினை எடுத்துக்கொண்டு சென்று அவர்களின் கண்ணீர் பேட்டிகளை எடுத்துக்கொண்டு, அவர்கள் வறண்ட நிலத்தில் சோகமாக அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்ப்பது போல சில காட்சிகளை எடுத்துக்கொண்டும் இறுதியாக அதனை ஸ்லொவ் மோசனில் வயலின் இசையோடு ‘மழையின் மரணம்’ என்றொரு ஆவணப்படமாக எடுத்தால் அதன் நிலையை யோசித்துப்பாருங்கள். அதுதான் இங்கு நடக்கிறது.

சமீபத்தில் பார்த்த மோசமான ஆவணப்படங்களில் ஒன்று இந்தியாவின் மகள். நிர்பயாவைத் தெய்வமாக்கியும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை வில்லன்களாக்கியும் வணிகத் திரைப்படங்கள் தோற்கும் விதத்தில் எடுக்கப்பட்ட படமிது. இதில் நிர்பயாவிற்கு அநீதி நிகழ்த்தப்பட்ட்டது உண்மைதான். தண்டிக்கப்படவேண்டியதுதான். நான் அதனைச் சொல்லவில்லை. என்ஏ விமர்சனம், ஏன் குற்றமிழைத்தவர்களின் தரப்பினை நன்றாக ஆராயவில்லை? என்பதே. அவர்கள் பிறப்பு, வளர்ப்பு, வளர்ந்த சூழல் அனைத்தையும் விசாரித்திருக்க வேண்டும். இது மிகச்சிறந்த ஆவணமாக மாறியிருக்கும். அவர்கள் செய்தது மிகப்பெரிய குற்றம் தான். அவர்களை வில்லன்காளாகச் சித்தரிப்பதில் என்ன பயன்? சமூகத்திற்கு என்ன சொல்ல முடியும் இதில்? இதனை ஒழுங்காக விசாரித்து பதிவு செய்திருந்தால் பல விசயங்களுக்கு உதவியிருக்குமே!

bus-174

உதாரணம் BUS 174 என்ற பிரேசிலிய ஆவணப்படம். பிரேசிலின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்கள் காண்பிக்கப்படுகிறது. நகரின் அமைப்பு விளக்கப்படுகிறது. சட்டென கீழிறங்கும் கேமரா அங்குள்ள சிறுவர்களைக் காட்டுகிறது. அவர்கள் தான் street kids. பல்வேறு காரணங்களால் குடும்பத்தை இழந்து வீதி அடைந்தவர்கள். சிக்னல்களில் பிச்சை எடுப்பது, பொருட்கள் விற்பது, பொடி வேலைகள் செய்வது என்பது இவர்கள் வாழ்க்கை. இவர்களில் ஒருவன் தான் ஒரு பரபரப்பான காலையில் நகரின் பிராதன சாலை ஒன்றில் ஒரு சில பயணிகளுடன் ஒரு பேருந்தினை கையில் துப்பாக்கியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறான்., எனத் தொடங்குகிறது ஆவணப்படம். அவன் பிறந்து, வளர்ந்த இடங்கள், அவனது குடும்பத்தார், அவனது விடுதிக்காப்பாளர் ஆகியோர் அவன் குறித்துப் பேசுகின்றனர். அதே சமயம் பேருந்திலிருந்து அவனால் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்ப்டிருந்தவர்களும் அவனைக் குறித்து பேட்டி தருகின்றனர்.அப்போது பேருந்திலிருந்த ஒவ்வொரு பயணிகளின் தரப்பும் பதிவு செய்யப்படுகிறது. அங்கு குழுமியிருந்த ராணுவம், மீடியா என அனைவரின் தரப்பும் பதிவு செய்யப்படுகிறது. இறுதியாக அவன் போலிசாரால் சுடப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்கப்படுகின்றனர். அவன் அந்த செயலில் எட்டுபடக் காரணம் என்ன? போலீசார் அவனைச் சுட்டது சரியா? அவனது செயலிற்கு யாரைக் குற்றம் சொல்ல? அவனையேவா? அல்லது அவனை இப்படி செய்யத்தூண்டிய இச்சமூகதினையா? என பல கேள்விகளையும் பதில்களையும் தந்துவிட்டுச் செல்கிறது இந்த பக்க சார்பற்ற ஆவணப்படம். இப்படித்தான் ‘ஒரு சமூகப்பிரச்சினைக் குறித்துப் பேசும்போதும் இரு தரப்பும் சமமாக பாவிக்கப்பட்டு இரு தரப்பினரின் கருத்துக்களும் முன்வைக்கப்படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. மேலும் என் பார்வையில் ஆவணப்படம் என்பது என்ன என்பதையும், நான் பார்த்த இரண்டு ஆவணப்படங்களின் குறைகளையும் முடிந்தவரையில் சுட்டிக் காட்டியிருக்கிறேன் என நம்புகிறேன்.

பா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படங்களின் தனித்தன்மை என்ன?

சாரு

1

சாரு என் மனதிற்கு நெருக்கமான நபர். பல வருடங்களாக அவரை வாசித்து வருகிறேன். ஆனால் சாருவை இனி வாசிப்பேனா என்பது சந்தேகமாக இருக்கிறது. அவரது உரைநடை சலிப்பினையே தருகிறது. ஒரு திரைப்படத்தினை அறிமுகப்படுத்துவதோ ஒரு நாவலினை அறிமுகப்படுத்துவதோ படு சாதாரணமாக முழுக்கதையினையும் கூறி தான் அறிமுகம் செய்கிறார். இதில் ஒரு சுவாரசியமுமே இல்லை. இதனை எவரும் செய்யலாம். மேலும் முன்பைப் போல அவர் வாசிப்பதில்லை என்று எண்ணுகிறேன். ஒரு வகையில் அவரைக் கடந்துவிட்டவனாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன். ஆனால் இன்னமும், எப்போதும் சாருவின் தரப்பினை எப்போதும் கேட்க விழைவேன். ஏற்பது மறுப்பது இராண்டாவது வேலை. ஆனால் அவரது தரப்பினை அறிய முயலுவேன்.

ஒரு காலத்தில் இணையத்தில் சாரு கலக்கினார் என்பார்கள். அவரது சில கட்டுரைத்தொகுப்புகள் வாசித்ததன் வாயிலாக பின்னர் அறிந்துகொண்டேன்.  ஆனால் சமீப காலமாக அவரது இணையத்தை என்னால் படிக்கவே இயலவில்லை. சரி பழைய பதிவுகளைப்படிக்கலாம் என்று நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவுகளை எடுத்து வாசித்தேன். கடும் சோர்வினைத் தந்தது அவரது பத்திகள். ஒரே ஆறுதல் அவ்வப்போது அவர் பகிர்ந்திருக்கும் வேற்றுமொழி இசைகள் தான்.

சாருவை இங்கு நான் குறைகூறவில்லை. இவ்வகைப்பதிவுகளில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வளவுதான்.

முழுக்க முழுக்க அவரது மன உளைச்சல் குறித்த பதிவுகள், திரைப்படங்கள் மீதான கடுமையான விமர்சனங்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் மீதான அதிருப்திகள், கண்டனங்கள், தனது வறுமை, விளக்கங்கள், தன் தரப்பு பதில்கள் ஆகியவையே அதிகமாகக் கிடைக்கின்றன. தனது நண்பர்களின் எழுத்துக்களைப் பாராட்டியும் எழுதியிருக்கிறார். உண்மையில் இதுதான் சாரு. அவர் எப்படிப்பட்டவரோ அப்படித்தானே அவரது பதிவுகளும் இருக்கும். இசையில் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார் போலும். தொடர்ந்து பல பாடல்களை அறிமுகம் செய்திருக்கிறார்.

புத்தக அறிமுகம், திரைப்பட அறிமுகம் ஆகியவை மிகக் குறைவு. இல்லவே இல்லை எனலாம். ஒரு எழுத்தாளன் அவனுடைய பக்கத்தில் என்னவேண்டுமானாலும் எழுத அவனுக்கு முழு உரிமை இருக்கிறது. ‘நீ இதைதான் எழுதவேண்டும்’ என்று நான் அவனை நிர்பந்திக்க இயலாது. ஆனால் இங்கு வாசக எதிர்பார்ப்பு என்று ஒன்று இருக்கிறதே. சதா சர்வகாலமும் புலம்பிக்கொண்டிருந்தால் அதனை ஒரு வாசகன் எப்படிப் படிப்பான். பொதுமைப்படுத்தாமல் நேரடியாக சொல்கிறேன். எனக்கு இருக்கும் பிரச்சினையில் நான் அதனைப் படிக்கும்பொழுது ஒருவகையான எரிச்சலே ஏற்படும். சமயங்களில் சாரு மேல் பரிதாபமே ஏற்படும். இந்த மனநிலையை நான் வெறுக்கிறேன். மேலும் அநியாயத்திற்குப் பதிவுகளை romanticize செய்கிறார். இவர் எப்படி ஜெமோவின் ‘அறம்’ கதைகளை விமர்சித்தாரோ அதே தியரியை வைத்து இவரது பதிவுகளை விமர்சிக்கலாம். கழிவிரக்கம் கோரும் எழுத்துக்கள் தான் முக்கால்வாசி காணக்கிடைக்கிறது இவரது தளத்தில்.

12291943_976977415706554_2285051929085351623_o

சாரு எனது ராஸலீலா குறித்த குறிப்பினை தனது தளத்தில் பகிர்ந்தது மகிழ்ச்சி தான். அவர் அதனைப்படிக்கவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. அவருக்கு அனுப்பிய குறிப்பில் ‘யாரும் படிக்காத என் தளத்தில் எழுதியிருக்கிறேன்’ என்று அனுப்பியிருந்தேன். அதனால்தான் எனது தளத்தினை அங்கு பகிர்ந்திருக்கிறார். அதற்காக அவர்மேல் விமர்சனம் வைக்காமல் இருப்பது சரியல்ல. எனவே தான் இந்தப்பதிவு.

2

சாரு சமீபகாலமாக இளம் / அதிகம் கவனம் பெறாத எழுத்துக்களை அறிமுகம் செய்து வருகிறார். பல எழுத்தாளர்கள் செய்யாத அற்புதமான பணியிது. தங்கள் சமகால எழுத்தாளர்களைப் படிக்கவே யாரும் விரும்புவதில்லை, இதில் அறிமுகம் வேறா!! ஆனால் சாரு பா.வெங்கடேசன் (தாண்டவராயன் கதை, ராஜன் மகள், பாகிரதியின் மதியம்) மற்றும் பாலசுப்ரமணியம் பொன்ராஜ் (துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை) போன்றோர் குறித்து மேடையில் பேசுகிறார். தனது தளத்தில் பேசுகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் அவர் பிரபு காளிதாஸ் போன்ற படு சாதாரண நபர்களையும் உயரே தூக்குகிறார் என்பது தான் வேதனையளிக்கிறது. இந்த ஒரு விசயத்திற்காகவே அவரைப் புறக்கணிக்கலாம். அந்த அளவிற்குச் செல்கிறார். பிரபு காளிதாஸ் போன்றவர்களிடம் உந்துதல் பெரும் இளம் வாசகனின் நிலையை யோசித்துப்பாருங்கள். அவனும் கடா முடா என்று உருட்ட ஆரம்பிப்பான். படு சாதரணமாக ஒன்றினைக் கூட மிகைப்படுதிக்கொள்வான். சமூக வலைதளங்களில் ‘noise pollution’ ஆக வலம்வருவான். பிரபலாமவர்களைத் திட்டுவான். ஒரு மன நோயாளி போன்று செயல்படுவான். நினைத்துபார்க்கவே பயமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த இளம் புகைப்படக்காரர் ஒருவர் பி.காவிடம் உந்துதல் பெற்று கண்ணா பின்னாவென்று உளற ஆரம்பித்திருக்கிறார்.

பிரபு காளிதாஸ் போன்றோர்களின் வாசிப்பு, திரைப்படம் தொடர்பான குறிப்புகளில் இளம் வாசகன் நிறைய அறிமுகங்களைப் பெறக்கூடும். ஆனால் அவன் தெளிவடைந்து அவரைக்கடந்து செல்ல முயலவேண்டும். சூடுள்ள வாசகன் நிச்சயம் அவரைப் புறக்கணிப்பான் என்றே நம்புகிறேன். பி.காவின் பார்வைகள் தட்டையானதாக இருக்கின்றன. படு சராசரியான நபராகவே எனக்குத் தெரிகிறார். அவரது attitude, கருத்து வன்முறை, அவரது மொழி, தொனி, வலிந்து போட்டுக்கொண்ட கலக்காகக்காரன் வேஷம்  இவையெல்லாம் இளம் வாசகர்களை இளைஞர்களைக் கவர்ந்துவிடும். அனைவரும் ஒரு பிரபலத்தைப் பூஜிக்கையில் ஒருவன் மட்டும் அந்தப் பிரபலத்தை விமர்சித்தால் நாம் யாரைக் கவனிப்போம்? பல குணாதிசயங்களை சாருவிடமிருந்து எடுத்துக்கொண்ட பி.கா ஒரு பண்படாத விடலைத்தனம் குறையாத மேம்போக்கான நபர் என்பதே என் இறுதியான முடிவு. அவரது ‘கருத்து வன்முறை’ தரப்பினைக் கேட்கும் ஆர்வமும் எனக்கு இல்லை.

பிகாவை எப்படி சாரு விரும்பினார்.? சரி அது அவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒரு வாசகனாக எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. இதனை அவரிடம் சொன்னால் அவர் ‘ஒரு எழுத்தாளனுக்கு யாரைவேண்டுமானாலும் பிடிக்கலாம். அசோகமித்திரனுக்கு கல்கியைத் தான் பிடிக்கும்’… போன்ற வசனத்தை திருப்பிக்கூறுவார். பிரபு காளிதாஸ் மீதான தனிநபர் தாக்குதல் இது அல்ல என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிகா சிறந்த புகைப்படக்காரர் என்பதற்கு இங்கு நான் பயன்படுத்தியிருக்கும் அவர் எடுத்த சாருவின்  புகைப்படங்களே  போதும்.

கார்ல் மார்க்சும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால் தட்டையான ஆசாமி அல்ல. அவரது தரப்பு கூர்மையாக இருக்கிறது. ஆனால் தொனி தான் பிரச்சினை. நவீன முகநூல் சவடால் தொனி. சாரு  ஸ்கூல் ஆப் தாட் தான். எனது நண்பர் இவரை குட்டி ஜெமோ என்றது அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு சாம் நாதனின் பதிவுகள் மிகவும் பிடித்தவை. நிதானமாக அழகாக எழுதக்கூடியவர்.

3

சாருவைப்பற்றி மிக முக்கியமான விசயம் ஒன்றினைக்கூர மறந்துவிட்டேன். சாருவின் மொழிபெயர்ப்பு: அனைவராலும் மொழிபெயர்க்க முடியாது. அதற்கென மெனக்கெட்டு உட்கார்ந்து கடுமையாக உழைத்து செறிவாக தமிழ்ப்படுத்துவது சாதாரண காரியமல்ல. சாரு ஒரு காலத்தில் அதனைச் செய்திருக்கிறார். மற்ற மொழிபெயர்ப்பாளர்களைப் போல வரிக்கு வரி என்றில்லாமல் மொழிபெயர்ப்பு செய்வதே சாருவின் பாணி. இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் கடுமையாக வாசகர்களுக்காக உழைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடத்தான். ஒருவரை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது என்பதே எனது தியரி.

5

சமூக வலைதமான facebookஇல் எழுதுபவர்களில் என் மனம் கவர்ந்தவர் அகில் குமார் மட்டும்தான். இவர் எழுதிய சிறுகதைகளைப் படித்தேன். எனக்கு பிடிக்கவில்லை. அவரது கதைகள் குறித்த என் கடுமையான விமர்சனத்தைக் கூறினேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு பதிலளித்தார். அவர் என்ன எதிர்க்கருத்து கூறினாலும் எனக்கு அவரது கதைகளில் சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அகிலை நவீன சிந்தனையாளராகப் பார்க்கிறேன். புதிதாகச் சிந்திப்பவர்களே நம் சமூகத்திற்குத் தேவை. அவர் எதிர்காலத்தில் சமஸ் போன்று ஒரு நபராக வர வாய்ப்பு இருக்கிறது. சமயங்களில் தமிழ் பிராபவின் பதிவுகளும் பிடிக்கும். ஆனால் அவரது பதிவுகள் ‘உணர்ச்சி சார்ந்த’ பதிவுகளாக இருக்கின்றன. ஒரு வகையான victim play பதிவுகள். ஆனால் புறக்கணிக்க முடியாத நபர். இந்த இருவரிடமும் ஜெயமோகனின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

போகன் சங்கர், சுரேஷ் கண்ணன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ராஜன் குறை கிருஷ்ணன், பாலைவன லாந்தர், ரியாஸ் குரானா, சக்திவேல், சித்தார்த் கந்தசாமி, கோணங்கள் ஆனந்த், கோகுல் பிரசாத்  ஆகியோரின் பதிவுகளை தவறாமல் வாசித்துவருகிறேன். வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ராஜன் குறை, எம்.டி.எம், யமுனா ராஜேந்திரன் ஆகியோரின் கருத்துக்கள் புறக்கணிக்க முடியாதவை. ஒரு தீவிர இலக்கிய வாசகனான நான் ஆராய்ச்சி மாணவனாகவும் இருப்பதால் எனக்கு இவருடைய பார்வைகள் பிடிக்கின்றனவோ என்னவோ…

.

நன்றி – முகப்பு படம் : பிரபு காளிதாஸ்

முதலாளியின் மனதிற்குகந்ததைப் பேசும் மத்திய வர்க்க ஜாலக்காரர்கள் – விக்ரமாதித்யன்

1

மேலிடத்தில் சென்று ஒருவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும், நகைச்சுவையாகப் பேசுவதை மிகைப்படுத்தியும் ‘போட்டுக்கொடுப்பவர்கள்’ குறைந்தபட்சம் தான் போட்டுக்கொடுத்ததை இரகசியமாக வைக்க வேண்டாமா. இதெல்லாம் எனக்குத் தெரியவரும்போது மன உளைச்சல் அதிகமாகிறது. அமைப்பில் ஏற்கனவே அனைவரும் அநியாயத்திற்கு judgementalகள். ஒருவரைப் பற்றி அறியாமலேயே தன்னிடம் வந்து சொல்லப்படும் கருத்தினை வைத்து சம்பந்தப்பட்ட நபரைப் பற்றிய ஒரு சித்திரத்தை வைத்துக்கொள்வார்கள். ஒவ்வொருவரிடமும் சென்று அவன் இப்படி, அவன் அந்த மாதிரி.. தங்களது கண்டுபிடிப்பினைச் சொல்வார்கள். அதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சினை இல்லை. நேராகப் பழகி ஒருவரைப் பற்றி அறியாமல் தன் முன்னால் சிதறும் பொருக்குகளை வைத்து ஒரு பிம்பத்தைக் கற்பனை செய்துகொள்ளும் மனிதர்ளை நான் விரும்புவதில்லை. அவர்களின் தரப்பினை அறியவும் எனக்கு ஆர்வமில்லை. அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும்.

இந்த ‘போட்டுக்கொடுத்தே’ உயிர்வாழும் ஜீவன்கள் கரப்பான்களை விட வலிமையானவை. அணு ஆயுதப்போர் நிகழ்ந்து உலகமே மண்ணாகினாலும் உயிர்வாழ்வார்கள். ‘முதலாளியின் மனதிற்கு உகந்ததைப் பேசும் மத்தியவர்க்க ஜாலக்காரர்கள்’ என்றாரே விக்ரமாதித்யன். இவர்களே தான். எவ்வளவு அற்புதமான வரி. தன அனுபவத்திலிருந்து அவர் எழுதியதை என் அனுபவத்தில் பொருத்திப் பார்க்கும்பொழுது அந்த வரிகள்ஒ ரு சாஸ்வத நிலையை அடைகின்றன.

சரி இனி ‘போட்டுக்கொடுப்பவர்களைப்பற்றி’: அமைப்பில் பிழைத்திருக்க இவர்கள் கையாளும் வழிமுறை இதுதான். எனக்கு ஆச்சரியமெல்லாம் ஏன் இப்படி போட்டுக்கொடுப்பவர்களின் பேச்சை அப்படியே நம்புகிறார்கள்? இதனைக்கூடவா மேலிடத்தால் பிரித்தறிய முடியாது. மனிதர்கள் தான் எத்தனை விசித்திரமானவர்கள்.

சமமாக ஒன்றை அணுகும் பழக்கம் என்பதே அருகிவருகிறது. செய்திப்பத்திரிகையிலிருந்து, சினிமா, இலக்கியம் என் அனைத்திலும் ஒரு ஒரு பக்க சார்பு தான். குழு மனப்பான்மைதான்.  தெளிவாக இருதரப்பினைக் கேட்டு ஒரு முடிவுக்கு வர இங்கு யாரும் தயாராக இல்லை. இதனை எல்லாம் நாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம் எதிர்காலத்தில் இந்தத் தவறினை செய்யாமல் இருத்தலே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இரு தரப்பினையும் ஆராய வேண்டும் & போட்டுக்கொடுப்பது தவறு என்பதனையும் நம்மிடம் வந்து அதனை நிகழ்த்து ஆசாமிக்குப் புரியவைக்கவேண்டும்.

இன்னுமொன்று. ‘ஒருவரைப் பற்றி போட்டுக்கொடுத்துவிட்டே அவருடன் பல்லிளித்துப் பேசாமலாவது இருங்கள். நீங்கள் போட்டுக்கொடுப்பது வெளியே தெரியாமலிருக்கவும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்’. இந்த நவீன உலகில் குறைந்தபட்ச நேர்மையாகக் கூட யாரும் இருக்க முயற்சி செய்வதில்லை. இந்தப் போட்டுக்கொடுத்தல், அடுத்தவர் தோல்வியில் மகிழ்ச்சியடைதல் (பொறாமை அல்ல, பொறாமை ஒரு பிரச்சினை இல்லை. அது யாரிடம் தான் இல்லாமல் இருக்கிறது) வஞ்சகப் புத்தி போன்ற சிறப்புக்கூறுகள் இருந்தால் மட்டுமே ‘நன்றாக வாழ’ முடியும் என்று என்றோ உணர்ந்துகொண்டேன். துரதிஷ்டவசமாக நமக்கு அதெல்லாம் வராது, தெரியவும் தெரியாதே. எனவே அமைதியாக இருப்போம்.

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரது நகைசுவைகள் அனைத்துமே நுட்பமான சமூக சமூகப்பிரசினையினை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். பார்பதற்குச் சாதாரணமாகத் தெரியும் இவரது நகைச்சுவைகள் ஆழமான விசயங்களைக் கொண்டவை. தனியாக ஒரு முனைவர்பட்ட ஆய்வே இவரைக்குறித்து செய்யப்பட வேண்டும்.

நீண்ட நாள் திருமணமாகாமல் இருக்கும் வடிவேலுவிற்கு இறுதியில் திருமணம் நிச்சயமாகும். மண்டபத்தில் நடக்கும் காட்சி. திருமணத்திற்கு ஒரு பைசா கூட வரதட்சணை இன்றி ஒப்புக்கொண்டிருப்பார் வடிவேலு. தாலி கட்டுவதற்கு முன்பாக தனக்குத் தாகமாக இருப்பதாகவும் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டுமெனவும் கேட்பார். இறுதியில் அது எப்படிச்சென்று முடியும் என்பது உங்களுக்கே தெரியும்.

இதுதான் அமைப்புகளில் நடந்துவருகிறது. ஒரு அமைப்பில் நீங்கள் நேர்மையாகவோ இருந்தால் இதுபோன்றவை நிகழ்ந்துகொண்டே தானிருக்கும். இதற்குத் தீர்வு என்பதே கிடையாது. என்ன செய்ய புத்தகங்களிலும், நண்பர்களின் பிடியிலும் விழுந்துதான் மீள வேண்டியிருக்கிறது. அமைதியாக நம் பணிகளை முடித்துவிட்டு ஒதுங்க வேண்டுமென சங்கல்பம் செய்துகொள்கிறேன்  🙂

ஏன் நமக்குச் சப்தம் இவ்வளவு பிடிக்கிறது?

தொலைபேசி பயன்பாடு அதிகரித்ததை ஒட்டி மற்றொரு விடயமும் அதே வேகத்தில் அதிகரித்துள்ளதை கவனிக்க முடிகிறது. அதாவது தொலைபேசியில் பாடல் கேட்பது. பேருந்துகளில், பணிபுரியும் இடங்களில், மொட்டை மாடிகளில் என எங்கு நோக்கினும் யாராவதொருவர் தனது தொலைபேசியில் பாடல்களை அதன் முழு ஒலி அளவில் கூட்டி அலறவிட்டபடி மெய் மறந்திருக்கிறார்கள். பலர் தாங்கள் இருக்கும் சூழலை பொருட்படுத்துவதே இல்லை. கிராமபோன்கள் இருந்த காலகட்டத்தில் இசையானது மேல்வர்க்கத்து ஆட்களுக்கான நுகர்வுப்பொருளாக பாவிக்கப்பட்டு வந்தது. கிராமபோன் இசைத்தட்டுகள் விலையும் அதிகமாக இருந்துள்ளது. கிராமபோன் இசை என்பது நடுத்தர/அடித்தட்டு மக்களுக்கு சாத்தியமே இல்லாத ஒன்றாக அன்று இருந்துள்ளது. கிராமபோன்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்போது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் ஒரே பொழுதுபோக்குக் கருவி வானொலி மட்டும் தான். இன்றும் வானொலியே தொடர்கிறது. இலவச தொலைக்காட்சி வந்ததும் இந்நிலை மாறியுள்ளது.

வானொலிக்குப் பெரிதாக செலவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒருமுறை பணம் செலுத்தி வானொலிப்பெட்டி வாங்கிவிட்டால் போதுமானது. அது தனது உயிர் உள்ளவரைக்கும் பாடிக்கொண்டே இருக்கும். இப்போது தொலைபேசியில் பாடல் கேட்பது இன்னும் கூட இலகுவாகிவிட்டது. தொலைபேசியிலும் வானொலி கேட்கலாம் என்றாலும் அனைத்து இடங்களிலும் கேட்பது சாத்தியமில்லை (வானொலி நிலையங்கள் இல்லாத ஊர்களும் உண்டல்லவா?) எனவே ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களை நம்மால் கேட்க முடியும்.

அவ்வகையில் அனைவருக்குமான எளிதான நுகர்வுப்பொருள் ஆகிவிட்ட கைபேசி மிகப்பெரிய வேறுபாட்டினைக் களைந்துள்ளது எனலாம். அதாவது உலகின், முதல் பணக்காரன் கேட்க முடிந்த இசையை உலகின் பரம ஏழையான ஒருவனும் கைபேசி இருந்தால் கேட்டுவிடலாம். இந்தச் சமன்பாட்டினை நிகழ்த்தியமைக்காக இந்த கண்டுபிடிப்பை நாம் கொண்டாடியாக வேண்டும்.

சரி, பேச வந்தது பேருந்தில் பாடல் கேட்பவர்களைப் பற்றி. யாருமே சூழல் குறித்தான பிரக்ஞை சிறிதுமின்றி பாடல்களை அலறவிடுகிரார்கள். ஒருவேளை ‘தான் இப்படியெல்லாம் இரசனைக்காரனாக’ இருப்பதை சம்பந்தப்பட்ட நபர் வெளிக்காட்டிக் கொள்கிறாரோ! ஒரே சமயத்தில் பேருந்தில் நான்கைந்து பேர் தங்கள் தொலைபேசிகளில் பாடல்களை அலறவிடும் வைபவமும் நடக்கிறது. அதே நேரத்தில் பேருந்தில் இருக்கும் வானொலியிலும் பாடல் பாடிக்கொண்டிருந்தால் நிலைமை எப்படியிருக்கும்?   பேருந்தில் பாடல் கேட்கும் மனநிலையில் இருப்பவர்களுக்கே இது  மிகப்பெரிய தொந்தரவினை தரக்கூடியதல்லவா இது. அதே சமயம் பேருந்திலுள்ள பயணிகளில் பாடல் கேட்கும் மனநிலையில் இல்லாத (எந்தவொரு பயணியின் மனநிலை குறித்தும் நமக்கு யாதொன்றும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்) நபர்கள் குறித்தும் யோசிக்கவேண்டியதிருக்கிறது. பெரும்பாலும் புதிதாக கைபேசி வாங்கிய மனிதர்களும், கிராமத்து மனிதர்களும், அடுத்தவர்களின் சங்கடத்தைப் பொருட்படுத்தாத மனிதர்களும் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாம் எடுத்துக்கூறினாலும் சிலர் அதனைப் பொருட்படுத்துவதில்லை. இதனை மிகப்பெரிய வன்முறையாகவே பார்க்கிறேன். பல நேரங்களில் ‘நான் வேணா என்னோட ஹெட் போன தரட்டுமா?’ என்று கேட்டிருக்கிறேன்.

noise
http://cpcbenvis.nic.in/noisepollution/noise.png

“பொது இடங்களில் கைபேசியில் பாடல்களை அலறவிடாதீர்கள். உங்கள் ஹெட் போன் அல்லது ஹெட் செட் கொண்டு நீங்கள் மட்டும் அனுபவியுங்கள். நீங்களும் அமைதியாக வாழ்ந்து மற்றவர்களையும் அமைதியாக வாழவிடுங்கள்” இப்படியொரு சமூக விழிப்புணர்வு விளம்பரம் எடுக்கலாம் என்று ஒரு யோசனை என்னிடமிருக்கிறது. “KINDLY USE YOUR HEADPHONE/ EAR PHONE, REDUCE NOISE POLLUTION. LIVE PEACEFULLY. AND LET OTHERS LIVE PEACEFULLY” சற்று மிகையாக இருப்பினும் இது அவசியமென்று தோன்றுகிறது.

அடுத்து வீடுகளில் ஹோம் தியேட்டர் வைத்துக் கொடூரமாக மொத்த வீதியையுமே அதிர்ச்சியடைய வைக்கும் நபர்கள். இவர்களும் மேற்சொன்ன ‘’புதிதாக ஹோம் தியேட்டர் வாங்கிய மனிதர்களும், கிராமத்து மனிதர்களும், அடுத்தவர்களின் சங்கடத்தைப் பொருட்படுத்தாத மனிதர்களும் தான்’’ இவர்களை கேட்க வேண்டாம் என நான் தடுக்கவில்லை. மற்றவர்களுக்கு தொல்லை தராமல் ஒலி வெளியேறாத அளவிற்கு அறையினை தயார்படுத்திவிட்டு பாடல்களை முழுச் சப்தத்துடன் கேட்டுக் களிப்படையலாம்.  .

500048-noise-pollution-dna
http://static.dnaindia.com/sites/default/files/styles/half/public/2016/09/10/500048-noise-pollution-dna.jpg?itok=cJFsIPM1

சபதம் ஏன் நமக்கு அவ்வளவு பிடிக்கிறது? இதனை உளவியல் ரீதியாகவும் அணுகவேண்டிய தேவையுள்ளது. (இது குறித்து ஆழமான வாசிப்பு இருந்தால் இதனை ஒரு கட்டுரையாக விரித்தெடுக்கலாம் என்று தோன்றுகிறது)

பிறக்கும் குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கித் தருவது.ஒருவகையில் முதல்நிலை எனலாம்.  அது எழுப்பும் சப்தத்தினை குழந்தை ஆச்சரியமாகப் பார்க்கிறது. குழந்தை முன்னிலையில் அதன் பெற்றோர் சப்தமாகச் சண்டையிடுவது, தந்தை தொலைக்கட்சியில் சப்தமாக நிகழ்சிகளைப் பார்ப்பது, என சொல்லிக்கொண்டே போகலாம். தனக்கு ஏதாவது தேவை என்றால் ‘சப்தமாக பெருங்குரலெடுத்து’ அழ வேண்டும் என்பதை பிறந்து சில மாதங்களிலேயே ஒரு குழந்தை கண்டுவிடுகிறது.

நம் சமூகமே சப்தத்திற்குள் தான் மூழ்கியிருக்கிறது. எனக்கு ஹலோ எப் எம் பிடிக்காததற்கு அதன் சப்தமும் ஒரு காரணம். குறிப்பாக சொல்லி அடி. அது போன்ற ஒரு வன்முறையான நிகழ்ச்சியினை நான் கேட்டதே இல்லை. நம் இந்திய ஆடுகளங்களில் போட்டி நடக்கும் சமயம் அரங்கத்தில் குழுமியிருக்கும் ரசிகர்கள் எழுப்பும் சப்தத்தினை வேறு எந்த நாட்டிலாவது கேட்க இயலுமா?

அரசியல் பிரமுகர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தொலைகாட்சி விவாதங்களில் பங்குபெற்று எச்சில் தெறிக்க தலைமுடி பறக்க தான் சார்ந்த அமைப்பை தூக்கி நிறுவ முயற்சிக்கும் பிரபலங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாடம் நடத்தும் வாத்தியார், சாலை ட்ராபிக் ஹாரன் என அனைவரும் அனைத்தும் / உயிரினை அக்றிணை பொருட்களும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். அது சரி நாம் தூங்கி எழுவதற்கே கொடூர சப்தம் தானே தேவைப்படுகிறது.

noise-pollution-1-638
http://image.slidesharecdn.com/noisepollution-140110115511-phpapp02/95/noise-pollution-1-638.jpg?cb=1389355651

குறிப்பாக தமிழ் வணிகப்படங்கள். இயக்குனர் ஹரி, சிறுத்தை சிவா, பேரரசு, தரணி போன்றவர்கள். இசை அமைப்பாளர்களில் திருவாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள். நடிகர் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் ஆகியோர் (இயல்பாகவே சப்தமின்றி சலனமாக வந்து மகிழ்வித்த சார்லி சாப்ளின் இங்கு நினைவுக்கு வருகிறார்)

ஊரில் திருவிழா என்றால் மைக் செட் வைத்து மிகப்பெரும் ஒலி மாசுபாட்டையும் வன்முறையினையும் நிகழ்த்துவது வாடிக்கையாகிவிட்டது. ஊர் முழுக்க ஹாரனைக் கட்டிவிடுவார்கள். இதில் மதப்பற்றாளர்களுக்கு இடையே நுட்பமான போட்டி வேறு நிலவுகிறது. இதனாலேயே திருவிழா சமயங்களில் ஊருக்குச் செல்ல மிகுந்த வெறுப்பாக இருக்கும். அங்கு சென்றாலும் வீட்டினருடன் இயல்பாக இருக்க முடியாது. பேசக்கூட முடியாது. காலை நான்கு மணிக்குத் தொடங்கி இரவு பத்து வரை வன்முறை நீடிக்கும். காரணம் எங்கள் வீட்டின் வாசலிலேயே ஹாரன் கட்டப்பட்டிருக்கும் என்பதுதான்.

ஏன் இந்தியச் சூழலில் சப்தம் இவ்வளவு பெரிய சக்தியாக செயல்பட்டுவருகிறது? இதன் மையப்புள்ளி எதுவாக இருக்கும் என நானும் பலவாறு யோசித்துப்பார்க்கிறேன். ஒரு முடிவுக்கு வருவது சிரமமாகவே இருக்கிறது. நான் கூட சப்தமாக பேசுபவன் தான் என்பதையும் இங்கு ஒப்புக்கொள்ளவேண்டடும்.

ஜப்பானிய கலாசாரத்தின் அமைதி நினைவுக்கு வருகிறது. ஒருவர் அமைதியாக இருக்கும் சமயங்களில் நாம் எதாவது பேசினால் அதனை மிகப்பெரும் அவமதிப்பாக எடுத்துக்கொள்வார்களாம்.

யமுனை செல்வன்

காந்திநகர் அறையில்