புனித பிம்பம்

image

இதோ நான் உடைத்த புனித பிம்பம் ஒன்று என் வீட்டு கழிவறையின் தரைகளில் பதிக்கப்பட்டுள்ளது.

தன் மேல் விழும் மலக்கட்டிகளுக்கோ சடசடத்து பொழியும் சிறுநீருக்கோ அதனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

எத்தனை பேர் இந்த பிம்பத்தினை காப்பதற்காக வாளுருவி போரிட்டிருப்பார்கள்.

எத்தனை எத்தனை குருதி மண்ணில் சிந்தி காய்ந்து உறைந்திருக்கும்.

இதன் பெருமை காக்க எத்தனை வன்மங்கள் உமிழப்பட்டிருக்கும்.

பின்பு ஒரு போதும் மலராத எத்தனையோ நட்புகள் நிரந்தரமாகக் கருகியிருக்கும்.

எத்தனை விரிசல்களை மானிட உறவுகளுக்குள் ஏற்படுத்தியிருக்கும்.

இப்பொழுதோ அது பேசா மடந்தையாகி சதாசர்வகாலமும் கால்மிதி வாங்கிவருகிறது.

என்னிடமும் ஒரு புனிதப்படுத்தப்பட்ட பிம்பமொன்று இருக்கிறது.

நான் மட்டும் பாவிக்கும் புத்தக அலமாரியின் மூலையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இதன் இருப்பு யாரும் அறியாமல் பாதுகாக்கப்படுகிறது.!
.

Advertisements

தமிழார்வம் புதுப்புனலாகப் பொங்கிய தருணம்

சில நாட்களாக ஒன்றை கவனிக்கமுடிகிறது.

எந்த ஒரு தனி நபரையோ அல்லது ஒரு செயல்பாட்டினையோ ஒருவர் வெறுக்கும் பொழுது, தான் வெறுப்பவைகளின் மீது விமர்சனம் வைக்கிறார். அவ்வாறு விமர்சனம் செய்ய நேர்கையில் இயல்பாக எதிர்தரப்பு கொண்டாடும் சங்கதிகளின் பெயர்களை ஒருவகையான நக்கல் தொனியில் வெளிப்படுத்துவது.. அதாவது எதிர்தரப்பின் சென்சிடிவான இடத்தில் ஒரு தட்டு தட்டுவது வழக்கம். அதில்லாமல் வரும் சீரிய விமர்சனங்கள் அரிதினும் அரிது. தங்களைக் கறார் பேர்வழிகளாகவும், கலா இரசங்களில் தேர்ச்சி பெற்ற இரசனை மேதையாகவும், கலகக்காரர்களாகவுமே அனைவரும் காட்டிக்கொள்ள முயல்வதன் உளவியலுக்குள்ளே நான்கைந்து முனைவர்பட்ட ஆய்வுகள் இருக்கின்றன.

சமூக வலைதளம் Hot medium. எண்ணற்ற மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது. சில பிரபல பதிவர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நுணுக்கமான impact னை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ரசினி, விசய், அசித், ஒலகசினிமா, எலக்கியம், எலக்கியவியாதிகள் அ இலக்கியவியாதிகள், அறிவுசீவிகள் போன்ற வார்த்தைகள். இன்னும் சிலர் தங்களுக்கேற்ப மொழியினை மாற்றி நெடிலுக்கு குறில், குறிலுக்கு நெடில் என சடுகுடு ஆடுகின்றனர். இதில்லாமல் சில phraseகளும் பிரபலம். உண்மையில் மொழியைத் திரித்து பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடே இல்லை. ஆனால் என்னையும் மீறி இந்த இடத்தில் மைய நீரோட்டத்தில் கலந்துவிடுகிறேன். புலனடக்கம் அவசியம்.

மற்ற எந்த மொழியிலாவது இது போன்ற பயன்பாடுகள் இருக்கின்றனவா என phonetics professorகள் தான் சொல்ல வேண்டும்.

மிகப்பெரிய ஆளுமைகளும், அல்லது தன்னை அவ்வாறு கருதிக்கொண்டு 24/7 இங்கு பணியாற்றுபவர்களும், ட்ராட்ஷ்கிய, ஸ்டாலிய, லூயிஸ் அல்தூச , உம்பர்டோ எக்கோவிய, இடாலோ கால்வினோய பார்வையில் தன் விமர்சனத்தை முன்வைக்கும் (ஒரு நாளைக்கு 400 தரம் முன்வைப்பார்)  Intellectual கள் , எழுத்தாளர்களாக இருந்தவர்களும், மூன்றாவது குறுக்குச்சந்து வடக்குப்பட்டி இராமசாமி நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல்பரிசு பெற்ற contemporary எழுத்தில் தன்னை Mario Vargos Llosa, Tarun J Tejpaul, Haruki Murakami போல் பாவித்துக் கொண்டு சதா சர்வகாலமும் facebookல் வாழும், புத்தக திருவிழாக்களுக்காக மட்டும் புத்தகமெழுதும் எழுத்தாளர்களும், மேலும் இவர்களிடம் inspire ஆகி தங்கள் பங்குக்கு களமாடும் இரசிகர்களும், வாய்ப்பு கொடுத்த இதழாசிரியர் என்ன பதிவு போட்டாலும்  லைக்ஸ் போடும் மனிதர்கள், blogpostற்காக வேடம் புனைந்து நல்லவனாக சீன் போடும் என்னிடமும் மாட்டிக்கொண்டு இந்தத் தமிழ்படும்பாடு இருக்கிறதே அப்பப்பா.

தமிழ் மொழியின் வார்த்தைப்பயன்பாட்டில் காலந்தோறும் ஒருசில காரணிகள் மாற்றத்தினை தீர்மானித்தன. இனி மாற்றத்தினை தீர்மானிக்கப்போகும் காரணியாக சமூக வலைதளங்களும் அதில் ஆயிரம் லைக்ஸ் வாங்கும் அபூர்வ ஆளுமைகளும் இருப்பார்கள் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.