மிஷெல் ஃபூக்கோவை அறிதல்

மிஷெல் ஃபூக்கோ நம் காலத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவர் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரை முழுமையாக இங்கு புறக்கணிக்க முடியாது. அவருடைய கருத்தாக்கங்கள் தமிழில் எந்த அளவிற்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அதற்கான ஒரு முயற்சியினை சென்னை பல்கலைகழகம் எடுத்திருக்கிறது. மிஷெல் ஃபூக்கோ ஆய்வு வட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பயிற்சிப்பட்டறைகள் நடத்தி வருகின்றனர். ஆய்வு மாணவர்களால் மட்டும் வாசிக்கபப்டும் ஃபூக்கோ அனைவரையும் சென்றுசேர அவரைப்பற்றி தொடர்ந்து பேசவேண்டும். அதற்கு இந்தக் கருத்தரங்கு மிக இன்றியமையாததாக இருக்குமென நினைக்கிறேன். இந்த நிகழ்வில் பேசுபவர்கள் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் சூழல் அனுகூலமாக இருந்தால் கட்டாயம் இதில் கலந்து கொள்வேன்.

மிஷெல் ஃபூக்கோவை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவரது “power” குறித்த கருத்தாக்கத்தை வைத்து ஒரு கட்டுரை எழுதிப்பார்த்தேன். இன்னும் அவரிடம் உடைக்க வேண்டிய செங்கற்கள் நிறைய இருக்கின்றன. அவர் எழுப்பிய பிரமாண்ட கட்டிடம் முன்பு ஒரு எறும்பு நான். கட்டாயம் இதில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தகவலைப் பகிர்ந்தமைக்கு திரு சமயவேல்ந அவர்களுக்கு நன்றி.

ஆர்வமிருப்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

பெரியசாமி ராஜா 9842161619
இரத்தினக்குமார் 9489378358

Advertisements

கிணற்றுத் தவளையின் வாக்குமூலங்கள் – 1

ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொண்ட பின்னரே இன்னும் நாம் எவ்வளவு கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது என்பது உரைக்கிறது

இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தொடர்பியல் கல்விப்புல ஆய்வுகள் அனைத்துமே மேற்கத்திய ஆய்வாளர்களின் கருத்தியல்களையே பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. இதனை ஒரு வருத்தமாகவும், விமர்சனமாகவும் அடிக்கடி பேராசிரியர் ரவீந்திரன் குறிப்பிட்டு வருகிறார். அவரது மொழியிலேயே சொன்னால் “இதுவரை இந்தியாவில் தொடர்பியல் கல்விப்புல ஆய்வில் ஒரு பிள்ளையார் சுழி கூட போடப்படவில்லை”.

Professor Ravindran

ஆய்வு மாணவர்களுக்கு மேற்கத்திய ஆய்வாளர்களின் வழியினை பின்பற்றுவது எளிமையான ஒன்று. பெரிதாக யோசிக்கவேண்டியதில்லை. மாற்றுப்பார்வை இருந்தால் தானே அதற்கெல்லாம் வேலை. இங்கு மாணவர்களை விமர்சித்து (என்னுடன் சேர்த்து)  பயனில்லை என்றே சொல்வேன். மேற்கத்திய சிந்தனைகள் தான் பாடப்புத்தகத்தில் இருக்கின்றன. பாடப்புத்தகத்தைத் தாண்டி துரதிஷ்டவசமாக வெளியே தேடி வாசிக்கும் ஆய்வு மாணவர்கள் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் (ஒரு கை) விரல்விட்டு எண்ணிவிடலாம். இங்கு யாரைக் குற்றம் சொல்வதென்று தெரியவில்லை.

Critical theory, critical school thoughts குறித்து கல்விப்புலத்தில் தெரிந்தும்கூட யாரும் வாய் திறப்பதில்லை. (ஒரு சிலர் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்) ஆனால் அவைதான் சமூக மாற்றத்திற்கான புதிய களங்களை திறந்துவிடும் என்பதனையோ அதைக் கற்கும் ஒரு ஆய்வு மாணவனின் சிந்தனை கூர்மையடைந்து அவனது ஆய்வு கட்டாயம் வேறு கோணத்தில் புதிய விடயங்களை வெளிப்படுத்தும் / அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதனையும் யாரும் கண்டுகொள்வதில்லை.

இப்படியிருக்கையில் critical theory மற்றும் அத்தகைய கோட்பாடுகள் குறித்து தொடர்ந்து உரையாடிவரும் பேரா.ரவீந்திரன் அவர்களை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனிப்பு என்றால் அவரது class of out of class வகுப்புகளை இணையத்தில் பார்த்தும், அவரது ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தும் வருகிறேன். எனவே சென்னை பல்கலைக்கழகமும் தொடர்பியல்துறையும் எனக்கு அணுக்கமானவைகள். அங்குள்ள மாணவர்களின் எளிதில் நட்பாகிவிடும் தன்மையும் எனக்கு பிடித்தமானவை.

அங்கு சென்று வரும்போதே உற்சாகமும் தீவிரமும் ஒட்டிக்கொள்ளும். இப்படி தீவிரம் இருக்கும் இடங்களில் இருக்கும்போதே நம்முள் இருக்கும் கனல் அணையாமல் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை. சோம்பலாக மந்தைதன்மையுடன் இருக்க நான் ஒருபோதும் விரும்புவதில்லை. கடைசியாக சென்ற வருடம் பேராசிரியர் கமலா அவர்கள் அமைப்பியல் பின் அமைப்பியல் குறித்து சென்னை பல்கலைகழக தொடர்பியல் துறையில் விரிவாக (தமிழில்) இரண்டு நாள் உரையாற்றினார்.

madras

2017, மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல்துறை ‘இலக்கமுறை தொடர்பியல் காலத்தில் தொல்காப்பியத்தைப் புரிதல்’ (Understanding Tholkaappiyam in the Age of Digital Communication) என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். “Tamil Philosophers, Gilles Deleuze and Michel Foucault Research Circle” என்று அத்துறை தொடங்கியிருக்கும் வட்டம் சார்பாக நடக்கும் முதல் நிகழ்வு இது. வரும் காலங்களில் மேற்கத்திய தத்துவவியலாளர்கள் கோட்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் தமிழக தத்துவவியலாளர்கள் தமிழில் இருக்கும் தொன்மையான கோட்பாடுகள் குறித்தும் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். வட்டத்தின் நோக்கமும் அதுவே.

நிகழ்வில் தொல்காப்பியம் குறித்து அறிமுகப்படுத்தவும் (இரண்டு நாள் அமர்வுகளில், முழுமையாக) தொடர்பியல் புலத்தில் ஆய்வு மாணவர்கள் அதனைப்புரிந்துகொள்வதற்கும் பேரா.ந.கமலா, பேரா.மு.மீனாக்ஷி ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். மேலும் நான் மிகவும் மதிக்கும் பேரா.முனைவர் அருள் செல்வன், பேராசிரியர் வா.மு,சே.ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு தத்தம் கட்டுரைகளை பார்வைகளை முன்வைத்தனர்.

முதல் நாள் அமர்வு மாலை வரை எனக்கு சற்று சோம்பலாக இருந்தது. காரணம் மிகப்பெரும் சமுத்திரமாகிய தொல்காப்பியத்தினை இரு நாளில் சுருக்கி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது சாதாரண காரியமில்லை. ஆனால் இரு பேராசிரியைகளும் திறம்பட அதனைக் கையாண்டனர். எனக்கு சற்று overdose ஆக இருந்தது. அதற்கு பின்பாக பேரா.அருள் செல்வன் (பாண்டிச்சேரி பல்கலைகழகம்) தொடர்பியல் புலத்தில் வைத்து சங்க இலக்கியங்கள் குறித்து பேசியது அற்புதமாக இருந்தது. மேலும் Economist பத்திரிகையில் செய்தி எழுதுபவர்களின் பெயர்கள் வராது (Credit) என்றொரு புதிய தகவலைக் கூறினார்.

மிகப்பெரிய திறப்பாக அமைந்தது இரு நாள் நிகழ்வு. எண்ணற்ற விடயங்கள் உள்ளே ஏறியிருக்கின்றன. நண்பரும் பெரியார் பல்கலைகழக ஆய்வு மாணவருமான திவாகர் வந்திருந்தார். முதல் நாள் இரவு நண்பர் ஆரோக்கியராஜ் (ஆய்வு மாணவர், சென்னை பல்கலைக்கழக தொடர்பியல் துறை) உடன் அவர் தங்கியிருக்கும் தரமணி பல்கலைக்கழக விடுதியில் தங்கி உரையாடியது மறக்க முடியாத நிகழ்வுகள். இரவு இருவரும் சாலையோரத்தில் நடந்து கொண்டே நிறைய ஆய்வு தொடர்பாக உரையாடினோம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இருவரும் புத்தகங்களை பரிமாறிக்கொண்டோம்.

இரு நாளில் நான் கற்றவை ஏராளம் என்றாலும் பயிற்சிப்பட்டறை தலைப்பினை ஒட்டி நான் உள்வாங்கியவற்றை தொகுக்க முயல்கிறேன்: தொல்காப்பியம் வாசிக்க வேண்டும். நம் சங்க இலக்கியங்களில் எண்ணற்ற கருத்தியல்களை கோட்பாடுகளும் புதைந்துள்ளன. தொல்காப்பியம், கலித்தொகை, திருக்குறள் போன்று. அவற்றை நாம் முதலில் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு அந்தக் கோட்பாடுகளைக்கொண்டு நம் ஆய்வினை செழுமைப்படுத்த முடியும். நம் சங்க இலக்கியங்களிலுள்ள கோட்பாடுகளை வைத்து எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகள் உலக அளவில் கவனிப்பு பெரும்பொழுது நம் தொன்மையான கோட்பாடுகள் குறித்து உலகெங்கும் அறியவரும். அவற்றிற்கான தேவை உருவாகி தரமான மொழிபெயர்ப்புகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும்.

நான் ஏற்கனவே எழுதிய சில ஆய்வுக்கட்டுரைகளை மாற்றி எழுத வேண்டும் என்றும், இனி எழுதப்போகும் கட்டுரைகளுக்கு வலு சேர்க்கவும் பலவற்றை நான் கற்றுக்கொண்டேன்.

உதாரணமாக, மிஷெல் பூகோவின் power குறித்த கருத்தினைக்கொண்டு நான் ஏற்கனவே எழுதிய இம்சை அரசன் குறித்த கட்டுரையினை மாற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. அப்படி எழுதியபின்பு அதுவொரு தரமான கட்டுரையாக இருக்குமென தோன்றுகிறது. மேலும் தமிழ் சினிமாவின் stalking பாடல்கள் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிவருகிறேன். stalking பாடலிற்கான கூறுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது கலித்தொகை குறிஞ்சித்திணைப் பாடல்களில் தலைவன் தலைவியைப் பின்தொடர்ந்து செல்வான்; தலைவிக்கு இது சுத்தமாகப் பிடிக்காது; ஆனால் இறுதியாக ‘நான் புங்கை மர நிழலில் இருக்கிறேன்; அங்கு வந்துவிடுங்கள்’ என்று கூறி செல்வாள். இது எனக்கு பெரிய ஆச்சரியத்தியும் மகிழ்வினையும் கொடுத்தது. இந்திய கருத்தியல், மேற்கத்திய கருத்தியல் கொண்டு அக்கட்டுரை எழுதப்பட்டால் அதுவொரு வலுவான பதிவாக இருக்குமல்லவா.

மேலும் பொருள் தேடிச்சென்ற தலைவனின் வருகைகாக தலைவியின் காத்திருப்பு (மரியான்), சங்க இலக்கியங்களில் வரும் தோழி என்ற தொன்மம் (நம் சினிமாவிலுள்ள நாயகனின் நண்பன்) என பல விடயங்களைப் பொருத்திப்பார்க்க முடிந்தது.

பேரா.ரவீந்திரன், பேரா.அருள் செல்வன், பேரா.மீனாக்ஷி ஆகியோருடன் இன்னொரு விடயத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்கள் ஒரு கருத்தியலை முழுமையாக உள்வாங்கி அதனை சமகாலத்துடன் இணைத்து (link) புதிய முடிவுகளைக் கண்டடைகின்றனர். Yes. its all about how you are linking. இது உடனடியாக எல்லாருக்கும் வராது. தொடர் பயிற்சி critical thinkingதான் இவற்றைக் கொண்டுவரும்.

பேரா.ந.கமலா & பேரா.மு.மீனாக்ஷி:

Meenakshi
Retired Tamil Professor M.Meenakshi
kamala
Retired Tamil Professor N.Kamala

இருவருக்கும் வயது 70ற்கும் மேல். அவ்வளவு அனுபவசாலிகள். ஆனால் அவ்வளவு தன்னடக்கம். இன்னும் கற்றுக்கொள்ளவேண்டுமென ஆர்வம். உற்சாகம். தாங்கள் சொல்வது தவறெனில் உடனடியாக அதனை சபையில் வைத்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம். தங்களுக்கு ஒன்று தெரியாது எனில் அதனை வெளிப்படையாக ஒப்புகொள்ளும் மனப்பாங்கு. இவையெல்லாம் இன்றைய சூழலில் அரிதினும் அரிது தானே. பெரிதும் உற்சாகப்படுத்தியது அவர்களின் இருப்பு.

எனக்குள்ளாக பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன்.

ஆய்வு மாணவனாக நான் பங்கேற்ற மிக முக்கிய நிகழ்வாக இதனைப்பார்க்கிறேன். கல்விப்புல ஆராய்ச்சிகள் குறிப்பாக தொடர்பியல் துறை ஆய்வு மாணவர்களால் மேற்கொள்ளப்படும் முனைவர் பட்ட ஆய்வுகள் அனைத்தும் மேற்கத்திய கருத்தியல்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவரிடம் இருக்கும் தீவிரம் அவரிடம் எனக்கு மிகப்பிடித்தமான குணநலன்களில் ஒன்று.

இப்படியொரு நிகழ்வினை நடத்தியதற்கு சென்னை பல்கலைகழக தொடர்பியல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஒரு பயிற்சிப்பட்டறை முடிந்தவுடன் என்ன கற்றுக்கொண்டேன்? இன்னும் என்னவெல்லாம் படிக்க வேண்டும்? நான் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் போன்றவற்றை ஆர அமர்ந்து அசைபோடுவது வழக்கம். நான் ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறேன். என்னைப் பெரிதும் கவர்ந்தது Slavoj Zizek தான். அவரை அறிய ஆவலாக இருக்கிறது. அவரது கருத்தியல் சார்ந்த கல்விப்புல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட அவரது பெயரில் ஒரு இணைய ஆராய்ச்சி இதழ் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் இரண்டு இதழ்களை புத்தகமாக பிரிண்ட் எடுத்துவிட்டேன். மேலும் மிஷெல் பூக்கோ ‘power’ குறித்து பேசியவற்றை ஆழமாக புரிந்துகொள்ள அவர் குறித்த கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக பிரிண்ட் எடுத்துள்ளேன்

காணொளிகள்: 

Prof.M.Kamala talk on Understanding Tholkappiyam 

Tholkappiyam – Sollathikaaram – Prof.M.Meenakshi சொல்லதிகாரம் – பேரா.மு.மீனாட்சி

கற்றது கடுகளவு. இன்னும் கற்க வேண்டியதோ கடலளவு 🙂

group

Photo Credits: DJC Live Blogging

https://www.facebook.com/groups/731008256918984/

Video: DJC TV University of Madras

https://www.youtube.com/channel/UC7PJdzUJhX4cmfjtry6jaQw

 

ஒரு தவளை கிணற்றிலிருந்து வெளியே குதித்த தருணம் – பெங்களூர் கருத்தரங்கம் குறித்து ஒரு பதிவு

ஒரு ஆய்வு மாணவனுக்குண்டான தகுதி எனக்கு அந்தத் தருணத்தில் வந்துவிட்டதாகவே உணர்ந்தேன்

.

முன்பாக…

இதுவரை எனது மூன்று ஆராய்ச்சிக்கட்டுரைகள் கல்விப்புலம் சார்ந்த இதழ்களில் வெளியாகியுள்ளன. 2013ல் சென்னை Rajiv Gandhi Institute of Youth & Development கல்வி நிறுவனத்தில் Media and Youth என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வாசித்திருந்தேன். அந்த அனுபவம் இன்னும் பசுமையாக மனதிலிருக்கிறது. அற்புதமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் present பண்ணத்தெரியாமல் திக்கித் திணறி தொடை நடுங்கி ஒரு வழியாக வாசித்து முடித்தேன். அன்று நான் எந்த நிலையிலிருந்தேன் என்பதை உணர்ந்து கொண்டேன்.

1. நம்மிடம் உள்ளடக்கம் (content) இருக்கிறது, ஆனால் நமக்கு எதிரே திரளாக அமர்ந்திருக்கும் மனிதர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ளும் இலாவகமோ தெள்ளத் தெளிவான தங்குதடையற்ற ஆங்கிலமோ இல்லை.

2. பயந்து பின்வாங்கும் / பதற்றத்தில் உளறும் மனோபாவமே இருந்தது.

இவற்றை களைத்தெறிந்தால் மட்டுமே மேலெழ முடியும் இல்லையெனில் நாமும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவோம் என்ற பயமும் சேர்ந்துகொண்டது.

ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் ஆங்கிலவழிக்கல்வியை பயிலாமல் போய்விட்டோமே என்றொரு ஏக்கம் மனதில் இருந்துவந்தது. ஆனால் அதெல்லாம் ஒரு மாயை மட்டுமே. தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உழைத்தால் எதனையும் சாதிக்க முடியும். தொடர்ந்து தினமும் ஆங்கிலத்தில் கண்ணாடி முன்பாக நின்று பேசிப்பார்ப்பது, ஆங்கிலத்தில் சிந்திப்பது என்பதை வழக்கப்படுத்திக் கொண்டேன்.

எனது பேராசிரியர் ஜெய்சக்திவேல் அவர்கள் நான் முதலாமாண்டு படிக்கையில் ஒரு உபாயத்தினை கற்றுக்கொடுத்தார்.

அ) அனைவரும் Oxford Advanced Learner ஆங்கில அகராதி வாங்க வேண்டும்.

ஆ) ஆங்கில செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். முதல் முறை படிக்கையிலேயே நமக்கு புரிந்து விடும். இல்லையெனில் அடுத்தடுத்து வாசிக்கையில் அதன் மையத்தை பிடித்து விடலாம். எதாவது வார்த்தையின் பொருள் தெரியவில்லை எனில் அதற்கு அகராதியில் பொருள் தேடவேண்டும்.

இ) முதன் முறையாக ஒரு வார்த்தைக்கு அகராதியில் பொருள் பார்க்கும்பொழுது அதன் பக்கத்தில் பென்சிலால் ஒரு புள்ளியை வைத்துவிடவேண்டும்.

ஈ) அந்த குறிப்பிட்ட வார்த்தையின் பொருளை மனனம் செய்வதெல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரு சொற்றொடரில் / பேசும்பொழுது அந்த வார்த்தையை பயன்படுத்தும் முறை அகராதியிலேயே இருக்கும். அன்றைய நாளின் எதாவது ஒரு தருணத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி பேசிவிட வேண்டும்.

உ) இந்தப் பயிற்சி தினமும் தொடரவேண்டும். ஏற்கனவே பொருள் பார்த்த வார்த்தையை முடிந்தளவு இன்னொரு முறை பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கநேர்ந்தால் இம்முறை பேனாவினால் புள்ளி வைத்து விட்டு நம் மண்டையில் நங் என ஒரு குட்டு வைத்து நம் ஞாபகமறதிக்கு தண்டனை தரவேண்டும்.

இப்படியொரு வழிமுறையை கற்றுக்கொடுத்தார். எத்தனை பேர் எங்கள் வகுப்பில் இதனை பின்பற்றினார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து பின்பற்றவில்லை என்றாலும் நானும் இந்தப்பயிற்சினை ஆர்வத்துடன் மேற்கொண்டேன்.

அடுத்து எனது மற்றொரு பேராசிரியர் பாலசுப்ரமணிய ராஜா. முதன் முதலாக எங்களது தேர்வுத்தாளை திருத்திவிட்டு ஒவ்வொருவருக்கும் சில அறிவுரைகளைக் கூறினார். எனக்கு அவர் கூறியது, ‘ஆங்கிலத்தில் பெரிய பிரச்சினையில்லை. ஆனால் நிறைய புதிய வார்த்தைகளை நீ கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். ஆங்கிலச் சொற்கள் (Vocabulary) தான் நம்மிடம் பிரச்சினை. வெறும் is was ஐ வைத்துக் கொண்டு இனி ஜல்லியடிக்கக்கூடாது என்று முடிவெடுத்த தருணமது.

இவரே தான் என்னை உலக சினிமா வெறியனாக்கியவர் என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். Woody Allen ன் Midnight in Paris பற்றி ஒரு முறை வகுப்பில் கூறியுள்ளார். பிரெஞ்சின் கலை செயல்பாட்டில் நிகழ்ந்த புரட்சி ‘Renaissance’ பற்றி கூறும் பொழுது இந்தப்படத்தினைப் பற்றி கூறினார். அதனை நோட்டில் குறிப்பெடுத்து தேடிப்பார்த்து மிரண்டு பின்னர் Woody Allen ஐ தேடி… அப்படியிப்படியென அயல் சினிமா பரிட்சயம் கிடைக்கத்தொடங்கியது. இவரே City of God படத்தினை எங்கள் துறையில் திரையிட்டார். முதன் முதலில் நான் பார்த்த உலகசினிமா City of God. இப்பொழுது புரிகிறது என் வளர்ச்சியில் என் ஆசிரியர்களின் பங்களிப்பு எத்தகையது என்று.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இன்று தங்கு தடையின்றி ஆங்கிலம் பேசவும் படிக்கவும் முடிகிறதென்றால் இவர்களின் தூண்டுதலே காரணம். தொடர்ந்து உலக சினிமாக்களை sub title கொண்டு பார்த்தது + செய்தித்தாள் வாசிப்பு. அகராதியை பயன்படுத்துதல். தற்சமயம் தீவிர ஆங்கில இலக்கிய வாசிப்பு. இவைதான் எனது ஆங்கிலத்தை மேம்படுத்தின. என் துறையில் நான் ஆங்கிலம் பேசுவதற்கான சூழலே இல்லை. கட்டாயம் இருந்தால் தானே பேச முடியும். இங்கு தமிழ் மட்டும் தான். அதனால் எனது ஆங்கிலப்பயிற்சி இப்படித்தான் இருந்தது. ஆசிரியர்கள் எங்களை ஆங்கிலம் பேசச்சொல்லி தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மனது வைத்தால் தானே முடியும்.

சில மாதங்களாக ஆங்கில வாசிப்பில் கவனம் செலுத்திவருகிறேன். இவ்வளவு நாள் ஏன் ஆங்கில புத்தகங்களை வாசிக்காமல் விட்டோம் என்று என்மேலேயே கோபமாக வருகிறது. வாசித்த முதல் ஆங்கில நாவலே This blinding absence of light.

எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. திருநெல்வேலியில் மட்டுமே இருந்துகொண்டிருந்தால் பல விசயங்களை கற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கூட்டினை விட்டு பறந்து தூரமாக  சென்றால் தான் நம் வயதொத்தவர்கள் / நம் துறை சேர்ந்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், நாம் எந்த நிலையிலிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்று முடிவெடுத்தேன்.

அதன் முதல் முயற்சி தான் பெங்களூர் கிறைஸ்ட் பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச சினிமா கருத்தரங்கம் (International conference on cinema – Cinema breaking the fourth wall) ஆகஸ்ட் 4 & 5.

image

எனது கட்டுரையை தெளிவாக தயார் செய்து விட்டு எனது வழிகாட்டியும் எங்கள் துறை தலைவருமான பேராசிரியர் கோவிந்தராஜூ அவர்களிடம் திருத்தங்களை பெற்று அனுப்பி வைத்தேன். என் மேல் இவர் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருநாளும் உடைத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் ஒருவரும் என்னை நம்பாத (நானே நம்பவில்லை) சமயத்தில் என்னிடம் எதோ திறமையிருக்கிறது என்று நம்பியவர், நம்பியது மட்டுமல்லாமல் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பினையும் கொடுத்தவர்.

ஆனால் எனக்கு இவர் வாய்ப்பளித்த சமயத்தில் என் மேலேயே நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன். என் தகுதிக்கு மீறிய வாய்ப்பாகவே கருதிவந்தேன். முனைவர் பட்ட ஆய்வை நினைத்து பயமாகவும் இருந்து வந்தது.

மேடையேறிய சமயத்தில் கைகால்களில் உதறலெடுத்தது உண்மை தான். மிஷல் பூகோ குறித்து பேசிவிட்டு எனது கட்டுரைக்குச் சென்றேன். ‘பாரீஸில் மிஷல் பூகோ தத்துவ பாடமெடுக்கையில் அதனை கேட்க அத்தனை பேர் வரிசையில் நிற்பார்களாம். மிகப் பெரிய வரிசை அந்தக் கல்லூரி வாயில் வரை இருக்குமாம். முன்பே வருபவருக்கே வகுப்பில் இருக்கை கிடைக்குமாம். இங்கிருக்கும் கூட்டம் எனக்கு அளப்பரிய உற்சாகத்தை தருகிறது. பார்க்கலாம் எதிர்காலத்தில் நான் பூகோ போன்று என் துறையில் மின்னுவேனா என்று… அனைவருக்கும் வணக்கம்.. ‘ என்று ஆரம்பிக்கையில் ஒரு நம்பிக்கை வந்ததே அட அட. அங்கு உற்சாகமானேன்.

தெளிவாக ஆங்கிலம் பேச முடியும், தொடர்ந்து உரையாட முடியும், என்னுடைய கட்டுரையை defend செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எனக்களித்தது இந்தக் கருத்தரங்கம். அத்தனை பேர் முன்னிலையில் ஆங்கிலம் மட்டுமே தொடர்பு மொழி., நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். சற்றும் சளைக்கவில்லை. அமைதியாக அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளித்தேன். என் கட்டுரை மீது அபார நம்பிக்கையிருந்தது.

இனி தைரியமாக எந்த ஒரு கருத்தரங்கிலும் என்னால் கட்டுரை வாசிக்க முடியும். இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளின் கருத்தரங்கிற்கு செல்லவும் ஆர்வமாக இருக்கிறேன்.

இப்படி என்னிடமிருந்த பயத்தையெல்லாம் உடைத்து என்னால் முடியும் என்னிடமும் திறமை இருக்கிறது என்று என்னை உணரச்செய்தது பெங்களூர் கருத்தரங்கம். மறக்க முடியாத அனுபவம். குறித்து வைக்கப்படவேண்டிய தருணம். கிணற்றுத் தவளையாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பை உபயோகித்திருக்கமாட்டேன்… என்று நன்றாகவே தெரிகிறது.

இத்தனை மனிதர்களின் பங்களிப்பு என் வளர்ச்சியில் இருந்தாலும் அனைத்தையும் மீறி ‘போடா! உன்னால முடியும்’ என்று மனதினுள்ளே ஒரு உத்வேகத்தை உருவாக்கியது தீவிர இலக்கிய வாசிப்பு தான். இந்த தருணத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மையோ, பயமோ துளியுமில்லை. இது அதீத நம்பிக்கையில்லை 🙂

Conversation in Sittanavasal

பத்திரிக்கை செய்தி

புதுக்கோட்டை ஜூலை 23, எழுத்தாளி அமைப்பினர் பா.வெங்கடேசன் எழுதிய ‘தாண்டவராயன் கதை’ நாவல் குறித்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான வாசகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், ஒரு கூரையின் கீழ் அமர்ந்துகொண்டு உரையாடாமல், குடுமியான் மலை, சித்தன்னவாசல் குகை போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 5 மணி அளவில் சித்தன்னவாசல் அருகேயிருக்கும் ஒரு பூங்காவின் புல்வெளி விரிப்பில் அமர்ந்து கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நீண்டது ‘தாண்டவராயன் கதை’ குறித்த வாசகர்களின் பார்வைகளும் விமர்சனங்களும். இறுதியாக பா.வெங்கடேசன் தான் எழுதிக்கொண்டுவந்திருந்த கட்டுரை ஒன்றினை வாசித்தார்.

குடுமியான் மலை, பெயர்க்காரணத்தில் ஆரம்பித்து அங்கிருந்த சிற்பங்கள், கல்வெட்டுக்கள், முழுமையடையாமல் ஓரமாக கிடத்திவைக்கப்பட்ட சிற்பங்கள் (சிவன் பெண் வேடத்தில் (அவதாரமா? வேடமா?) காட்டிலுள்ள முனிவர்களை ஓட்டிக்கொண்டு வருவது, முனிவர்கள் பெண்ணைப் போல இருக்கும் சிவனின் அழகில் மயங்கி பின்னாலேயே வாயில் எச்சிலுடன் வருவார்கள் + மன்மதன், ரதி சிற்பங்கள் .. etc etc) அங்குள்ள இசைத்தூண்கள் போன்றவைகள் என்னைப்பெரிதும் கவர்ந்தன. அதற்கு காவலாக எப்போதும் தேனீக்கள் இருக்குமாம். நாங்கள் பார்க்கும் போது 5ற்கும் மேற்பட்ட தேனீ குடும்பங்கள் இசைத்தூண்களின் மேற்கூரையில் தங்கள் கூடுகளை அமைத்திருந்தன. (இந்த மேற்கூரையானது அரசாங்கத்தால் இசைத்தூண்களின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது) அருகிலிருந்த குடைவரை கோவில் + அதனுள்ளிருந்த சிவன் சிலை இவற்றையெல்லாம் பார்க்கும்போது அந்தக்காலத்து architectகளின் சிந்தனைத்திறனை வியக்காமல் இருக்க முடியவில்லை.

silai

சித்தன்னவாசல் குகை, குடுமியான் மலையினை பார்வையிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி (எழுத்தாளி அமைப்பினர் வாகனம் ஏற்பாடு செய்திருந்தனர்) சித்தன்னவாசல் வந்து சேர்ந்தோம். மலை மீது ஏறுவதற்கு முன்பாக மதிய உணவினை முடித்துக்கொண்டோம். (புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம். பசி நேரத்தில் அமிர்தமாய் உள்ளே இறங்கின. சாப்பிடும்போது ஒரே சிரிப்பும் பகடியுமாய் இருந்தது. இலக்கியம், உலகசினிமா, இணைய பிரபலங்கள் என பலர் வந்து போனார்கள்) சித்தன்னவாசல் குகை மயிர்க்கூச்செரியச்செய்யும் அனுபவங்களைத் தந்தது என்றால் அது மிகையில்லை. அங்குள்ள ஓவியங்களை காலம் சிதைத்திருந்தது, மனிதர்களும் தங்கள் பங்கிற்கு வேலையைக் காட்டியிருந்தனர். குகையினுள்ளே மூன்று சிலைகளும் வெளியே இரண்டு சிலைகளும் இருந்தன. அவற்றில் ஒருவர் மகாவீரர். மற்ற பெயர்கள் அப்போதே மறைந்துவிட்டன. (ஞாபகசக்தி குறைவாக இருக்கும் என்னைப்போன்றவர்கள் கையில் ஒரு சிறிய டைரி வைத்துக்கொள்வது அவசியம்) அங்கிருந்த ஓவியங்களைப் பற்றி guide தெளிவாக விளக்கினார். பின்னர் அங்கிருந்து…

என்.சொக்கன் எழுதியது ஒன்று நினைவுக்கு வருகிறது. Not exact words. ‘நூலகத்திற்குள் நுழையும் போதுதான் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது தெரியவரும்’. இதுவே நிகழ்வின் இறுதியில் எனக்குத் தோன்றியது. இறுதியாக சித்தன்னவாசலிலிருந்து கிளம்பும் போது என் மனதில் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது.

 

pa.ve
Ba.Venkatesan

ஒரு மிகச்சிறந்த எழுத்தாளனையும் அவனது நாவலைக்கொண்டாடும் ஒரு சில வாசகர்களையும் ஒருங்கே கண்டது அளப்பரிய ஆனந்தத்தை தந்தது. ஒவ்வொரு வாசகர்களும் ‘தாண்டவராயன் கதை’ நாவலை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருந்தனர். கலந்துரையாடலின் தொடக்கமாக தூயன் ‘தாண்டவராயன் கதை குறித்து தான் எழுதிவந்திருந்த கட்டுரையினை வாசித்தார். அந்தக்கட்டுரையின் முடிவு எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் ஒரு அபாரமான கட்டுரை சட்டென்று முடிந்துவிட்டது போல இருந்தது. முழுமையற்று இருக்கும் அதனை மீண்டும் அவர் எழுத வேண்டும். இது என் கருத்து மட்டுமே. இந்த நாவலைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அது முழுமையடையாது என்றே தோன்றுகிறது. கட்டுரையின் தொடக்கம் அபாரமாக இருந்தது. அப்பப்பா எத்தனை பின்னணித்தகவல்கள், எவ்வளவு சிரத்தையாக உழைப்பு. மூன்று நாட்களுக்கும் மேல் ஆனதாம் அந்தக்கட்டுரையினை எழுதிமுடிக்க. இவற்றையெல்லாம் எனக்கு inspiration-ஆக எடுத்துக்கொள்கிறேன். சும்மா ஒரு புத்தகத்தை படித்துவிட்டு தோன்றுவதை அடித்துவிடக்கூடாது. அடுத்து முஹமது ரியாஸ் பேசினார். ரியாஸின் பேச்சு collage ஆக இருந்தது. தூயன் தனது கட்டுரையில் சொல்லியிறாத தகவல்களை முன்வைத்தார் ரியாஸ். இவர் நாவலை அணுகியவிதம் எனக்குப் பிடித்திருந்தது. மேலும் இவர் பாகிரதியின் நாவல், ராஜன் மகள் சிறுகதைத் தொகுப்பு ஆகியவை குறித்தும் தனது பார்வையினைக் கூறினார்.

அடுத்ததாக பேசிய  நான், ரியாஸ், தூயன் பேசியதைப் போன்று நாவலிலுள்ள nuances பற்றி பேசவில்லை. பொதுவாகவே பேசினேன். நாவலைப்படித்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது, மறுவாசிப்பு செய்யாமல் கூட்டத்துக்கு போனதே காரணம். நான் பேசியவற்றிலிருந்து: தாண்டவராயன் கதையின் உள்ளடக்கமும், வடிவைமப்பும் மொழியும் என்னைப்பெரிதும் கவர்ந்தது. இதனை வாசித்தபின்பு என்னால் மற்ற படைப்பாளிகளின் புனைவுலகுக்குள் செல்லவே முடியவில்லை. எதிர்பார்ப்பும் இரசனையும் மேம்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன். மற்ற படைப்புகள் என்னை திருப்திப்படுத்தவில்லை. இதன் பின்பாக வாசித்த யுவன், பெ.மு, கோபிகிருஷ்ணன் போன்றவர்கள் எனக்கு கடும் சலிப்பினையே தந்தார்கள். வாசகனின் சிரத்தையான பங்களிப்பைக் கோரும் படைப்புகள் + புத்தகம் என்பதைத் தாண்டி வாழ்வில் நாம் கற்றுக்கொள்ள ஏதேனும் சங்கதி இருக்கும் படைப்புகள் மட்டுமே எனக்குப் பிடித்தமானவை. தற்சமயம் வாசித்துவரும் Conversation in the Cathedral எனக்கு மிகுந்த சவாலாக இருக்கிறது. நாவலின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளவும் நாவலினுள் நுழையவும் எனக்கு 50 பக்கங்கள் கடக்கவேண்டியதாயிருந்தது. மேலும் சமீபத்தில் வாசித்து முடித்த Enchantress of Florence நாவல் சாதாரண folk tale + வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும் அதன் கதைசொல்லும் நேர்த்திக்காக (narration) என்னைப்பெரிதும் கவர்ந்தது பற்றிக்கூறினேன். ‘பா.வெங்கடேசன் தொடர்ந்து இதே பாணியில் எழுதுவாரா? அல்லது அல்லது அடுத்த படைப்பில் தனது templateனை உடைப்பாரா?’ என்ற கேள்விகளை முன்வைத்தேன். இன்னும் அவரது ராஜன் மகள், ஒரிஜினல் நியூஸ்-ரீல்  சிறுகதைகள், பாகிரதியின் மதியம் போன்ற படைப்புகளை நான் வாசிக்கவில்லை. இப்போது அனைத்து புத்தகங்களும் கைவசமிருக்கின்றன. அடுத்தமாதம் முழுவதும் பா.வெங்கடேசனை படிக்கவிருக்கிறேன். தாண்டவராயன் கதை புத்தகத்தையும் மறுவாசிப்பு செய்யவிருக்கிறேன். அதன் பின்னர் எனது கேள்விகள் நிச்சயம் மாறும். Enchantress of Florence போன்ற நாவல்களைவிட நூறு மடங்கு சிறந்தது ‘தாண்டவராயன் கதை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் உலகம் முழுவதும் கவனம் பெரும். சல்மான் ருஷ்டி இதனைப்படித்தால் கண்டிப்பாக ஓசூர் வந்து பா.வெங்கடேசனின் வீட்டில் ஒரு மாதமாவது தங்கிவிடுவார். யோசா, தருண், முரகாமி போன்றவர்கள் இந்த நாவலைப்படிக்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பாளர் தேவை. அவர் ஆங்கிலத்தில் முனைவர்பட்டம் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தில் வசித்தாலும் ‘தேர்ந்த இலக்கிய’ வாசகராகவும் இருக்கவேண்டும். இந்த நாவல் உலக வாசகர்களுக்காக நாவல் என்பேன். மானுடர்களுக்கான பொதுவான அம்சம் இந்த நாவலில் இருக்கிறது

மேலும் நான் உதிர்த்தவை:  எழுத்தாளரின் சமூக பொறுப்புணர்வு (social responsibility) புலப்படுகிறது + நாவலை அழகாக்க அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பினை உணரமுடிகிறது + தேள்கள் பற்றி நாவலில் ஒரு இடத்தில் வரும். அத்தனை தேள்கள் இருக்கின்றன என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன் + மார்க்வஸ் எழுதிய தனிமையின் நூறு ஆண்டுகள் ஒரு சூத்திரம் எனில் (formula) அதனை வைத்து நிகழ்த்தப்பட்ட அற்புதமான கோட்பாடு தாண்டவராயன் கதை +  சரமகோவின் படைப்புகளை நான் வாசித்ததில்லை என்பதால் பா.வெங்கடேசனிடம் இருக்கும் அவரது தாக்கம் பற்றி என்னால் கூறமுடியவில்லை + இந்தக்கூட்டமே ‘தாண்டவராயன் கதை’ நாவலுக்காக நிகழ்ந்த முதல் கலந்துரையாடல் கூட்டம் என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் எழுதப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னர் அதிகம் கவனம்பெறாது போன நாவலொன்று தற்சமயம் ஒரு குறிப்பிட்ட இளம் வாசககர்களை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல் அவர்களை பல கிமீ பயணம் செய்யவைத்து இங்கு கூட வைத்திருப்பது நாவலின் வெற்றியாகவே பார்க்கிறேன். ஒரு படைப்பை எழுதிமுடித்துவிட்டு ஆசிரியன் தனது படைப்பைப் பற்றி பேசவே கூடாது என்பது என் கருத்து. அந்த படைப்பே பேசவேண்டும். அதுவே விமர்சனத்தை உருவாக்க வேண்டும் + ஒரு தேர்ந்த வாசகன் இந்த நாவலை தனது தேடலில் நிச்சயம் கண்டுகொள்வான் +  இந்த நாவல் கூடியவிரைவில் தமிழில் மிகச்சிறப்பான (cult status) இடத்தினைப்பெறும். போன்றவை நான் கூறியவை & கூற மறந்தவை. எனக்கு கோர்வையாக பேச வராது என்பதால் எனது பேச்சு collage ஆகவே இருந்தது. (பாருங்களேன். எனது blog என்பதால் இப்படி ‘நான்’ வெளிப்படுகிறேன். மன்னித்தருளவேண்டும். மற்றவர்கள் பேசியது இன்னும் நிறைய. அதன் ஆடியோ பதிவை ஒரு வானொலி நிகழ்ச்சியாக மாற்றும் பொருட்டு edit செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் பா.வெங்கடேசன் & எழுத்தாளி அமைப்பினரிடம் அது சமர்ப்பிக்கப்படும். அதில் அனைவரின் பேச்சும் முழுமையாக இருக்கிறது. அவர்கள் அனுமதித்தால் அது பொதுவில் பகிரப்படும்)

அடுத்ததாக சச்சின், க்ரிஷ்ணப்ரியா போன்றவர்கள் நாவலை முழுமையாக வாசிக்கவில்லையெனிலும் (தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்) வாசித்தவரை, கூர்மையான கருத்துக்களை முன்வைத்தனர். இதில் சச்சின் பற்றி கூற நிறைய இருக்கிறது. மனிதர் படு குசும்பானவராக இருக்கிறார். இவர் இருக்கும்போது இறுக்கமான சூழல் என்ற வார்த்தைக்கே இடமில்லை. காலையிலிருந்து இறுதிவரை துள்ளலான மனநிலையிலேயே இருந்தேன். சச்சின் (சிவகுமார்) பற்றி, அவரது கவிதைகளை வாசித்துவிட்டு ஒரு தனிப்பதிவாக எழுதலாம் என்றிருக்கிறேன். மதி ஒரு சினிமா இயக்குநன் + இலக்கிய வாசகனின் பார்வையில் தனது கருத்தினை முன்வைத்தார். இவரது பேச்சின் ஒரு இடத்தில் ‘இந்த படைப்பு என்னால் ஒரு திரைப்படத்தை முழுமையாக திறம்பட எடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும், என்னால் எழுதமுடியும் என்ற உத்வேகத்தையும் தருகிறது’ என்றார். Goosflesh & மிகப்பெரிய காரியத்தினை செய்துள்ளார் க்ரிஷ்ணப்ரியா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரால் தான் தாண்டவராயன் கதை பலரைச் சென்றடைந்தது என்பதைத் தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு நடக்க காரணமும் இவர்தான். நன்றி நன்றி நன்றி… _/|\_

பின்னர் பேசிய நண்பர் (கார்த்திகைப்பாண்டியனின் நண்பர் இவர். பெயர் நினைவிலில்லை) சில கேள்விகளை முன்வைத்தார். மேலும் பலரும் தங்களது கருத்துக்களை கூறினார்கள். கார்த்திகேயன், கல்குதிரை ஓவியர் (பார்ப்பதற்கு சமஸ் போன்று இருந்தார்) பிறகு புகைப்படங்களை எடுத்த நண்பர் அனைவரும் நிகழ்வினை முழுமையாக்கினார். நிகழ்வில் இரண்டு வயதான (physically aged not mentally..) வாசகர்கள் கலந்துகொண்டு பேசினர். எங்களுக்கு போட்டியாக இருந்தது அவர்களது participation. (கோபாலன், குப்பு.வீரமணி)

IMG_20160723_153750

இறுதியாக பா.வெங்கடேசன் தான் எழுதிக்கொண்டுவந்திருந்த கட்டுரையினை வாசித்தார். அப்படியொரு நவீன கட்டுரையினை நான் சமீபத்தில் வாசித்ததில்லை. இந்தக்கட்டுரை அடுத்த கல்குதிரை இதழில் வெளியாகுமாம். கண்டிப்பாக ஒவ்வொரு வாசகரும் படிக்கவேண்டிய கட்டுரை அது.

நாவலை மேம்போக்காக வாசிப்பதோ, வாசித்துவிட்டு விதந்தோந்தி மட்டும் எழுதுவதோ, படைப்பினை summarize செய்துவிட்டு செம்ம, அதகளம், அட்டகாசம், வெறித்தனம், மெர்சல் என்று மேம்போக்காக சொல்லியோ எழுதவே கூடாது. ஒரு படைப்பில் எண்ணற்ற layerகள் இருக்கும். ஒரு நாவல் நேரடியாகக் கூறுவது ஒரு கதை என்றால், மறைமுகமாக இன்னொரு கதையினைக் கூறிக்கொண்டிருக்கும். (ரியாஸ் புரட்சி பற்றி கூறியது நினைவுக்கு வருகிறது) அது இன்னொரு layer. இப்படி படைப்பினை நன்றாக உள்வாங்கி வாசித்து உணர்ந்தபின்பு நாம் எழுதும் கட்டுரையில் முடிந்தளவு plot பற்றி கூறாமல் நாவலை நாம் எப்படி பார்க்கிறோம் என்ற பார்வையினை எழுதவேண்டும் = இதெல்லாம் பா.வெங்கடேசனிடம் நான் கற்றுக்கொண்டவை. இன்னும் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அவற்றையெல்லாம் என்னால் quantify செய்யமுடியாது. ‘எனக்கு மிகப்பெரிய திறப்பாக இந்த சந்திப்பு அமைந்தது’ இதனையே நாங்கள் கிளம்பும்போது பா.வெங்கடேசனிடம் கூறினேன். இந்த நிகழ்விற்கு அழைத்த ரியாஸுக்கு நன்றி. (இவருக்கு எத்தனை முறை நன்றி சொல்வது. இனி இவரது பெயரை குறிப்பிடவே கூடாது) கேள்வி பதில் நேரம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம் என்று தோன்றியது. நேரம் போதவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. எனவேய புகாரில்லை.

அடிக்குறிப்புகள்

0. வாசிக்க: பா.வெங்கடேசன் எழுதிய கவிதைகள்: (i) http://www.kalachuvadu.com/issue-128/page38.asp & (ii) http://www.kalachuvadu.com/issue-188/page44.asp

1. வாசிக்க: பா.வெங்கடேசன் எழுதிய சிறுகதை: வெறும் கேள்விகள்

2. வாசிக்க: கட்டுரை: இந்தக்கட்டுரையினை ‘நாவல் மதிப்புரை எழுதுவது எப்படி?’ என்ற கேள்விக்கு பாடமாக வைத்துக்கொள்ளலாம். Such a great analysis.

3. தாண்டவராயன் கதை விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவர இருக்கிறது. அவரது பாகிரதியின் மதியம் நாவல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.

4. அனைத்து புகைப்படங்களையும் எடுத்த அந்த மாமனிதர் ஒரு புகைப்படத்தில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவருக்கு நன்றி.

5. மேலே சொன்னபடி பத்திரிக்கையில் செய்தி எதுவும் வெளியாகவில்லை 🙂