மலையாளத்தில் முதல் சினிமா எடுத்த ஜே.சி.டானியலை பேட்டி கண்ட தமிழர்

வைகை குமாரசாமி எழுபதுகளில் மதுரையில் வைகை பதிப்பகம் வைத்து நடத்தியவர். பள்ளி கல்லூரி படிப்புகளை நாகர்கோவிலில் முடித்த இவர் அச்சாபீஸ் பணி, ஜவுளிக்கடை வியாபாரம் எனப் பல வேலைகளையும் செய்துள்ளார். கேரளாவில் முதன் முதலாக சினிமா இயக்கிய ஜே.சி.டானியலை நேர்காணல் செய்தவர் இவர். ஆனால் அவரை நேர்காணல் செய்யும் போது அவரைப்பற்றி அதிகமாகத் தெரிந்திருக்கவில்லையாம். பசுமைப்புரட்சிக்கு எதிராக இயங்கிய இவர் ஒரு இயற்கை விவசாயி.ஊடகங்களிலும் நிறைய பங்களிப்புகளை செய்துள்ளார்.சமூக அக்கறையும் தீவிர தமிழ்ப்பற்றும் உடைய இவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.
DSC_0044
வைகை குமாரசாமி

வைகை பதிப்பகம் பற்றிச் சொல்லுங்கள்.

மதுரையில் நான் வாழ்ந்த காலகட்டங்களில் ‘வைகை’ என்றொரு பத்திரிகையினை நண்பர்கள் நாங்கள் இணைந்து தொடங்கினோம். வருடத்திற்கு பத்து இதழ் வெளியிடலாம் என்றும் ஒரு இதழின் விலை ஒரு ரூபாய் என்றும் முடிவு செய்து ஆரம்பித்தோம். அதனை ஒரு இலக்கியச் சிற்றிதழாக நடத்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வெங்கட் சாமிநாதன் ‘அக்கிரஹாரத்தில் கழுதை’ படத்தினைப் பற்றி எழுதிய கட்டுரை கூட எங்கள் இதழில் பிரசுரமாகியுள்ளது. பின்னர் நாங்கள் எதிர்பார்த்த அளவு இதழுக்கு விமர்சனங்கள் வரவில்லை. ந.முத்துசாமி தான் தொடர்ந்து ‘கூத்து’ தொடர்பான கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். சி.மோகன், ‘சுவர்கள்’ சிவராமன் போன்றோரால் நடத்தப்பட்ட ‘வைகை’யில் என் பணி அச்சிட்டு வெளியிடுவதுதான்.

இலக்கியவாதிகளுடனான உங்கள் உறவு எப்படியிருந்தது.
எங்கள் அச்சாபீஸில் சில நாட்கள் தங்கியிருந்தார் தருமு சிவராமு. அப்போது அவரைப் பார்க்க நிறைய இளம் எழுத்தாளர்கள் வருவார்கள். நான் அவரிடம் உங்கள் கட்டுரைகளை புத்தகமாக அச்சிடுகிறேன். உங்கள் கவிதைகளை என்னால் கொண்டுவர இயலாது. என்னால் அதனைப் படிக்க முடியவில்லை என்றேன். மேலும் நண்பர்களும் ‘நீங்கள் இவரது படைப்புகளை புத்தகமாகக் கொண்டுவாருங்கள். அவருக்கு ஏதாவது பணம் தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். தருமு சிவராமின் பேச்சு எப்போது ஒரு மிரட்டல் தொனியில் தான் இருக்கும். பலர் அவரைப் பார்க்க வருவதற்கே பயப்படுவார்கள். அவரிடமிருந்து, ‘என்னிடம் விமர்சனத்திற்கு என்று வராதீர்கள். நார் நாராகக் கிழித்துவிடுவேன்’ என்றெல்லாம் சொற்கள் வரும். அதே போல ஜி.நாகராஜனிடம் நான் திட்டுக்கள் கூட வாங்கியிருக்கிறேன். என்னிடமும் குடிப்பதற்கு பணம் கேட்டிருக்கிறார். அவர் நன்றாக இருந்த காலத்தில் அவரது முறுக்கு அடர்த்தி மீசையும் அவர் கட்டியிருக்கும் வேட்டியும் அவ்வளவு பிரசித்தம். பல இளசுகள் அவரது பாணியைப் பின்பற்றினார்கள். அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. அவர் நன்றாகக் கணிதம் எடுக்கக்கூடியவர். ஆங்கிலத்திலும் அதீத புலமை இருந்தது. அவர் ஒரு ராணுவப் பணிக்காக தேர்வாகியவர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்புலம் இருப்பதாகக் கூறி அவரை வெளியேற்றி விட்டார்கள்.உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவரைப் பரிசோதித்த மருத்துவர் ‘இவருக்கு நுரையீரலே இல்லையே’ என்றாராம். அந்த அளவிற்குப் புகைப்பழக்கம் இருந்துள்ளது அவருக்கு.அவரது இறுதி காலத்தினை மதுரையில் இருந்த ‘எதார்த்தம்’ அமைப்பினர் தான் பார்த்துக் கொண்டார்கள்.

யார் யாருடைய புத்தகங்களை எல்லாம் உங்கள் பதிப்பகம் வாயிலாக புத்தகமாகக் கொண்டு வந்தீர்கள்?நானும் தஞ்சை பிரகாசும் அப்போது நண்பர்களாக இருந்தோம். இருவரும் இணைந்து பி.கே புக்ஸ் (பிரகாஷ் குமாரசாமி) பதிப்பகம் மூலமாக கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை’ தொகுப்பு, அம்பை எழுதிய ‘சிறகுகள் முறியும்’, ஆ.மாதவன் எழுதிய ‘கடைத்தெரு கதைகள்’, கா.நா.சுவின் கவிதைத் தொகுப்பு போன்றவற்றை வெளியிட்டுள்ளோம்.

மதுரையில் இருந்து எப்போது திருநெல்வேலி வந்தீர்கள்?      மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் தான் பணிபுரிந்து வந்தேன். அப்போது அங்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அங்கிருந்து குடும்பத்தோடு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்களது அச்சாபீஸ் பணியாட்களையும் சிலர் ஆசை வார்த்தைகள் கூறி தங்கள் அச்சாபீஸ்களுக்கு பணிக்கு எடுத்துக் கொண்டனர். இது என் மீது கோபமாக இருந்த சில பல்கலைக்கழக நபர்களின் வேலை. எனவே எங்களது அச்சாபீசை தனித் தனியாக விற்றுவிட்டேன். அப்படித்தான் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தோம்.

பசுமைப்புரட்சிக்கு எதிராக உங்களது செயல்பாடுகள் குறித்து.  

வத்திராயிருப்பில் நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதுதான் க்ராண்ட் ஆல்வாரிசின் ‘ரிசார்டியோ’ பற்றிய நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. அதைப்படித்த பின்பு தான் அடிப்படையாக சில கேள்விகள் எனக்குள் எழுந்தன. அதற்கு முன்னதாக நானும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியவன் தான். அதில் விளைச்சலும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் மக்கள் ஏன் வறுமையிலிருந்து மீளமுடியவில்லை.ஏன் கடனாளி ஆனார்கள்? என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தன. எனவே தொடர்ந்து விவசாயம் செய்பவர்களைச் சந்திக்கத் தொடங்கினேன். அப்படிப் பார்த்து எனக்குள்ளாக நான் தொகுத்த விஷயங்கள் தான் பசுமைப்புரட்சிக்கு எதிராக நான் உருவாகக் காரணம். அப்போது என் கைகளில் இருந்த அனைத்துவிதமான இலக்கிய புத்தகங்களையும் வெளியே கொடுத்தேன்.காஞ்சனை சீனிவாசன், பொன்னுச்சாமி போன்றோர்கள் வந்து எடுத்துக்கொண்டு சென்றார்கள். அந்த விசயத்தில் வீடு சுத்தமானத்தில் என் மனைவிக்கு ஒரே சந்தோசம். (சிரிக்கிறார்)

DSC_6065

அப்போது இரண்டுவிதமான கருத்துக்கள் இருந்தன. ‘பசுமை புரட்சி’ வரவில்லை எனில் பஞ்சம் ஏற்பட்டு நாம் உணவின்றி இறந்து போயிருப்போம் என்றும்., அதெல்லாம் தேவை இல்லை, இவர்கள் கொடுக்கும் செயற்கை உரங்கள் இல்லாமலேயே நம்மால் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும் என்றும் இரு வேறான கருத்துகள்.

(சிறிது இடைவெளி விடுகிறார்)

இப்போது கேள்வி என்னவெனில் பசுமைப்புரட்சியினை யார் கொண்டு வந்தார்கள் என்பது தான். 1946களில் முதன் முதலாக வெளிநாட்டினர் காந்தியை வந்து பார்க்கிறார்கள். அவர்கள் காந்தியிடம் ‘உங்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மால்தூஸ் கூற்றுப்படி ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் அது இரண்டு மடங்காக அதிகமாகும். ஆனால் உங்கள் உற்பத்ஹியோ அந்த அளவிற்கு வேகமாக இருக்காது. அதனால் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதற்கு பணம் கொடுக்க வேண்டியதிருக்கும். இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் நீங்கள் விவசாயத்தினை நாவேனப்படுத்த வேண்டும். அப்போது காந்தி அவர்களை ஜே.சி.குமரப்பா, பியாரிலால் போன்றவர்களிடம் அனுப்புகிறார். அப்போதுதான் ஜே.சி.குமரப்பா கேட்கிறார் ‘உங்கள் ட்ராக்டர் சாணி போடுமா?’ என்று, அது காந்தி கேட்டதாகச் சொல்வார்கள். அனால் உண்மையில் கேட்டது ஜே.சி.குமரப்பாதான்.

அதன் பிறகு பல்வேறு ஒப்புதலுக்குப் பின் நம் நாட்டிற்கு வெளிநாட்டுப் பசுக்கள், நவீன ட்ராக்டர்கள், செயற்கை உரங்கள் போன்றவைகள் அதிரடியாக இறங்குகின்றன. மக்களும் அதனை வாங்கி உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். வெளிநாட்டினர் அதில் நல்ல லாபம் அடைகின்றனர். ஆனால் பாழானது என்னவோ நமது மண்ணும் ஆரோக்கியமும் தான்.

அதனால் தான் அதற்கு எதிராகக் களமிறங்கி, செயல்பட்டு வருகிறேன்.

ஜே.சி.டானியல் அவர்களைப் பேட்டி கண்ட உங்கள் அனுபவத்தினைச் சொல்லுங்கள்.

1972ல் எனது கல்லூரிப் படிப்பினை முடிக்கிறேன். அந்தக் காலத்தில் எனது கொல்லத்திலிருந்த நண்பர் ஒருவர் திருவனந்தபுறத்தில் பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு மலையாளத்தில் “நானா” என்ற பெயரில் சினிமா பத்திரிக்கை தொடங்க ஆசையிருந்தது. அதுவரை அவர் இலக்கியப் பத்திரிகையும் அரசியல் பத்திரிகையும் தான் நடத்தி வந்தார். கேரள சப்தம் மற்றும் குங்குமம் ஆகியவை அந்தப் பத்திரிகையின் பெயர்கள். அவ்வாறு அவரால் நடத்தப்படும் அந்தப் பத்திரிகையில் ராமகிருஷ்ணன் என்பவர் பணியாற்றுகிறார். அவர் எனது ஊர்க்காரர்.எனக்கு இலக்கியம் அறிமுகப்படுத்தியவர்களில் ராமகிருஷ்ணனனும் ஒருவர். மற்றவர்கள் தஞ்சைப் பிரகாஷ், ஆ.மாதவன். மாதவனும் ராமகிருஷ்ணனும் நண்பர்கள். அப்போது பிலைஇபு தேடி கொல்லம் வந்த அவர் என்னிடம் ‘முதன் முதலில் சினிமா எடுத்த மனிதர் அகஸ்தீஸ்வரம் என்ற ஊரில் இருக்கிறார். அவரை நீ தான் நேர்காணல் செய்ய வேண்டும்’ என்ற தகவலைச் சொல்கிறார். காரணம் நான் அங்குதான் படித்தேன்.

இந்தத்தகவலைச் சொல்லிவிட்டு என்னிடம் ஒரு கேமராவினையும் தருகிறார்கள். ‘இதில் 12 பிலிம்கள் இருக்கின்றன. 12 படங்களையும் எடுத்துவிடு. ஏதாவது ஒன்றாவது தேறும்’. என்று தான் என்னிடம் கொடுத்தார்கள். நானும் பொய் அவரை பேட்டி கண்டேன். நான் எடுத்த மற்ற படங்கள் வீணாக, ஒரு படம் நன்றாக விழுந்திருந்தது. அதனை பிரசுரம் செய்தார்கள்.

நான் அவர் வீட்டிற்குச் சென்ற போது அவர் மட்டும்தான் இருந்தார். அவரது மனைவி எங்காவது வெளியே சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் கன்னியாகுமரித் தமிழில் மிக நன்றாக உரையாடினார். அவர் எடுத்தத் திரைப்படத்தினைப் பற்றி மிகச் சாதாரணமாகவே சொன்னார் டானியல். அவர் கேரளா பாரம்பரிய சண்டைகளைத் திரையில் காட்ட விரும்பியே அந்தப் படத்தினை எடுத்ததாகக் கூறினார். அதனை எல்லாம் நான் குறிப்பு எடுத்துக் கொண்டேன். நான் பத்திரிகைக்குக் கொடுத்த அந்த நேர்காணலை அவர்கள் மலையாளத்திற்கு மொழி மாற்றம் செய்கின்றனர். அந்த மலையாள நேர்காணலில் எனது பெயரினைப் போட்டிருக்கிறார்கள் என்பது எனக்குச் சமீபத்தில் தான் தெரிய வந்தது.

செங்கோட்டைக்கு அருகில் கணபதிபுரம் என்ற ஊரில் உணவகம் வைத்திருக்கும் ஒருவர் இதே போல அந்தக்காலத்தில் சினிமா எடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது. அவர்கள் எடுத்த படம் 54,000 அடி இருந்தது. ஆனால் படம் முழுவதும் சண்டைக்காட்சிகள் தான் நிரம்பியிருந்தன. படத்தில் கதை என்பது கிஞ்சித்தும் இல்லை. அப்போது அந்தப் படத்தின் எடிட்டர் கேட்டாராம், ‘என்னய்யா சண்டையா இருக்கு. ஒரு கதையும் இல்லையே. ஏன் சண்டை போடறீங்க. அதுக்கான காரணமும் இல்லியே’ என்று. அதனை ஓரளவு எடிட் செய்து ஒரு சினிமாவாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்..

புகைப்படம்: தமிழ் குரு (திருநெல்வேலி)
/இந்தப்  பேட்டியில்  நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சில் தேவையானதை மட்டும் இணைத்துள்ளேன்/ 🙂 
Advertisements

கைல கம்பு வந்த பின்னாடி தான் மனசுல தெம்பு வந்துருக்கு

அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் உலகின் ஏழு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நாடுகளிலும் பெண்கள் சிலம்பம் விளையாடுவதாக தகவல் இல்லை. பெண்களுக்கு “கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற ஆர்வம் இருந்தும் முறையாக கற்றுக் கொடுக்க ஆட்கள் இல்லையோ என்னவோ!

IMG_1307
முகமது சுபாகன் (எ) பாபு

ஆனால் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் ‘நாங்க இருக்கோம்’ என்கிறார் முகமது சுபாகன் (எ) பாபு.மாஸ்டர் பாபு என்றால் நெல்லை பகுதியில் ‘ஒ அவரா, இந்த பள்ளிகூட புள்ளைங்களுக்கு செலம்பம் கத்துக் கொடுப்பாரே’ எனக் கூறும் அளவு பிரசித்தம். இவர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் சிலம்ப கற்றுக் கொடுத்து வருகிறார். விஷயம் என்னவெனில் இவர் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிலம்பம் கற்றுத் தந்து மற்ற சிலம்ப ஆசிரியர்களிடமிருந்து வேறுபடுவது தான்.

நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ‘அட’ போடா வைக்கும் இந்தத் தகவலை அறிந்ததும் அவரை சந்திக்க சென்றோம். அவரிடமிருந்து வந்த ‘ஓய்வாக இருக்கிறேன் வாருங்கள் பேசலாம்’, என்ற குறுஞ்செய்திக்கு பின்னர் அவர் வீட்டுக்கு பயணப்பட்டோம்.

நாம் அவரின் வீட்டுக்கு சென்ற போது அவர் வீட்டு மாடியில் நான்கைந்து கல்லூரி மாணவிகள் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஓய்வாக இருக்கும் நேரங்களில் கூட கற்றுக் கொடுக்கிறாரே என்று தோன்றியது. ஆச்சரியப் படுத்தும் செய்தி என்னவெனில் அவர்களில் இருவர் பார்வையற்ற மாணவிகள் – ஆனால் அவர்களும் மற்ற மாணவிகளைப் போலவே லாவகமாக கம்பைச் சுழற்றியபடி இருந்தனர். உடன் இருந்தவர்களிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அவர்கள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் BA வரலாறு படிக்கும் மாணவிகள் என்று. ஒருவர் பெயர் ஜாய்ஸ்லீ.. மற்றொருவர் கனக லட்சுமி.. ஜாய்ஸ்லீ சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கோயில்பிச்சை தாய் மேரி இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள். கனக லட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேலு மற்றும் மல்லிகா ஆகியோரின் செல்வப் புதல்வி. இவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

வியப்பின் ஆசுவாசத்தோடு மாஸ்டர் பாபுவிடம், எடுத்த எடுப்பிலேயே பெண்கள் மத்தியில் சிலம்ப விளையாட்டை பிரபலப் படுத்த காரணம் என்ன சார்? என்றோம்.
பெண்களினால் உலகத்தில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்று சொன்னால் கூட அவர்களை ஊக்குவிக்கும் விதமாக எதுவும் செய்யவில்லை. இதனால் தான் எனக்குத் தெரிந்த சிலம்பத்தை ஏன் பெண்களிடம் கொண்டு சேர்கக் கூடாது என்று யோசித்து பெண் பிள்ளைகளுக்கு கற்றுத் தரத் தொடங்கினேன். இன்று மாணவியாக இருக்கும் ஒரு பெண் தான் நாளைக்கு ஒரு குழந்தைக்குத் தாயாகி குடும்பத்தை கவனிக்கப் போகிறாள். தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் அறிந்த இந்த சிலம்பக் கலைக் கற்றுத் தருவார்கள். அடுத்த சந்ததியினரும் கற்றுக் கொள்வார்கள் கலையும் அழியாமல் பாதுகாக்கப் படும்.

சிலம்பம் கற்பதனால் பெண்களுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கிறது?

வீர விளையாட்டாகவும் கலையாகவும் இருப்பது சிலம்பம் மட்டும் தான். வேறு எந்த விளையாட்டையும் நாம் கலையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய சிறப்புகளுடைய சிலம்ப விளையாட்டை SPORTS AUTHORITY OF TAMILNADU தங்கள் பார்வையில் எடுத்துள்ளார்கள். கலைப் பண்பாட்டுத் துறையில் சிலம்ப விளையாட்டை பாரம்பரிய கலைகளில் ஒன்றாக சேர்த்துள்ளனர். அதன் காரணமாக சிலம்பம் கற்கும் 18 வயது மேற்பட்ட பெண்களுக்கு கலெக்டர் மூலமாக ‘இவர் ஒரு நாட்டுப் புறக் கலைஞர்’, என்று அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை பெற்ற பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. இது போல எந்தவொரு விளையாட்டிற்கும் வழங்கப் படுவதில்லை. கலையோடு சம்பந்தப்பட்ட விளையாட்டாக இருப்பதால் தான் சிலம்பம் கற்கும் பெண்களுக்குன் இத்தகைய அளப்பரிய பயன்கள்.

பிரசவத்திற்கு, திருமணத்திற்கு பணம் வழங்கப்படுகிறது., அவர்களுக்கு எதிர்காலத்தில் பென்சன் கூட வழங்கப்படும்.. இது போல நிறைய நன்மைகள் சிலம்பம் கற்கும் பெண்களுக்கு உண்டு.

ஜாய்ஸ்லீ-யும் கனகலட்சுமி-யும் சிலம்பம் கற்பதற்காக உங்களை அணுகிய போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது?

“நான் கல்லூரி கல்லூரியாக சென்று சிலம்பம் விளையாடிக் காண்பித்தும் அதனால் கிடைக்கும் பயன்களையும் கூறுவேன், இது தான் சிலம்ப விளையாட்டு, ‘ஆர்வமிருப்பவர்கள் வாருங்கள்’, என்று அழைக்கும் போது பல மாணவிகள் வந்து ஆர்வத்தோடு சேர்ந்தார்கள். அப்படி, நெல்லை ராணி அண்ணா மகளிர்க் கல்லூரிக்கு சென்ற போது தான், இரண்டு கண்ணிலும் பார்வையில்லாத கனகலட்சுமியின் ஆர்வத்தை தெரிந்து கொண்டேன். வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருந்தார். “சார் எனக்கும் சிலம்பம் கத்துக்கணும்-னு ஆசையா இருக்கு. என்னையும் சேர்த்துப்பீங்களா?”, என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவரின் தன்னம்பிக்கையும் ஆர்வமும் என்னை மலைக்க வைத்தது. ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு சிலம்ப விளையாட்டை கற்றுத் தந்த அனுபவம் எனக்கில்லை. சரி அவர் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் போது நாம் ஏன் கற்றுத் தரக் கூடாது என்று தோன்றியது.

சிலம்ப விளையாட்டிற்கு கண் பார்வையும், கைகளும் அவசிய தேவை. ஆனாலும் கனகலட்சுமிக்கு என் உதவியாளர் ராஜு செல்வம் உதவியுடன் முதல் இரண்டு ஸ்டெப்களைக் கற்றுக் கொடுத்தேன். அவருக்கு எப்படிக் கற்றுத் தரவேண்டும் என்பதை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அவர்க்கு சொல்லிக் கொடுத்தால் புரிகிறதா என சோதனை செய்தும் பார்த்தேன்.அவருக்கும் நன்றாகவே புரிந்தது. பின்னர் தான் எனக்கு நம்பிக்கை பிறந்தது.

அவருக்கு கையை பிடித்து சொல்லிக் கொடுத்தோம். கண் பார்வை இல்லாதனால கொஞ்சம் பக்கத்துல போய நின்னு தான் சொல்லிக் கொடுக்கணும். அப்பத்தான் அவங்களுக்கு மங்களா எதோ உருவம் நிக்கற மாதிரி தெரியும். அவங்களுக்கு அந்த அசைவுகள் மட்டும் தான் தெரியும். அத வச்சே கஷ்டப்பட்டு கத்துகிட்டாங்க. இவங்க விளையாடறதா பார்த்து தான் இவங்க பிரன்ட் ஜாய்ஸ்லி -யும் வந்து சேர்ந்தாங்க.

இரண்டு மாநில குழுப் போட்டிகளில் நன்றாக விளையாடி பல்வேறு பதக்கங்களையும் நிறைய கை தட்டல்களையும் வாங்கி வந்துருக்காங்க. NCC கேம்ப் ஒண்ணுல விளையாடின போது அவங்களுக்கு on the spot 1000 ருபாய் சன்மானம் கிடைச்சது.

Kanagalatchumi & Jaaisli
கனகலட்சுமி & ஜாய்ஸ்லி

அவங்க ரெண்டு பேரோட பெத்தவங்களும் என்கிட்ட வந்து ‘எங்க மக இன்னைக்கு இந்த அளவு சாதிச்சதுக்கு நீங்க தான் சார் காரணம்’னு சொன்னது தான் நான் சிலம்ப வாத்தியாரா இருப்பதற்கான அர்த்தத்தைக் கொடுத்துச்சு.

நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். அதாவது சிலம்ப விளையாட்டில் ஆர்வமிருந்தால் மட்டும் போதும், அவர்கள் உடலில் எத்தகைய குறைபாடு இருந்தாலும் சரி அதனை சவாலாக ஏற்று சொல்லிக் கொடுக்க நான் ரெடி”, அனக் கூறும் மாஸ்டர் பாபுவின் குடும்பமே ஒரு சிலம்பக் குடும்பம் 125 வருடங்களாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

“சார் கிட்ட ரெண்டு வருசமா சிலம்பம் கத்துகிட்டு வரேன். ரொம்பவும் என்கரேஜ் பண்ணுவாரு. பொறுமையா சொல்லிக் கொடுப்பாரு. சிலம்ப விளையாட்டுக்காக பொதிகை டி.வில கிராமிய மனம் நிகழ்சிக்காக, “சிலம்பம் தெரிந்த பொண்ணுங்கள கூட்டிக்கிட்டு வாங்க”னு, சொன்ன போது எங்களையும் அழைச்சுட்டு போனாரு. இப்பெல்லாம் எனக்கு ரொம்ப தைரியம் வந்துருச்சு. வீட்டுலயும் ரொம்ப சந்தோஷ படறாங்க. சிலம்ப கத்துக்கறதுக்கு முன்னாடி இருந்த கனகலட்சுமி ரொம்ப பயந்த பொண்ணு, சிலம்ப கத்துகிட்ட பின்னாடி இப்போ இருக்க கனகலட்சுமி ரொம்ப தைரியசாலி. எல்லாத்துக்கும் காரணம் அந்த சிலம்பம் தான்”, எனக் கூறும் கனகலட்சுமிக்கு டீச்சர் ஆகவேண்டும் என்பது தான் எதிர்கால லட்சியம்.

Master Babu with his students n home
The Entire Team on his home

மாணவி ஜாய்ஸ்லி “நா இப்போ தாழ்வு மனப்பான்மை எதுவுமில்லாம தைரியமா எல்லாத்தையும் எதிர்கொல்றேன் னா அதுக்கு காரணம் நான் சிலம்பம் கத்துகிட்டது தான். எங்க அம்மா அப்பாக்கு இப்போ எங்க மேல எந்த கவலயும் இல்ல. அவங்களுக்கும் ‘நம்ம புள்ள போலசுக்குவா’னு நம்பிக்கை வந்துருச்சு. நாங்களும் மத்தவங்களுக்கு ஒரு inspiration ஆ இருக்கோம் னு நினைக்கும் போது ரொம்பப் பெருமையா இருக்கு. அதனால தான் எங்க ரெண்டு பேருக்கும் டீச்சர் ஆகணும்னு ஆசை. எங்க கிட்ட படிக்க போற புள்ளைங்க, கண் தெரியாத எங்கள பார்த்து இவங்களே படிக்கும் போது நமக்கு என்ன னு , கண்டிப்பா நல்ல படிப்பாங்க. கைல கம்பு வந்த பின்னாடி தான் மனசுல தெம்பு வந்துருக்கு சார்”, என பட படவென்று கூறி முடித்தார்.

இதற்க்கு எல்லாம் காரணமான அந்த அபூர்வ மனிதர் பாபு ஒரு மாணவியிடம் ‘நீ நல்ல சுத்துற, ஆனா பொறுமையா சுத்து. அவசரமே வேண்டாம். உன்னால முடியும்” ,என்றிட அதுவரை தவறாக சுற்றிய அந்த பெண் இப்போது நன்றாக சுழற்ற ஆரம்பித்தார். அவர் அடுத்த மாணவியைக் கவனிக்க சென்றுவிட்டார்.

ந.செல்வன் – புகைப்படக் கலைஞர் ( நேர்காணல் )

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர் புகைப்படத் துறையினில் இயங்கி வருகிறார். கும்பகோணம் அரசு நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று புகைப்படத் துறையினில் ஆர்வம் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள உலகினை கேமராவால் பதிவு செய்து வருகிறார்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய முன்னணி பத்திரிகைகளில் இவரின் 950 படங்கள் வெளிவந்துள்ளன. 350 க்கும் மேற்பட்ட கவிதை, கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இவரது புகைப்படங்களுடன் முகப்பு அட்டையினை வடிவமைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் பல தேசிய மாநில பரிசுகளை வென்றுள்ளது.

இவர் இதுவரை 7 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 15 முறை புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் ., 17 புகைப்படக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்

N.selvan
ந.செல்வன்

இவரது ஓவியனின் ஒளிப்பயங்கள் நூலில் ஒரு புகைப்படக் கலைஞனின் மன உணர்வுகளை, எண்ணங்களை, அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரின் புகைப்பட அனுபவங்களை எழுத்தாக வடித்துள்ளார். இதுவரை தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை. ந.செல்வன் தற்போது நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு இளம் புகைப்படக் கலைஞர்களுக்கும், குறும்பட இயக்குனர்களுக்கும் முன்மாதிரியாக இருந்துவரும் ந.செல்வன் அவர்களை தாமிரபரணி பத்திரிக்கைக்காக சந்தித்தோம்.

உங்க புகைப்படப் பயணத்தை எப்போது தொடங்கினீர்கள்?

ஆரம்பத்துல புகைப்படத்துறைல அவ்ளோ ஆர்வம்லாம் இல்ல. போட்டோ எடுக்க தொடங்கினது அப்படினா 1984 ல தான். அப்ப நான் குடந்தை அரசு நுண்கலைக் கல்லூரில இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருந்தேன். அப்போ தான் நம்ம துறைக்கு உதவியா இருக்குமேன்னு கேமரா வாங்கினேன்.கேமரா வாங்குன ஆறு மாசத்திலேயே என்னோட போட்டோ ஒன்னு ஜூனியர் விகடன்ல வந்துச்சு. அதுதான் எனக்கு தூண்டுகோளா அமைஞ்சுது. ஓவியத்து மேல இருந்த அதே ஈடுபாடு கேமரா மேலயும் வந்துச்சு. அன்னைக்கு தொடங்கின பயணம் தான் இன்னமும் அதே சீரா போய்ட்டு இருக்கு”,

புகைப்படம் எடுப்பவர்களுக்கு என்ன மாதிரியான தகுதிகள் இருக்க வேண்டும்?

இப்போதைய சூழ்நிலைல யார் வேணாலும் போட்டோ எடுக்கலாம், அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வேகமா வளர்ந்துருச்சு. கேமரா புல்லாவே டிஜிட்டல் தொழில்நுட்பத்துல வந்துருச்சு. நா ஆரம்பத்துல வச்சுருந்த கேமரால எல்லாமே மேன்வல் செட்டிங்க்ஸ் தான். Focus , apperture , ISO னு எல்லாமே மேன்வல் செட்டிங் தான். ஆனா இப்போ நிலைமை வேற. தகுதிகள் அப்படின்னு தனிய எதையும் சொல்ல வேண்டியது இல்ல. ஒவ்வொரு புகைப்படக்காரருக்கும் சமுதாயப் பார்வை அவசியம் இருக்கணும். அப்போதான் அவங்க எடுக்கற போட்டோவும் அத பிரதிபலிப்பவையா இருக்கும். Social Responsibility இருந்தா போதும்., கூட கேமரா டெக்னிக்கும் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் அவங்க எடுக்கற போட்டோ காலத்தை மீறி நிற்கும். பூக்கள்., இயற்கை காட்சிகள்னு எடுக்கறவங்களுக்கு கேமரா டெக்னிக்கல் தெரிஞ்ச போதும்.

நீங்க வரும் போது எவ்வாறு இருந்தது புகைப்படதுறை, இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது?

நா வரும் போது இந்த street photography அவ்வளவா பிரபலமாகாத சமயம். அப்போவெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அட்டை படம் எடுக்கறதுதான் அதிகமா இருந்தது. கூட செய்திகளுக்கான புகைப்படங்கள் எடுக்கறதும் மட்டும் தான் அதிகமா இருந்துச்சு.அந்த கால கட்டத்துல தான் ஜூனியர் விகடன் visual taste னு ஒரு பகுதி ஆரம்பிச்சாங்க. அந்தப் பகுதி தமிழ்நாடு முழுக்க இருந்த இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோளா அமைஞ்சுது. நிறைய பேரு அப்பத்தான் போட்டோ எடுக்க ஆரம்பிச்சாங்க. அவங்க இருக்கிற ஏரியால நடக்கிற விசயங்கள பிரதி பலிக்கறதா இருந்துச்சு அந்தப் புகைப்படங்கள். அவங்களோட எண்ணங்களைப் பதிவு செய்ய நல்ல ஒரு தளமா இருந்துச்சு. அப்பத்தான் street photography பிரபலமாக ஆரம்பிச்சுது. அப்பத்தான் நிறைய புகைப்படக் கலைஞர்கள் உருவானாங்க. புகைப்படம் எடுக்கறதுல ஆர்வமும் நிறைய பேருக்கு உண்டாச்சு.

இப்ப தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படத்திற்கான தளம் வேறு மாதிரியா ஆய்டுச்சு. இப்போ அதிக அளவுல புகைப்படம் எடுக்கறாங்க.அப்போ அந்த அளவுக்கு இல்ல. நிறைய திறமையான புகைப்படக் கலைஞர்கள் நம்ம தமிழ்நாட்டுல இன்னைக்கு இருக்காங்க.

நீங்கள் எழுதியுள்ள “ஓவியனின் ஒளிப்பயணங்கள்” புத்தகம் பற்றி..

1_(2)
அவர் எழுதிய புத்தகம்

தமிழ்ல கேமரா தொழிநுட்பம் பத்தி நிறைய புத்தகங்கள் இருக்கு. ஆனா எந்தவொரு பெரிய புகைப்படக்காரங்களும் அவங்க புகைப்படம் எடுத்த அனுபவம் பத்தி புத்தகம் எழுதுனது இல்ல. நா அந்தப் புத்தகத்துல என்னோட அனுபவங்களையும் புகைப்படம் எடுத்த அருமையான தருணங்களையும் பத்தி 16 புகைப்படக் கட்டுரைகளாக எழுதிருக்கேன். புகைப்படத் துறைக்கு புதுசா உள்ள வரவங்க அத படிச்சா புகைப்படங்கள் பத்தி ஒரு தெளிவு கிடைக்கும். ஒரு ஓவியன் புகைப்படக் கலைஞனாக மாறும்போது ஏற்பட்ட அனுபவம் தான் ‘ஓவியனின் ஒளிப்பயணங்கள்’.

புகைப்படத் துறைக்கு புதிதாக வருபவர்களுக்கு உங்கள் அறிவுரை?

“அறிவுரைனு சொல்ல முடியாது. இப்ப வரவங்க ரொம்ப நல்லாவே எடுக்கறாங்க.சாமோகப் பொறுப்போடு பொறுமையும் இருக்கணும்.இது ரெண்டும் இருந்தாவே அவங்க எடுக்கற புகைப்படங்கள் காலத்தையும் மீறி நிற்கும்”. என்று கூறும் ந.செல்வன் அவர்களின் புகைப்படங்கள் People Photography பிரிவைச் சேர்ந்தவை. மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் பதிவு செய்து வருபவை.

அவரின் புகைப்படங்களில் சில…


1
3

7

8

12

//தாமிரபரணி இதழுக்காக அவரைப் பேட்டி கண்ட போது//