தன் வெளிப்பாடு – ஒரு குறிப்பு

சுநீல் கங்கோபாத்யாய் எழுத்தில் வெளியான ’தன் வெளிப்பாடு’ (Atmaprakash) நாவல், சுநீல் கங்குலியின் வாக்குமூலங்களை 194 பக்கங்களுக்கு விவரிக்கிறது. மது, கஞ்சா, எல்.எஸ்.டி, செக்ஸ் என ஒருவகைக் கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது என்றால் மற்றொரு பக்கம் கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையால் சிதைந்த குடும்பங்களின் வாழ்வை அதே வலியோடு நாடகீயமாகவன்றி எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. சுநீல் மற்றும் அவனது நண்பர்களைப் போலவே நாவலுக்கு என்று எவ்வித அரசியல் சரித்தன்மையும் இல்லை. நாவலின் இறுதியில் யாரும் திருந்தும் மிகைப் பாவனைகளும் இல்லை. எதிலும் நழுவியோடும் குணவியல்பும் ’இன்றைக்கு வாழ்’ என்ற சித்தாந்தமும், சராசரி மனிதர்களின் மேல் ஒவ்வாமையும் கொண்ட பிச்சைக்காரர்களை வெறுக்கிற சுநீல், வாசக மனத்தில் பெரிய ஆத்ம சுத்தத்தையோ தரிசனத்தையோ வழங்கும் மனிதனில்லை. நாவல் தொடங்குகையில் அவனும் அவனது சகாக்களுடைய வாழ்க்கையும் எவ்வாறு இருக்கிறதோ அப்படியே முடிவிலும் இருக்கிறது. இடையே அவர்களது வாழ்வினை சுநீலின் வாயிலாக நாமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறோம்.  தன் வாழ்வில் அனைத்தையும் கண்ட சுநீல் தன் கீழுள்ள மனிதர்கள் மீது தெரிந்தே அதிகாரம் செலுத்துவதில் சுகம் காண்கிறான். பல இடங்களில் தானொரு பிற்போக்குவாதி எனக் காட்டுகிறான். அவன் மீது நமக்கும் அனுதாபமும் தோன்றுவதில்லை. எப்படியாது ஒரு தூய காதலைப் பெற்று தன் அழுக்கினைக் கழுவ எத்தனிக்கிறான். ஏற்கனவே பல ‘வாக்குமூல’ நாவல்களைப் படித்தாலும் இந்நாவல் என்னிடத்தில் தனித்த மதிப்பினைப் பெறுகிறது. காரணம் இது நிகழும் காலம். இதில், அந்நாளைய அரசியல் கொதிநிலை ஸ்தூலமாகப் பதிவு செய்யப்படவில்லை எனினும், மனிதர்களின் சிதறுண்ட மனங்களினூடாக ஒரு சித்திரம் வரையப்படுகிறது. அட்டைப்படத்தில், நீண்ட கம்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மதிலை உடைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் தப்பிக்க முயல்கிறான். அந்தச் சிறுவனை சுநீலாகவும் அந்த கம்புகளின் மதிலை சமூகமாகவும், அவனுடைய சக மனிதர்களாகவும் கொள்ளலாம்.

தன் வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்தியாய்

தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி

National Book Trust, India.

First Edition 1996.

12

 

Advertisements

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பினை, முதல் 5 கதைகள் ஒரு நிறத்திலும் அடுத்த 5 கதைகள் மற்றொரு நிறத்திலுமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

unnamed

முதல் 5:

அனுபவப்பகிர்வுகள். கண்ட கேட்ட உணர்ந்த சொல்லப்படாத மனிதர்களின் கதைகள் என வகைமைப்படுத்தலாம். ’மனிதர்களின் கதை’ என்று சற்று அழுத்தியே சொல்லலாம். இத்தொகுப்பில் தெரியும் மற்றொரு விசயம், எழுத்தாளர் பழைமையையும் நவீனத்தையும் மோதவிடும் தருணங்கள்.

முதல் 5 கதைகளில், சில கதைகள் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாமல் கடக்கின்றன. ஆனால், ‘குறுதிச்சோறு’ மற்றும் ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதைகள் வாசிப்பில் நல்ல அனுபத்தைத் தருகின்றன. ’குறுதிச்சோறு’ மிக முக்கியமான பதிவாக இருக்கிறது. ஆனால் அதன் வடிவத்தில் மனம் ஒப்பவில்லை. ஆஹா.. இவ்வளவு நல்ல பின்புலம் இப்படி வீணாகிவிட்டதே என்று தோன்றியது. அந்தத் தொன்மம். ஒரு நாவலாகவே விரித்தெழுதப்படவேண்டிய களம் இது.

‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதை மிகச் சிறப்பான அனுபவத்தினை தந்த கதை. மேற்சொன்னமாதிரி இக்கதையிலும் பழமையும் நவீனமும் மோதும் கணம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. லெட்சுமண செட்டியார் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து அவ்வாழ்க்கையை ஒரு திணறலுடன் எதிர்கொள்கிறார். அவர் செய்துவந்த கணக்கு எழுதும் வேலை, கணினி என்ற நவீன வஸ்துவின் வரவால் இல்லாமல் போய்விடுகிறது. அவரது இருப்புக்கு எவ்வித அர்த்தமுமில்லை. ஆனால் வீட்டிலுள்ள குழந்தை வள்ளி இவருடையே பாடல் கேட்டால் தான் தூங்குகிறாள். அது அவருக்கு ஒருவித பெருமையையும் தன் இருப்பிற்கான அர்த்தத்தையும் தருவதாகவே உணர்கிறார். அதற்கு வேட்டு வைக்கவும் ஒரு நவீன வஸ்து செல்போன் வடிவில் குடும்பத்துள் நுழைகிறது. லெட்சுமண செட்டியார் பாடலுக்கும் இனி வேலையில்லை. வேதனையில் உடைந்து கதவை அடைத்துக்கொண்டு அழுகிறார். ஆனால் இக்கதை இங்கேயே (அழுவதோடு) முடிந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், ஆசிரியர், இத்தொகுப்பிலேயே ஒளியுள்ள கதையாக அடுத்த சில வரிகளில் மாற்றிவிடுகிறார்.

23559446_10214094575785957_6169924402894763461_n
சுனில் கிருஷ்ணன்

அடுத்த 5:

முதல் 5 கதைகளில் அனுபவங்களைச் சித்தரித்த சுனில், அடுத்த 5 கதைகளில் கண்டடைதலைக் கதையாக்கியுள்ளார் என்று சொல்லலாம். ’2016’ கதை, சுவாரசியமான புனைவாக்கம். ’பேசும் பூனை’ தொழிநுட்பம் மனித வாழ்வைச் சூறையாடும் வலியைப் பதிவு செய்கிறது என வாசித்தால் கடைசி வரியில் ஒரு புதிரை வைத்து சர்ரியலிஸ அந்தஸ்து பெற்றுவிடுகிறது அக்கதை.

’கூண்டு’. தொகுப்பில் மிகவும் கவர்ந்ததொரு கதை. கதை நிகழ்வது post apocalyptic களமென்றாலும், சுனில் அதனைச் சித்தரிப்பதோ மன்னர் காலத்தில். பொதுவாக மனிதர் வாழ மோசமான தகுதியில்லாத அச்சம் ஏற்படுத்தக்கூடிய சமூகமாக தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமுள்ள எதிர்காலமே சித்தரிக்கப்படும். (Black Mirror சமீபத்திய உதாரணம்) ஆனால், இங்கு மன்னர் காலம். இதுவொரு சிறப்பான முரண்.

‘திமிங்கலம்’ கதையும் மனிதர் வாழத் தகுதியே இல்லாத கொடூரமான எதிர்காலத்தில் நடக்கிறது. இக்கைதையிலொரு ஆகச்சிறந்த இடமொன்று வருகிறது. அன்பு, மனிதபிமானம், விட்டுக்கொடுத்தல் என எவையும் இல்லாத அந்த உலகத்தில், ஒரு கட்டத்தில் மனித மனங்கள் குற்றவுணர்ச்சி கொள்கின்றன, இதுவரையிலான dystopian வகைப் புனைவுகளில் என் மனதில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது இக்கதை.

இரண்டாவது 5 கதைகள் சுனில், கண்டடைந்த தத்துவப்பார்வையையும், உலகில் வீழ்ந்துவிட்ட விழுமியங்களையும், சம கால அரசியல் கொதிநிலைகளையும் கொண்டு படைத்துள்ளார் எனலாம்.

அனைத்து கதைகளிலும் ஒரு வித இருன்மை (வேதனையாகவே, வன்முறையாகவோ, அறமற்ற செயல்களாகவோ) இருந்துகொண்டே இருக்கிறது. இருன்மைக்கு நவீன கால உலகமும் சிந்தனையும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. தொகுப்பிலேயே இருன்மை இல்லாத ஒரே கதை என ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதையைச் சொல்ல முடியும், அதே போல முதல் கதைக்கும் கடைசி கதைக்கும் மொழியின் செறிவும் முற்றிலுமாக மாறி முதிர்ச்சியான நிலையை அடைந்திருக்கின்றன. முந்தைய கதைகளில் இருந்த தயக்கமின்றி தீர்க்கமான பார்வையுடன் நம்பிக்கையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சுனில் இக்கதைகளை அவை எழுதப்பட்ட காலத்தின்படி வரிசைப்படுத்தவில்லை எனினும், அவர் ஏன் இப்படி வரிசைப்படுத்தியுள்ளார் என்பதை உணர முடிகிறது. அவரது அடுத்த புனைவு எதைப்பற்றியதாக இருக்கும்? எந்தப்பார்வையில் எழுதுவார் என இப்போதே ஆவல் அதிகமாகிறது. புத்தகத்தை வாசித்து முடிக்கையில் அவரை நெருக்கமாக உணரமுடிகிறது. வாசகனுக்கும், ஆசிரியனுக்கும் இடையே உருவாகும் இணைப்பு அது.

அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

.

//கதைகள் படித்தவுடன் தோன்றியவை.//

28.12.2017

வாசிப்பு: யுகியோ மிஷிமா எழுதிய Confessions of a Mask

Confessions of a Mask – Yukio Mishima (Japanese)

English Translation by: Meredith Weatherby

Publication: A NEW DIRECTIONS BOOK

1  

யுகியோ மிஷிமா எழுதிய Confessions of a Mask என்ற ஜப்பானிய நாவல், “Beauty is a terrible and awful thing! It is terrible because it never has and never can be fathomed, for God sets us nothing but riddles…” என்ற தஸ்தயாவ்ஸ்கியின் the brothers Karamazov என்ற அதியற்புத நாவலிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோளுடன் தொடங்குகிறது. இப்போதே இந்த நாவல் எதனைக் குறித்து பேசப்போகிறது என்பதனை ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

 

62794

 

எதிலும் நிலையான ஆர்வமோ பிடிப்போ இல்லாத தன்னையொத்த விடலைகளிடமிருந்து வேறுபட்டுத் தெரியும்; மன அலைகளைப்புகளில் துயருற்ற ஆன்மாவின் வாக்குமூலங்களை நிதானமாக அவனுடைய (கொச்சன்) பார்வையிலேயே பதிவுசெய்கிறது. அதாவது வாசகருடன் நேரடியாக ‘நேயர்களே!..’ என விளித்து உரையாடுகிறான். அவனது பிறப்பு முதலே விநோதமான குழந்தையாக ஆரோக்கியமற்ற நோஞ்சான் உடலையும் முரட்டுத்தனம், வன்முறை, ஆண்மை ஆகியவற்றில் மையல் கொண்டவனாக வளர்கிறான். அவனுக்கு எதில் ஆர்வமிருக்கிறது என்பதனைக் கண்டடையவே அவனுக்குப் பலகாலம் பிடிக்கிறது. ஆனால் உள்ளுக்குள் ஒரு மாதிரியாகவும் வெளியே பொதுவெளிக்கு ஒரு முகமூடி அணிந்தும் வாழ்கிறான். அத்தகைய முகமூடியை வாசகன் முன் கழட்டிவிட்டு தனது குற்றங்களுக்கு குற்ற உணர்ச்சிக்கு ஆறுதல் தேட முயல்கிறான். உண்மையில் அவன் தேடுவது ஆறுதலும் இல்லை. அவனது வாக்குமூலத்தில் ஒரு கழிவிரக்கம் கோரும் தொனியும் இருப்பதில்லை. வாசக மனம் இதனை எப்படி புரிந்துகொள்கிறதோ அப்படி இந்த நாவலை அணுகிக்கொள்ளலாம். நாவலில் தொடக்கம், அவனது பிறப்பு வளர்ப்பு ஆகிய சூழல்களை விளக்குகிறது. பின்பு ஆண்மை, வன்முறை, தனிமை ஆகியவற்றை அவன் எதிர்கொள்வதைக் காட்டுகிறது. பிறந்த சில நாட்களிலேயே செத்துப்பிழைக்கிறான். தாய் தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்டு அவனது பாட்டி தாத்தாவுடன் வாழ நேர்கிறது. நோய்வாய்பட்ட / வினோதமான / மர்மம் நிறைந்த பாட்டியின் அரவணைப்பில் நோய் நெடி பீடித்த அறையில் தனது வாழ்வைத் தொடங்குகிறான்.

பிறந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அவர்களுடைய மூளையிலிருக்கும் நினைவுசேகரம் செயல்படத் துவங்காது என்பதே அறிவியல். ஆனால் இவனுக்கோ தான் பிறந்தது முதல் நிகழ்ந்த அனைத்து விடயங்களுமே அப்படியே நினைவிலிருக்கின்றன. இவன் தன் சிறுவயது நினைவுகளை பெரியவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது அவர்கள் இவனைப் பகடி செய்கிறார்கள். அறிவியல் ரீதியாக அது சாத்தியமில்லை என்றும் இவனுக்கு விளக்கம் தரமுயல்கிறார்கள். ஆனால் இவனுடைய முதல் வாக்குமூலமே தனக்கு தான் பிறந்த தினம் முதல் நடந்த அனைத்துமே நினைவிருக்கிறது என்றும் அதனை எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய நினைவு சேகரத்திலிருந்து மீட்டெடுத்து மிதக்கவிடமுடியும் என்றும் கூறுகிறான்.

மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு இரண்டு வருடங்கள் கழித்தும், இவனது தாத்தா சிலரின் பேச்சைக்கேட்டு தனது ஒட்டுமொத்த சொத்தையும் இழப்பதற்கு இரண்டு வருடம் முன்பாக இவன் பிறக்கிறான். (I am not speaking euphemistically: until now I have never seen such a totality of foolish trust in human beings as that my grandfather possessed) இவனுடைய தாத்தா தனகுக்க் கீழே பணியாற்றியவர்களின் தவறான செயல்களுக்குப் பொறுப்பேற்று அவருடைய கௌரவம்மிக்கப் பணியினைத் துறக்க நேரிடுகிறது. அவனது குடும்பமே நடுத்தெருவிற்கு வருகிறது. இதன் முடிவாக டோக்கியோ நகரத்தின் ஒரு பழைய வாடகை வீட்டில் வாழ ஆரம்பிக்கிறான். அவனது பாட்டியுடன் இவன் வசிக்க இவனது தாய் தந்தையர் இரண்டாவது மாடியில் வசிக்கிறார்கள். அங்கு அவனுக்கு ஒரு வயது இருக்கும்பொழுது படியிலிருந்து தவறி விழுந்துவிடுகிறான். அவனைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பாட்டி தியேட்டருக்குச் சென்றிருக்க, அவனது தாய் மற்றும் உறவினர்கள் ஓய்வுநேர களிப்பில் ஆழ்ந்திருக்க இந்த சம்பவம் நிகழ்கிறது. பாட்டி தொலைபேசி மூலம் வரவழைக்கப்படுகிறாள். அவனுக்கு எதுவும் ஆவதில்லை. அதன் பிறகு பாட்டியுடனேயே வாழ்கிறான். அவனுக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது காபி நிறத்தில் எதையோ வாந்தி எடுக்கிறான். பின்பு பேச்சு மூச்சில்லாத ஜட நிலை. இனி செய்வதற்கொன்றுமில்லை என குடும்ப மருத்துவரும் கைவிட அனைவரும் துக்கத்தில் வீழ்கின்றனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவன் சிறுநீர் கழிக்க அனைவர் முகத்திலும் ஒரு நிம்மதி.. அப்போது முதலே அடிக்கடி காரணமில்லாமல் நோயில் வீழும் மிக பலவீனமான சிறுவனாக வளர ஆரம்பிக்கிறான்.

2

அவனது சிறு பிராயத்தில் அவன் பார்த்த விஷயம் ஒன்று அவன் மனதில் மிக ஆழத்தில் சில கீறல்களை ஏற்படுத்தி அவனைவிட்டு அகலாமல் இறுதிவரை தொடர்கிறது. அவனது எதிர்கால குணவியல்புகளைத் தீர்மானிப்பதாக இருக்கிறது அந்தக் காட்சி. (Led by the hand od the unremembered woman. I was climbing the slope toward home. Someone was coming down the slope, and the woman jerked my hand. We got out of the way and stood waiting at one side) செறிவான அந்தக்காட்சி, மிக உன்னிப்பாக இவனால் கவனிக்கப்படுகிறது. (this very image is the earliest of those that have kept tormenting and frightening me all my life) “அது, ஒரு இளைஞன், அவன் மேலிருந்து பாதை வழியாக கீழே, இவனும் ஒரு பெண்மணியும் ஒதுங்கி நின்றிருந்த (அவனுக்கு பாதைவிட்டு) இடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். வியர்வை வலிந்து காய்ந்து போன அவன் மிக அழுக்கான அங்கிகளை அணிந்திருந்தான். அவனது ஆண்மை நான்கு வயது சிறுவனான இவனைப் பெரிதும் கவர்கிறது. முதன் முதலாக வலிமையை அதன் திமிரும் முருக்கை அழகினை காண்கிறான் இவன். அந்த இளைஞன் மூலமாக அது இவனுக்கு காட்டப்படுகிறது எனச் சொல்லலாம். அதனைப்பர்ததும் ‘நான் அவனைப்போல மாறவேண்டும்’, ‘அவனாக நான் இருக்க வேண்டுமென’ இவன் நினைக்கத் தொடங்குகிறான். அந்த இளைஞனின் தொழிலுக்குப் பின்னேயுள்ள அந்த துன்பம் இவனைக் கவர்கிறது. இறுதிவரை இவன் ரசிக்கும் ஒவ்வொன்றின் பின்னேயும் துன்பம் இருந்துகொண்டே இருக்கிறது. அல்லது துன்பமிகு ஒன்று இவனுக்கு விருப்பமாகிவிடுகிறது. அன்று முதல் அந்த இளைஞனைப்போல ஆகவேண்டுமென தீர்மானம் கொள்கிறான். ஆனால் அடுத்து அவனுடைய காதல் மற்ற தொழில் செய்பவர்கள் மீது மாறுகிறது. எதிலும் அவன் நிலையான பற்றினைக் கொண்டிருப்பதில்லை. தான் எதில் பற்று கொண்டிருக்கிறோம் என்பதனையும் அவனால் தெளிவாகக் கண்டுணர முடிவதில்லை.

ஒரு படப்புத்த்கத்தை வைத்து இன்னுமொரு நினைவு. ஒரு போர்வீரன் குதிரையில் அமர்ந்து போரிடும் காட்சி இவனைப் பெரிதும் கவர்கிறது. அப்போது அவனுக்கு ஐந்து வயது. அவன் தினமும் அந்தப்பக்கத்தை எடுத்துவைத்து நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறான். பின்னர் ஒரு சமயம் அந்தப் படத்திலிருப்பது ஒரு பெண் எனத் தெரிந்ததும் (அதனை அவனுடைய செவிலிப்பெண் மூலமாக அறிந்துகொள்கிறான்) மிகுந்த சுயவெறுப்பும் அதனைப் போய், ஒரு பெண்ணைப் போய் இரசித்துவிட்டோமே என்று அருவருப்பும் கொள்கிறான். (I felt as though I had been knocked flat. The person I had thought a he was a she. If this beautiful knight was a woman and not a man, what was there left?)

அடுத்ததாக வியர்வை நாற்றம் மீது இவன் கொண்டிருக்கும் பிரேமையை விளக்கும் மற்றுமொரு நினைவு அவனது வீட்டு வாசலில் வரிசையாக நடந்து செல்லும் போர் வீரர்களை வெறிக்க வெறிக்க பார்த்தது; திடும் திடுமென நிலத்தில் ஓங்கி மிதிபடும் பூட்ஸ்களின் சப்தம், இருகிய அங்கி, தோளில் தொங்கும் துப்பாக்கி ஆகியவை எந்தக் குழந்தையையும் வசீகரித்துவிடும்தான். ஆனால் இவனுக்கோ அவர்களுடைய வியர்வை நாற்றம் தான் வசீகரிக்கும் சங்கதியாக இருக்கிறது. கொச்சன் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்கிறான். வாழவேண்டுமெனில் தனக்கிருக்கும் விநோத இச்சைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் மறைக்கவேண்டும் என்பதைத்தான். அப்படியே வாழவும் செய்கிறான். நமக்கு எவ்வளவு கட்டுபடுத்தியும் கொச்சன் மீது பரிதாபம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அவனது இந்த நிலைக்கு இங்கு யார் மீதும் குற்றம் சுமத்த இயலாது என்பது இன்னொரு வேதனை.

3

இப்படியே அவனது பால்யகால நினைவுகளை அவன் உள்ளுக்குள் ஒருவனாகவும் வெளியே ஒருவனாகவும் வாழ்ந்த வேடத்தைக்களைந்து வாக்குமூலங்களாகக் கூறிச் செல்கிறான். ஆனால் இறுதிவரை அவனுக்கு மரணம் குறித்த பயம் மட்டுமே அகல்வதேயில்லை.

சிறுவயதில் அவனுடைய பாட்டியால் அண்டைவீட்டு சிறுவர்களுடன் விளையாடுவதிலிருந்து தடுக்கப்படுகிறான். காரணம் அவர்களுடன் சேர்ந்தால் கெட்டுப்போய்விடுவான் என அவனது பாட்டி நம்புகிறாள். அவன் மென்மேலும் சொல்லிச்செல்லும் நினைவுகள் அவனுக்கு ஆண்மை மீதும் வன்முறை மீதும் இருந்துள்ள பிரேமையை நமக்குச் சொல்கின்றன. சமூக வாழ்க்கைக்குப் பழகாத அதன்மீது விருப்பமில்லாத மனிதனாக, அனால் பொதுவில் சாதாரணமாக முகமூடி அணிந்து வளர்கிறான் கொச்சன்.

இடைநிலைக் கல்விக்காக பள்ளி சென்ற காலத்தில் அவனனுக்கு (வாசகருக்கும்) பாலியல் இச்சைகள் அடையாளம் காணத்துவங்குகின்றன. ஒருவாறாக தானொரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதை கொச்சன் உணர்வது இந்தக்காலகட்டத்தில் தான். அப்போதும் ஒரு குழப்பம் அவனிடமிருந்துகொண்டே இருக்கிறது. ஓமி என்ற இவனது வகுப்பு மாணவன் மேல் இவன் கொள்ளும் காதல் அடுத்ததாக வாக்குமூலத்தில் வருவது. ஓமி தன் வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறான். இவனைவிட இருவயது மூத்தவன். பல பெண்களுடன் அவனுக்கு உறவு இருக்கிறது. இந்த வயதிலேயே பெண்களுடன் கலவியில் ஈடுபடுவதும், பெரியமனிதத் தோரணையும் இவனை வெகுவாக அவன்பால் ஈர்க்கிறது. இந்தகாலகட்டத்தில் கொச்சன் பாலியல், வன்முறை ரீதியாக சதாசர்வகாலமும் கற்பனையில் ஆழ்ந்திருக்கிறான். ஓமி மீது கொச்சன்  கொண்ட காதல் முறியும் இடம் மிக கொச்சனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

அடுத்ததாக இருபது வயதில் ஒரு பெண்ணுடன் ஏற்படும் உறவு. அவளை மிகவும் / மனதார நேசிக்கிறான் கொச்சன். ஆனால் அவள் மேல் காமமோ, அவளை நிர்வாணமாகப் பார்க்கவேண்டும் என்ற உந்துதலோ கொச்சனுக்கு சிறிதுமில்லை.        பொதுவாகவே இது அவன் வயது பையன்களுக்குத் தோன்றுவதுதான். ஆனால் நன்றாக துளிரும் அந்த உறவை இவனாக முறிக்கிறான். மீண்டும் அதனைத் துளிர்க்க வைக்க எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் முடிவதில்லை. இறுதியாக, அத்தனைக்குப் பிறகும் தனக்கு எதில் ஆர்வம் / பிரேமை என அவன் கண்டுகொள்வதுடன் நாவல் முடிகிறது.

நாவலின் இறுதியில் ஒரு நடன அரங்கத்திற்கு சொனோகுவை அழைத்துச் செல்கிறான் கொச்சன். அங்கு காட்டுமிராண்டிதனமாக இளைஞர்கள் போதைவெறியில் ஆடிகொண்டிருக்கின்றனர். சொனோகுவை இவன் திருமணம் செய்ய மறுத்தாதால் அவளுகொன்றும் நஷ்டமில்லை. அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்கிறாள். திருமணத்திற்குப் பிறகும் கொச்சனை அடிக்கடி சந்தித்து வருகிறாள். அனால் அவர்களுக்குள் இருந்த எதோ ஒன்று என்றோ முறிந்துவிட்டதாகவே அவளது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அந்த நடன அரங்கினில் வைத்து அவள் அவனிடம் ஏன் என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை எனக்கேட்கிறாள். அவன் அதற்கு சரிவர பதில் சொல்வதில்லை. அவன் பார்வை முழுக்க ஆடைகளைக் களைந்து அமர்ந்திருக்கும் ஒரு இளைஞன் மேலேயே இருக்கிறது. அப்போது அதனைக் கவனிக்கும் சொனோகு ஏன் அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்துகொல்கிறாள். அங்கு அவளைக் கூட்டிவந்திருக்கக்கூடாது என வருந்தும் கொச்சன் அவளை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான். இருவரும் நடக்கின்றனர். நாவல் முடிகிறது.

பெண்கள் மீது சிறிதும் இச்சை இல்லாதவன் என்றாலும் கொச்சன் மற்றவர்கள் முன்னால் தன்னைத் ‘தெளிவானவனாக விநோதமற்ற அனைவரையும் போன்ற மனிதனைப்போல’ காட்டிகொள்ள இந்த உறவில் ஈடுபடுவதை வாசகமனம் உணர்ந்துகொள்ளும். நாவல் முழுக்க இவன் இந்த ‘சாதரணன்’ வேடமணிவதை உணர முடிகிறது. பெண்கள் மீது தனக்கு ஆர்வமிருக்கிறதா என அவன் சில சோதனைகளைச் செய்து பார்ப்பான். உதாரணமாக நிர்வாணப் பெண்களின் படங்களை நெடுநேரம் உற்றுப் பார்ப்பது. அதில் தோல்வியே கிட்டும்.

சொனோகோ (கொச்சனின் பள்ளித்தோழனின் தங்கை)  மேல் தவறேதும் இருப்பதில்லை. இவன்தான் அவளைத் தூண்டிவிட்டுவிடுகிறான். பின்பு அமைதிகொள்கிறான். வேண்டிய பரிசெல்லாம் கொடுத்து, நகைச்சுவைகள் பகிர்ந்து, பாதுகாப்பாக உணரச்செய்து, ஆளில்லா இடங்களில் மாலைநேரத்தில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்தால் யாருக்குத்தான் காதல் வராது. அவளுடைய காதல் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவளைவிட்டு விலகுகிறான் கொச்சன். காரணம் அந்த உறவே இவனுக்கு புதிராக இருப்பதுதான். அதனை மறக்க நினைக்கிறான். ஒரு பெண்ணை திருமணம் செய்வதை அவனால் கற்பனை கூட செய்துகொள்ள முடியவில்லை.

4

தன் நினைவுகளை எடுத்து அடுக்கி தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்கிறான் கொச்சன். ஒருமுறை நண்பன் விபச்சார விடுதிக்கு அழைத்துப்போக (பெண்ணுடன் உடலுறவு கொள்வது ஒரு ஆணுக்கு முக்கியமானது என அவன் இவனுக்கு உணர்த்துகிறான். பல நாட்களுக்குப் பிறகு கொச்சனும் அதற்குச் சம்மதிக்கிறான்) அங்கு சென்றதும் தன்னால் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய இயலாது என்பதை அறிந்து மனமுடைகிறான். கொச்சனின் நண்பன் அவனுடைய நண்பனுடன் இவனை வீட்டில் வந்து பார்க்கிறான். இயல்பாக பேச்சு சென்றுகொண்டிருக்கையில் நண்பனின் நண்பன் தான் எத்தகையப் பெண்ணாக இருந்தாலும் பதினைந்து நிமிடத்தில் வீழ்த்துவேன் என்று அவனுடைய காமக் கதைகளைச் சொல்லத்தொடங்க இவன் வேதனையில் துடிக்கிறான். அந்த நண்பனின் நண்பன் இறுதியாக ஒன்றைச் சொல்கிறான் ‘என்னால் இதனை அடக்கவே முடியவில்லை. சமயங்களில் நான் ஏன் ஆண்மையற்றவானாக இருந்திருக்ககூடாது என்று நினைப்பேன்’ என்கிறான். அந்த வார்த்தைகள் இவனை மேலும் காயமுறச் செய்கிறது. அன்றிரவு தூக்கமின்றி படுக்கையில் கதறி அழுகிறான். நம்மை உலுக்கும் பகுதி அது.

தனது உண்மையான நிலையை உணராத ஒரு மனிதனின் நிலையும், உணர்ந்தும் முகமூடி களையாமல் வாழும் ஒரு மனிதனின் நிலையும் நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மிகச்செறிவான மொழி மிஷிமாவினுடையது. மொழிபெயர்ப்பில் பொதுவாக இந்த செறிவுத்தன்மை மங்கிவிடும். ஆனால் இது ஆங்கிலம் கண்டும் மூல மொழிக்குரிய வனப்பு குலையாமல் இருக்கிறது. இதனை மூல மொழியில் வாசித்திருந்தால்தான் சொல்லமுடியும் என்றில்லை. ஒரு உள்ளுணர்வு தான். மேலும் இந்நாவல் ஆங்கிலத்திலேயே இப்படியென்றால், ஜப்பானிய மொழியில் எப்படியிருக்கும் என்று தோன்றுகிறது. தாஸ்தயவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் மட்டுமல்ல அவரது தாக்கம் இல்லாமல் 20 நூற்றாண்டில் வேறு ஏதேனும் எழுதப்பட்டிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. Confession / சுயவிசாரணை வகை இருத்தலியல் நாவல்கள் பெரும்பாலும் வாசிப்பதில்லை என்றாலும் இந்த நாவல் மனதிற்கு நெருக்கமான நாவலாகவும் என்னுடைய விருப்பபட்டியலில் எப்போதுமிருக்கும் நாவலாகவும் ஆகிறது. மிகவும் தொந்தரவு செய்யக்கூடிய புத்தகம் என்றாலும் ஏனோ படித்துமுடித்தவுடன் இதுவரை நான் அனுபவித்திராத ஒரு அமைதிக்கு இட்டுச் செல்கிறது.

5

இரண்டாம் உலகப்போர் ஜப்பானில் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் நாவலும் தீவிரமடைகிறது. எப்போது விமானங்கள் வரும் அவை எப்போது குண்டுமழை பொழியும் என மக்கள் அச்சத்திலிருந்தனர். இதனால் பல குடும்பங்கள் சிதைகிறது. கொச்சன் போரில் பணியாற்ற அழைக்கப்பட்டு அவனது உடல்நிலை காரணமாக மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படுகிறான். அப்போது அவனது சகோதரி இறந்துவிடுகிறாள். தான் மற்றவர்களைப் போல கதறியழுததை ஆச்சரியமுடன் நினைவுகூர்கிறான் கொச்சன். அவளது மரணம் வெகுவாக இவனைப் பாதிக்கிறது. நாவல் ஆரம்பிக்கையில் மையநீரோட்ட கலாசாரத்திலிருந்து வெளியே இருக்கும் சிறுவனாக வரும் கொச்சன் இறுதிவரை அனைத்திலிருந்தும் விலகியிருக்கும் மனிதனாகவே நாவல் முடிவடைகிறது.

7

கார்த்திகைச் பாண்டியன் (காபா) இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. அந்தப்பிரதி எனக்கு கிடைக்கவில்லை. வாங்குவதற்கு பணம் ஒதுக்கவும் முடியவில்லை. ஆங்கிலத்தில் மின்னூல் கிடைத்ததால் எளிதாக வாசிக்கமுடிந்தது. ஒரு முறை ஒரு இலக்கிய நிகழ்வில் தன்னை ‘முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவல் எப்படி பாதித்தது என்று குறிபிட்டார். சார்லஸ் புகோவ்ஸ்கியின் அஞ்சல் நிலையம் அறிமுகக் கூட்டம் , த மு எ க ச ஏற்பாடு செய்த கூட்டம் என்று நினைவு. அப்போது முதலே அந்த நாவலைப் படிக்கவேண்டும் என்று ஆவல்கொண்டிருந்தேன். இதனை அறிமுகப்படுத்தியமைக்கு / தமிழப்படுத்தியமைக்கு கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பேசும்போது ‘மிஷிமா தற்கொலைக்கு பயந்தவன். ஆனால் கடைசில தற்கொலை பண்ணிக்கிட்டு தான் இறந்தான்’ என்றார். இந்த நாவலின் கொச்சன் கூட தற்கொலை / மரணத்திற்கு பயந்தவனாக, வன்முறை மற்றும் விநோத கற்பனைகளில்.ஈடுபடும் ஓரினச்சேர்க்கையாளனாக வருகிறான். இதனையே மிஷிமாவின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதியதாகவே கொள்ள முடிகிறது. முழுப்புனைவாக இப்படியொரு நாவலை எழுதுவதென்பது சாதாரணகாரியமில்லை. மிஷிமாவின் மற்ற படைப்புகளைப் படிப்பதற்கு அச்சமாக இருக்கிறது. இதுதந்த அனுபவமே போதும் என்றும் தோன்றுகிறது.அவரது மரணம் குறித்து வாசிக்க நேர்ந்தது. என்னவொரு மனிதன்!!

இன்னும் இருக்கிறது.

 

 

போர்ஹேவின் புத்தக பட்டியல்

//நீங்கள் புத்தகம் வாசிப்பவராக இருந்தால் இந்த உதவியினை பலர் உங்களிடம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. அதாவது உங்களுக்குப் பிடித்த புத்தகங்களின் பட்டியலை அவர்கள் எதிர்பார்பார்கள். பட்டியல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். பட்டியலுக்கு எதிரானவர்களும் இருக்கிறார்கள். பட்டியல்கள் நம்மை மற்றும் நம் சிந்தனையின் விரிவை, தேடலைக் குறுக்கிவிடக்கூடியவை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதேபோல ஒரு புத்தக பட்டியலையோ சினிமா பட்டியலையோ முழுதாக பார்த்து / படித்து முடித்துவிட்டால் நாம் மாஸ்டர் ஆகிவிடவும் முடியாது. ஒரு பட்டியல் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது குழுவின் அனுபவம், இரசனை, அணுகுமுறை சார்ந்து உருவாகக்கூடியவை. உதாரணத்திற்கு தமிழ் புனைவெழுத்தில் எனக்கு எழுத்தாளர் பா.வெங்கடேசனை மிகவும் பிடிக்கும். எனக்கு அவரது விருப்பமான புத்தக பட்டியலை அறிந்துகொள்வதில் இயல்பாகவே ஆர்வம் ஏற்படும். அவரிடம் நான் அப்படிக் கேட்டு ஒரு பட்டியல் வாங்கினேன். அது அவருடைய ரசனை, அணுகுமுறை, அனுபவத்தில் உருவான பட்டியல். மேலும் புத்தக பட்டியல்கள் புதையலைப் போன்றவை. தேடல் உள்ள வாசகராக இருப்பின் அப்பட்டியலிலுள்ள இழைகளைப் பிடித்து புதிது புதிதான உலகங்களைக் காண முடியும். இல்லையெனில் தட்டையாக பட்டியலை வாசித்துமுடித்துவிட்டு அடுத்த பட்டியலுக்கு செல்ல நேரிடும்.

அப்படி புனைவுலகின் உச்சபச்ச சாத்தியங்களை உடைத்தவரும், பல்வேறு பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்தவருமான போர்ஹே அவர்கள் தயாரித்த பட்டியல் இது. போர்ஹேவை நெருக்கமாக உணரும் வாசகர்களுக்கான பட்டியல் இது. அவருக்கு பிடித்தமான 100 புத்தகங்களைத் தொகுக்கும் முன்னரே அவர் இறந்து போனது ஒரு துரதிஷ்டம் தான்//

1348616597421.cached
Borges

 

Below piece was written by Vasu Devan as a status on his facebook account:

நடமாடும் பிரபஞ்ச நூலகம் என போர்ஹேவுக்கு ஒரு பெயர் உண்டு. ஏனெனில் அவர் வாசிக்காத நூல் இல்லை..தன் வாழ்நாளின் பெரும் பகுதி நேரத்தை நூலகத்தில் செலவழிட்டவர். அதனால்தான் அவர் கதைகளை புரிந்து கொள்வதற்கு தனி அகராதியே வெளியிட்டார்கள்.. அவருடைய இறுதிக்காலத்தில் அர்ஜெண்டைனா பதிப்பகம் Hyspamerica அவரிடம், உலகின் அதிமுக்கிய 100 நூல்களை பட்டியலிட சொன்னார்கள். போர்ஹே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.

உலக இலக்கியத்தை தெரிந்து கொள்வதற்கு அவசியம் இந்த நூறு நூல்களை வாசிக்கவேண்டும் என அர்ஜெண்டைனா பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியிலும் உரையாடினார். வாசிப்பு என்பது பயிற்சி என்றும் இந்த பழக்கத்தை இறுதிவரையில் விடக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். எழுதுவதற்கு முன், வாசிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார்.( தமிழ் எழுத்தாள கலைஞர்கள் கவனிக்கவும்).. இந்தப் பட்டியல் பார்த்து உலகமே வியந்தது…பிரமிக்க வைக்கும் நூல் பட்டியல்… (இது தரவரிசை பட்டியல் இல்லை). இதில் அவருடைய மேதமை தெரியும்…பட்டியலில் உள்ள பல பெயர்கள் புதிராகவும்/புதிதாகவும் இருக்கும்… பண்டைய கிரேக்க இலக்கியம், 8ம்நூற்றாண்டு ஜப்பான் கவிதைகள், ஆயிரத்தொரு இரவுகள், திபெத்திய புத்த நூல், மகாபாரதம் என அவரின் வாசிப்பின் ஆழம் திகைக்க வைக்கிறது… ஆனால் 74 நூல்களை மட்டுமே அவரால் பரிந்துரைக்க முடிந்தது…அதற்குள் துரதிருஷ்டவசமாக மரணமடைந்தார்..இதில் ஒரு சர்ச்சையும் உண்டு…இந்த 74 நூல்களில் ஒரு பெண் எழுத்தாளரும் இல்லை…அதற்காக அவரை குறை சொல்வதில் அர்த்தமில்லை..ஏனெனில் மீதி 26 நூல்களில் முக்கிய பெண் எழுத்தாளர்கள் இடம் பிடித்திருப்பார்கள்….போர்ஹே என்ற ஆளுமையின் முக்கியத்துவத்திற்கு சான்று என்னவென்றால், இன்னும் அந்த 26 நூல்கள் என்னவாக இருக்கும் என உலகத்தின் பல முனைகளில் பந்தயங்கள் நடக்கிறது….இன்னும் சொல்லப்போனால், இலக்கியத்தின் மேல் தீராக் காதல் கொண்டவர்கள், அவர் பரிந்துரைந்த இந்த 74 நூல்களை தேடிப் பிடித்து வாசிக்கிறார்கள்….
1. Stories by Julio Cortázar
2. & 3. The Apocryphal Gospels
4. Amerika and The Complete Stories by Franz Kafka
5. The Blue Cross: A Father Brown Mystery by G.K. Chesterton
6. & 7. The Moonstone by Wilkie Collins
8. The Intelligence of Flowers by Maurice Maeterlinck
9. The Desert of the Tartars by Dino Buzzati
10. Peer Gynt and Hedda Gabler by Henrik Ibsen
11. The Mandarin: And Other Stories by Eça de Queirós
12. The Jesuit Empire by Leopoldo Lugones
13. The Counterfeiters by André Gide
14. The Time Machine and The Invisible Man by H.G. Wells
15. The Greek Myths by Robert Graves
16. & 17. Demons by Fyodor Dostoyevsky
18. Mathematics and the Imagination by Edward Kasner
19. The Great God Brown and Other Plays, Strange Interlude, and Mourning Becomes Electra by Eugene O’Neill
20. Tales of Ise by Ariwara no Narihara
21. Benito Cereno, Billy Budd, and Bartleby, the Scrivener by Herman Melville
22. The Tragic Everyday, The Blind Pilot, and Words and Blood by Giovanni Papini
23. The Three Impostors
24. Songs of Songs tr. by Fray Luis de León
25. An Explanation of the Book of Job tr. by Fray Luis de León
26. The End of the Tether and Heart of Darkness by Joseph Conrad
27. The Decline and Fall of the Roman Empire by Edward Gibbon
28. Essays & Dialogues by Oscar Wilde
29. Barbarian in Asia by Henri Michaux
30. The Glass Bead Game by Hermann Hesse
31. Buried Alive by Arnold Bennett
32. On the Nature of Animals by Claudius Elianus
33. The Theory of the Leisure Class by Thorstein Veblen
34. The Temptation of St. Antony by Gustave Flaubert
35. Travels by Marco Polo
36. Imaginary lives by Marcel Schwob
37. Caesar and Cleopatra, Major Barbara, and Candide by George Bernard Shaw
38. Macus Brutus and The Hour of All by Francisco de Quevedo
39. The Red Redmaynes by Eden Phillpotts
40. Fear and Trembling by Søren Kierkegaard
41. The Golem by Gustav Meyrink
42. The Lesson of the Master, The Figure in the Carpet, and The Private Life by Henry James
43. & 44. The Nine Books of the History of Herodotus by Herdotus
45. Pedro Páramo by Juan Rulfo
46. Tales by Rudyard Kipling
47. Vathek by William Beckford
48. Moll Flanders by Daniel Defoe
49. The Professional Secret & Other Texts by Jean Cocteau
50. The Last Days of Emmanuel Kant and Other Stories by Thomas de Quincey
51. Prologue to the Work of Silverio Lanza by Ramon Gomez de la Serna
52. The Thousand and One Nights
53. New Arabian Nights and Markheim by Robert Louis Stevenson
54. Salvation of the Jews, The Blood of the Poor, and In the Darkness by Léon Bloy
55. The Bhagavad Gita and The Epic of Gilgamesh
56. Fantastic Stories by Juan José Arreola
57. Lady into Fox, A Man in the Zoo, and The Sailor’s Return by David Garnett
58. Gulliver’s Travels by Jonathan Swift
59. Literary Criticism by Paul Groussac
60. The Idols by Manuel Mujica Láinez
61. The Book of Good Love by Juan Ruiz
62. Complete Poetry by William Blake
63. Above the Dark Circus by Hugh Walpole
64. Poetical Works by Ezequiel Martinez Estrada
65. Tales by Edgar Allan Poe
66. The Aeneid by Virgil
67. Stories by Voltaire
68. An Experiment with Time by J.W. Dunne
69. An Essay on Orlando Furioso by Atilio Momigliano
70. & 71. The Varieties of Religious Experience and The Study of Human Nature by William James
72. Egil’s Saga by Snorri Sturluson
73. The Book of the Dead
74. The Problem of Time by J. Alexander Gunn

நன்றி வாசு தேவன்.

எழுதியவர்: வாசு தேவன்

Medium: facebook

URL TO facebook post: https://www.facebook.com/vas.madras/posts/10211313649350292?pnref=story 

Original Post of OPEN CULTURE: Jorge Luis Borges Selects 74 Books for Your Personal Library

 

Notes on ஷோபா சக்தியின் BOX கதைப் புத்தகம்

எழுதுவது அனைத்துமே புனைவு, உண்மைச் சம்பவங்களைச் சற்று மிகைப்படுத்தி எழுதிகிறார். இவரது அரசியல் மோசமானது. இவரொரு கைக்கூலி. என்றெல்லாம் ‘எனக்கு ஷோபாசக்தியைப் பிடிக்கும்’ என்று சொல்லும்போது இலங்கை நண்பர்களிடமும் தமிழக நண்பர்களிடமும் பதில்களைப் பெற்றிருக்கிறேன். அவரது தனிப்பட்ட வாழ்வோ, அரசியல் பார்வையோ, ஏதோவொரு அமைப்பைத் தூக்கிப்பிடிக்கும் சார்புநிலையோ (அவைதான் அவரது எழுத்தை தீர்மானிக்கிறது என்றாலும்) எனக்குத் தேவையே இல்லை என்பேன்,.அவரால் முன்வைக்கப்படும் கலை தான் எனக்குத் தேவைப்படுகிறது. மேற்சொன்ன சில காரணங்களால் எழும் சமகால வாழ்க்கையை நவீனமாக படைப்பவர்களில் சாரு நிவேதிதா, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ஷோபாசக்தி ஆகியோர் தமிழ்ப் புனைவுலகில்  முக்கியமானவர்கள். சில வருடங்களுக்குப் பிறகு இத்தகைய புனைவுகள் ‘ஒரு குறிப்பிட்ட காலத்தின் வாழ்க்கைச் சூழல், சிந்தனை வெளி, சமூக பொருளாதார, கலாச்சார, உளவியல் ரீதியான போக்குகளை பதிவு செய்த’ ஆவணங்களாக இருக்கும்.

சமகால ஈழ இலக்கியத்தில் நான் தொடர்ந்து கவனித்து வரும் குரல்களில் ஷோபாசக்தியும் ரியாஸ் குறானாவும் முக்கியமானவர்கள். நான் வாசித்தவரையில் இலங்கையில் எழுதப்படும் புனைவுகள் யாவும் எதார்த்தக்கதைகளாக / உணர்ச்சிக்கதைகளாக நின்றுவிடுகின்றன. போர் ஏற்படுத்திய வடு அப்படி. அவர்களால் இதனை எழுதி எழுதி தான் கடந்துவர முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் இவர்களின் குரல்கள் மட்டும் நவீனமாக ஒலிப்பதை கவனிக்கமுடிகிறது. நாவல் சிறுகதை வடிவங்களில் ஷோபாசக்தியின் பரிட்சார்த்த முயற்சிகள் சுவாரசியமானவை. மேலும் இவரது கதைகளில் ‘கழிவிரக்கம் கோரும்’ தொனி இல்லாமல் தீவிர பகடிகளும், நையாண்டிகளும் தொடர்ந்து வெளிப்படுகிறது. ரியாஸ் குறானாவின் கவிதைகளும் அநியாயத்திற்கு நவீனமானவை. நவீன கவிதைகள் குறித்து தொடர்ந்து தீவிரமாக உரையாடி வருகிறார் குறானா.

Box கதைப்புத்தகம் நாற்பது கதைகளாகவும் ஊடே உபபிரதிகளாகவும் பிரிக்கப்பட்டு 251 பக்கங்களில் விரிகிறது. ஷோபாசக்தி எழுதிய முந்தைய படைப்புகளில் போர் நடந்த காலங்களின் சூழல் வெளிப்பட்டிருக்கும். அனால் இந்த படைப்பு போருக்கு பிறகான வாழ்க்கையை விவரிக்கிறது. அந்தவகையில் இது கவனம் பெறுகிறது.

இருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா?

ஆம், இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும்

– Bertolt Brecht

நாவல் பெரிய பள்ளன் குளம் கிராமத்தினையும் அதன் குளத்தினையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தினையே குத்திக் கிழித்துப்போன போர் தனது தடங்களை பல காலங்களுக்கு அழியாத வண்ணம் மக்களின் மீது அழுந்தப் பதிந்துவிட்டு சென்றிருக்கிறது. போருக்குப் பிறகான வாழ்வு முடமான ஒன்றாகவே இருக்கிறது. பெரிய பள்ளன் கிராமத்தைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒருவகையினில் இந்தக் கிராமத்தை ஒட்டுமொத்த போரில் பாதிக்கப்பட்ட மற்றைய கிராமங்களுக்கு பிரதிநிதியாகக் கொள்ளலாம்.

 1. போருக்குப் பிறகு புலானாய்வு அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் அப்பாவி இளைஞர்கள் எதிர்கொள்ளும் சித்திரவதை
 2. ‘கிறீஸ் பூதம்’ குறித்து கிராம மக்களின் அச்சம்
 3. டைடல் லெமுவேல் பாதிரியாரின் கதை
 4. விடுதலைப் புலிகள் மீதான விமர்சனம்: இயக்கப் பொடியர்கள் சிங்கள மக்களை பேருந்தோடு கொல்வது காணாமல் போன யோபு அற்புதம் மூலமாக வெளிவருகிறது. தன் தந்தைக் கூறியதைக் கேட்டதும் தான் சார்ந்துள்ள இயக்கம் தான் அது என்று இயக்கம் மீது வெறுப்புற்று வெளியேற நினைக்கிறான் சகோதரம்.

வடிவத்தில் மிகப்பெரிய புரட்சியினை நிகழ்த்தியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. ஆனாலும் சுவாரசியமான வடிவம். இவரது கொரில்லா, ம் போன்ற நாவல்களிலும் இதனைக் காணலாம். ஷோபாசக்தி படைப்புகள் கட்டாயம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். This Blinding absence of light போன்ற நாவலுக்கு சற்றும் சளைத்ததல்ல ஷோபாவின் படைப்புகள். Tahar Ben Jelloun எழுதிய அந்த பிரஞ்சு நாவலின் தாக்கமும் பாக்ஸ் கதைபுத்தகத்தில் தெரிகிறது.

நாவலில் பெரிதாக குறை என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை. நாவலின் ஒரு இடத்தில் மிகவும் அதீதமாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு நிகழ்வினைத் தவிர. அதீத மிகைப்படுத்தலே கலையின் உச்சம் என்ற school of thought வாசகர்களுக்கு இது பிடிக்கக்கூடும். எனக்கு பிடிக்காத பகுதி இது மட்டும் தான்.

அந்தச் சிறுவனுக்காக ஊர் கிராமம் முழுக்க இரானுவந்தினர் செய்த கொடுமைகளை நடித்துக்காட்டுவார்கள். அதுவே அந்த நிகழ்வு. ஒரு மாதிரியாக நெளிந்துவிட்டேன்.

பாக்ஸ் கதைப்புத்தகம் க்ளாசிக்கும் அல்ல. மோசமான நாவலுமில்லை. அவரது safe zoneஇல் இருந்துகொண்டு எளிமையாக எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய படைப்புகளில் ‘போருக்குப் பிறகான’ மக்களின் வாழ்கையைப் பதிவு செய்த / பிரதிபலித்த படைப்பில் என் மனம் கவர்ந்தது ‘மிக உள்ளக விசாரண’ என்ற சிறுகதை பிடித்திருந்தது. இலங்கையில் போருக்குப் பிறகு நடந்துவரும் விசாரணையின்ந்தபோக்கை பகடியாக வெளிப்படுத்துகிறது இக்கதை.

இப்படைப்பினை படித்துவிட்டு Mario Vargas Llosa ஞாபகம் வருவதாகக் கூறினார். எனக்கும் ல்லோசாவும், தஹார் பென் ஜெல்லோனும் நினைவுக்கு வந்தனர். அவர்கள் இருவரின் தாக்கமும் ஷோபாவின் எழுத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன். என் வாசிப்பு தான் இது. அவர் இருவரையும் வாசிக்காமல் கூட இருக்கலாம் இல்லையா. ஆனால் அவர் Tahar Ben Jellounனை வாசித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

Llosa’s political evil + Tahar Ben Jelloun’s spirituality இரண்டுமே இந்த நாவலில் உணர முடிகிறது.

வாசிக்கலாம்.

கருப்புப் பிரதிகள் வெளியீடு.

புலிநகக் கொன்றை – வசதியாக எழுதப்பட்ட ஒரு புனைவு

நாவல் பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பதைத் தாண்டி தமிழில் வெளிவந்துள்ள நாவல்களில் மிக முக்கியமான நாவலாக இந்த நாவலினைப் பார்க்கிறேன். இதனை தெற்கே வாழ்ந்த தென்கலை ஐயங்கார் சமூகத்தின் இனவரைவியல் என்று மட்டும் கூறமுடியவில்லை. தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் தாக்கம் தான் என்றாலும், பி.ஏ.கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட களமும் பின்னணியும் இதனை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. பொன்னா பாட்டி எனக்கு மார்க்வஸின் உர்சுலா கிழவியை நினைவுபடுத்தினாள். சதா சர்வகாலமும் வடிவம், கூறும் முறை நவீன வாழ்வினைப் பதிவு செய்யாமால் பழைமை பேசும் நாவல்கள் என்று பேசிவரும் நான் இந்த நாவலில் அதிகக்குறை காணாமல் சரணாகதி அடைந்துவிட்டேன். எனக்கு ஏன் இந்த நாவல் பிடித்திருக்கிறது என்று யோசிக்கும்போது..

ஒன்று: நாவலின் வேகம். மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இரண்டு: நாவலின் மொழி. நாவல் நெடுக வரும் referenceகள்.

மூன்று: என் சொந்த மாவட்டத்தினைவிட நான் மிகவும் விரும்பும் திருநெல்வேலி கதை நிகழுமிடமாக இருப்பது.

மேலோட்டமாக பார்த்தால் நாவலானது., ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை மனிதர்களின் கதையினைப் பேசுகிறது; ஒவ்வொரு மனிதர்களின் மனவோட்டங்கள் / பழக்கவழக்கங்கள் அந்தக் குடும்பத்தினை எந்தளவு பாதிக்கிறது என்பதனைப் பதிவு செய்கிறது எனலாம். ஆனால் தென்மாவட்டங்களின் அரசியல் கொதிநிலையினை சுதேசி இயக்கம், தேசிய போராட்டம், திராவிட கொள்கைகள், கம்யூனிஸ கொள்கைகள், காங்கிரஸ் கொள்கைகள் போன்றவை எப்படித் தீர்மானித்தன? குடும்பத்தின் ஒவ்வொரு ஆண்களும் ஏதாவதொரு அரசியல் கொள்கையுடன் எவ்வாறு தங்களைப் பிணைத்துக்கொள்கிறார்கள்? எப்படி லௌகீக வாழ்வில் பிடிப்பின்றி அலைகளிப்பில் தங்களையே கூண்டிலேற்றி விசாரணை செய்துகொண்டு வாழ்ந்து மறைகிறார்கள்.

தென்கலை ஐயங்கார் சமூகத்தாரிடம் நிலவிவந்த பாரம்பரிய பழக்கவழக்கங்கள்; சடங்குகள்; பழைய சிந்தனை; வடகலை ஐயங்கார் மீதான வெறுப்பு; விதவை மறுமணம் செய்துகொள்ள முடியாமை போன்றவை இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 • அப்போது நெல்லை நகரில் நிலவிய சாதிப்பாகுபாடு; தீண்டாமை. தலித் ஒருவர் பிணத்தினை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் அச்சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை.
 • கட்டபொம்மன் குறித்து இருவேறு தரப்பு நிலவும் நிலையில் (அவர் நடிகர் சிவாஜியின் மிகையான நடிப்பில் சொல்லப்பட்டது போன்றவர், இன்னொன்று அவரே வட்டி வசூலிக்கும் ஒரு தாதாவாக இருந்தவர்)  ஆசிரியர் கட்டபொம்மன் ‘பாளையக்காரன்’ என்ற தரப்பில் நின்று எழுதியிருக்கிறார்.
 • நாங்குனேரி: அப்போதைய ‘நாங்குனேரியைச் சுற்றியுள்ள தேரியை நனைக்கப் பகீரதனால்கூட முடியாது’ என்று பழமொழி நிலவிவந்ததைப் பதிவுசெய்கிறார். இந்தப் பழமொழி உடைபடும் அளவிற்கு அதாவது நாங்குனேரி மூழ்கும் அளவு அங்கு மழை பெய்கிறது. குளங்களுக்குப் பெயர்போன நெல்லையில் இப்போது கடும் வறட்சி. ஆனானப்பட்ட மானூர் குலமே வறண்டுவிட்டது.
 • திருடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ‘தீவட்டிக் கொள்ளைக்காரர்கள்’ நாவலில் வருகிறார்கள். மருகால்குறிச்சியில் வாழ்ந்த எண்பது மறவர் குடும்பங்கள் இதனயே நம்பி நெல்லையில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் திருடும் முறையும் நாவலில் விவரமாக எழுதப்பட்டுள்ளது.
 • தென்கலை ஐயங்கார் சமூக ஆண்களிடம் இசை தொலைந்துபோனதற்கான காரணத்தினைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். ஆண்கள் பிரபந்தத்தை வேதா முறையயைப் பின்பற்றி ஓதுகிறார்கள், மனப்பாடம் செய்ய இதுவே நல்ல வழி. ஆனால் இதன் காரணமாக தமிழும், இசையும் அவர்களிடம் தொலைகிறது. இதுபற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. படித்தால் மடத்தில் வேலை கிடைக்கும். இந்த எண்ணம் இவர்களைத் தமிழிலோ சங்கீதத்திலோ ஆர்வம் கொண்டவர்களாக மற்றும் பாண்டித்தியம் பெற்றவர்களாகவோ மாற்றவில்லை.
 • தென்கலை ஐயங்கார் குடும்பத் திருமணத்தில் நடக்கும் ‘தோள் தூக்கு’ என்ற சடங்கானது எனக்கு மிகப்புதுமையானதாக இருந்தது.
 • அக்கால கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த ‘உடை ஒழுங்கு’ குறித்து ஒரு பகுதி வருகிறது. விடுதலைக்கு முன் பணியாற்றிய பிராமண ஆசிரியர்கள் பஞ்சகச்சம், கோட்டு, தலைப்பாகை அணிந்து வந்திருக்கிறார்கள்.
 • ஐயங்கார்களின் மீதான விமர்சனமும் ஆங்காங்கே இருக்கிறது. பட்சியின் சீனியர் சங்கர ஐயர் சொல்வது நல்ல உதாரணம்.
 • மேலும் ஐயர்களுக்கும் ஐயங்கார்களுக்கும் இடையே இருந்த வெறுப்பும் சுட்டப்படுகிறது. சங்கரருடைய அத்வைதமும் ராமானுஜரின் வேதாந்தம் என இரண்டும் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. இரு தரப்பும் உள்ளூர வன்மத்துடனே பழகிக்கொள்கிறார்கள்
 • ஐயங்கார்களின் உணவு முறை அவர்களின் பிரதான பதார்த்தங்கள், அக்காரவடிசில், கத்திரிக்காய் சாதம், எள்ளோதரை, வத்தல் வகைகள், சித்திரான்னங்கள், பருமனான அடை.
 • பிற்போக்கு மனிதர்களும் சம்பிரதாயத்தை தீவிரமாகக் கடைபிடிக்கும் தன் சமூகத்தில் புரட்சிகரமாக கலப்பு திருமணம் செய்கிறான் நம்பி.
 • சிதம்பரம் பிள்ளை கப்பல் கம்பெனி ஆரம்பித்தது
 • பிள்ளையும் சிவாவும் கைதான போது நெல்லையில் நடந்த கலவரம்
 • மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சியின் செயல்பாடு. இதுகுறித்தும் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் பல தரப்புகளை முன்வைத்திருக்கிறார்கள். ஆசிரியர் வெகுஜனம் நம்புவதை ஒட்டியே எழுதியிருக்கிறார்.
 • தாமிரபரணி ஆறு பற்றிய குறிப்பு ஒன்றினை படித்த போது நண்பன் ஸ்ரீனிவாசன் கூறியது நினைவுக்கு வந்தது. அவன் வசிக்கும் தெருவின் விளிம்பு வரை மட்டும் வரும் ஆற்று வெள்ளம் தெருவுக்குள் நுழைந்ததே இல்லையாம். “தாமிரபரணி பிராமணர்களைத் தொந்தரவு செய்வது இல்லை. அவர்கள் தெருக்களில் நுழைய அது தயங்கியது. ஏழைகளில் சிலர் பிராமண வீடுகளில் பின்புறம் தங்கள் உடைமைகளோடு ஒதுங்கினார்கள்.”
 • அக்காலத்திய திரை உலகத்தையும் ரசிகர்களைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது/ “மக்கள் திரை உலகத்தை விரும்பினார்கள். வாழ்கின்ற உலகத்தைவிட அந்த உலகம் அவர்களுக்கு உண்மையாகத் தெரிந்தது. மும்மூர்த்திகள் ஆண்டுகொண்டிருந்த உலகம் அது. போட்டிகளும் கடவுளர்க்கு இடையே நடந்தவைகளைப் போல யார் பெரியவர் என்பது பற்றிதான். பக்தர்களுக்குள்ளே கடும் சண்டை. ஆனால் திரையுலக மூர்த்திகளின் சண்டைகளைப் போல அல்லாமல் பக்தர்கள் சண்டையில் நிஜ ரத்தம் சில சமயம் சிந்தப்பட்டது” (அன்று முதல் இன்றுவரை
 • எம்ஜியார், சிவாஜி மற்றும் ஜெமினி குறித்து வரும் விமர்சனங்கள் ஆசிரியரின் தனிப்பட்ட பார்வை.
 • கிரிகெட் பார்ப்பது கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி வெற்றி பெறுவது பற்றி நிகழும் உரையாடல்கள்.
 • எம்ஜியாரின் மரணத்தின் போது தமிழகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள். பச்சையாக சொன்னால் கலவரங்கள்.
 • மதுரை பற்றிய விவரிப்பு சிறிதாயினும் இதுவரை நான் எந்த நாவலிலும் படிக்காத ஒன்றாக இருந்தது. பழைய மதுரை பற்றிய விவரிப்புகளில் என் மனம் கவர்ந்தது புயலிலே ஒரு தோணி மட்டுமே
 • கதா சரித் சாகரத்தில் பிராமணர்கள் குறித்த கதை பகடியாக சொல்லப்படுகிறது
 • பாலியல் வறட்சியில் இருந்த நரசிம்மனின் தற்கொலை
 • பொன்னா பாட்டி பல ஐயங்கார் பாட்டிகளின் பிரதியாக பார்க்கமுடிகிறது. உர்சுலா பாட்டி நினைவு வருவதை தடுக்க இயலவில்லை.
 • இந்த ஐயங்கார் குடும்பத்தில் விதவிதமான மனிதர்கள் வருகிறார்கள். பெண்ணாசை பிடித்தவர்கள், மனைவியை அடித்துக்கொண்டே இருந்தவர்கள், சாப்பாட்டு வெறியர்கள் என பலவகைப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்கள்.

நாவலின் பலமே அதன் பலவீனமாகவும் இருக்கிறது. நிதானமில்லாமல் தறிகெட்டு ஓடுகிறது நாவல். எழுதப்பட்டதே இப்படித்தானா அல்லது எடிட்டிங் கோளாறா எனத் தெரியவில்லை. ஆனால் வாசிப்புச்சுவை குறையாத நாவல். இன்னும் நிதானமாக ஐயங்கார்களின் வாழ்வு காட்டப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். மிகப்பெரிய நிகழ்வுகளைக் குறிப்பாக வரலாற்றில் நிகழ்ந்தவைகளை அடுக்கி அக்காலம் குறித்த ஒரு சித்திரத்தை தர முயற்சிப்பதேல்லாம் மிகப்பழைய யுக்தி ஐயா. அஞ்ஞாடி நாவல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதில் நாடு சுதந்திரம் அடைந்த பின் இரு கூலித்தொழிலாளர்கள் பேசிக்கொள்ளும் விசயம் எனக்கு மிகப்பெரிய/ ஆசிரியர் நேரடியாக சொல்லாத ஒரு சித்திரத்தினை உணர வைத்தது. அந்த மினிமலிசம் போதும் என்பதே நான் சொல்லவருவது. நிறைய குறிப்புகளை அடுக்குபோழுது, ‘சரி அப்புறம்’ என்ற மனநிலைக்கு சென்றுவிடுகிறேன்.   அவரிடமிருந்த / அவர் தேடிச் சேகரித்த நிறையத் தகவல்கள் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. தன் சமூகத்தில் நடந்த கதையினை மொழிப்புலமையாலும், தகவற் சேகரிப்பாலும், தமிழிலக்கிய பரிச்சயமும் கொண்டு மட்டும் இந்நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலும் வாசகர்களிடம் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால் இது ஒரு வசதியான அணுகுமுறை. தென்கலை ஐயங்கார்கள் குறித்து அதற்கு முன்னர் யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அவர்களின் தற்போதைய வாழ்வினைப் பதிவு செய்ய முயலலாம். அதாவது அவர்களின் சமகால வாழ்வு, அதன் சிக்கல் குறித்து எழுதலாம். சமகால அபார்ட்மென்ட் வாழ்வினை நான் படித்தது பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிய ‘நாளை இறந்து போன நாய்’ சிறுகதையில் தான். இன்னும் நாம் பழமை பேசிக்கொண்டே இருக்கிறோம். பழையவைகளும் பதிவு செய்யப்படவேண்டும் தான். தவறில்லை. அனால் அவற்றை கொஞ்சம் செறிவான மொழி உழைப்பு கொண்ட எவரும் செய்துவிட முடியும் என்பது என் எண்ணம். நான் இங்கு சொல்வதையே தான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறேன் எனப்படுகிறது.

அடுத்த பதிவில் மீதி.             .

கட்டிலில் கிடக்கும் மரணம் – பெண்கள் எழுதிய சிறுகதைகள் – மொழிபெயர்ப்பு ரவிக்குமார் 

ரவிக்குமார் மொழிபெயர்ப்பில் அவரே தொகுத்து மருதம் வெளியிட்ட கட்டிலில் கிடக்கும் மரணம் தொகுப்பினை வாசித்து முடித்தேன். உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் எட்டு சிறுகதைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

அதற்கு முன்பாக நான் வாசித்தவரையில் பெண் படைப்பாளிகள் என் பார்வையில் எப்படி எனக் கூறிவிடுவது சிறந்தது:

 1. பெண்களின் வலியினைப் பதிவு செய்பவர்கள்.
 2. வலி = கணவனிடம் படும் துயரம்; கணவனின் சந்தேகத்திற்கு ஆளாகுதல்; கணவன் இறந்த பின்பு தன் குழந்தைகளை படிக்க வைக்க இந்த சமூகத்தில் போராடுதல்; பெண் என்பதால் பாதுகாப்பில்லாத நிலை; பெற்றவர்களின் கொடுமை; மாமியார் மாமனார் கொடுமை; வரதட்சனைக் கொடுமை; குழந்தையின்மை; அடிமையாக நடத்தப்படுதல்; சந்தர்ப்ப சூழ்நிலை / வறுமை காரணமாக விபசாரத்தில் ஈடுபடுவது; வஞ்சிக்கப்படுதல்; பாலியல் துன்புறுத்தல்கள் இன்னும்…
 3. பெண்ணியப் பார்வையில் ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு victim பார்வையில் ஆண் ஆதிக்க சமூகத்திற்கு எதிராக தங்கள் குரலைப் பதிவு செய்பவர்கள்.
 4. சிறகொடிந்த பெண், சிறகு முறிக்கப்பட்ட பெண், கூண்டிலடைக்கப்பட்ட பெண், கனவுகள் கருக்கப்பட்ட பெண் என முழுக்கத் துயரங்களை / எதிர்ப்புக்குரல்களை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன்.

குறிப்பிட்ட வாசிப்புகளுக்குப் பின்பு பெண் படைப்பு என்றால் அது வலியினை பதிவு செய்யும் இலக்கியம் என மனதில் துரதிர்ஷ்டவசமாக பதிந்துபோய்விட்டது. அம்பை, பாமா, லதா (புலம்பெயர்ந்த பெண்களின் வலியினை) போன்றோர்கள்.

இலக்கியம் என்பது வலியினை மட்டும் பதிவு செய்வதா? இலக்கியம் ஏன் வலியினைப் பதிவு செய்யக்கூடாது? இரு கேள்விகளும் என்னைக் குடைந்தெடுகின்றன. நான் சில கேள்விகளை முன்வைக்கையில் ‘பெண் எது எழுதினாலும் பிரச்சினை. அவளது எழுத்தினை எதிர்கொள்ள அஞ்சியே இப்படி பேசுகிறீர்கள். பெண் அரசியலை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் மேட்டிமை சிந்தனையாளர். வெகுஜன பெரும்பான்மை இரசனையை மட்டம் தட்டுபவர். அதன் மூலம் உங்களை இரசிகக்கலா சக்கரவர்த்தியாகக் காட்டிக்கொள்கிறீர்கள்’. என்ற பதில்கள் தான் வருகின்றன. இந்த பதில்களுக்கு என்ன எதிர்வினையாற்றுவது? இவர்களைப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறது. எதற்கு விமர்சிக்க வேண்டும்? அல்ல விமர்சனம் கூட அல்ல, எனது பார்வை தான் அது. இன்னும் இந்தக்கேள்விகள் என்னுள் இருக்கின்றன. பெண்களின் படைப்புகளை வாசிக்கையில் எனக்கு வரும் சலிப்பான மனநிலைக்கு இந்த ‘துயரம் மட்டும் அதீதமாக இருப்பது’ தான் காரணமோ என்னவோ! இப்படி நமது கருத்தினைக் கூறினாலே ‘மேட்டிமைப் பார்வை’ என்று கூறிவிடுகிறார்கள். வலியினை மட்டும் பதிவு செய்வது ஒருவித ‘safe zone’ என்று நான் கருதுகிறேன். இவர்களின் புனைவுகளை வாசித்ததில் இந்த முடிவிற்கே வரவேண்டியுள்ளது. அவர்களுக்கு நிகழ்ந்துவரும் ஒடுக்குமுறைகளை எழுதி எழுதித்தான் கடந்துவரவேண்டியிருக்கிறது.

இப்படியொரு மனநிலையில் தான் ரவிக்குமார் மொழிபெயர்த்துத் தொகுத்த ‘கட்டிலில் கிடக்கும் மரணம்’ தொகுப்பினைக் கையில் எடுத்தேன். எட்டு கதைகள். 1௦௦ பக்கங்கள். தொகுப்பிலுள்ள மொத்தக்கதைகள் எட்டு.

 1. திறந்த ஜன்னல் – ஆனா ப்ளான்டியானா
 2. ரவிக்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது – மகாஸ்வேதா தேவி
 3. நமது இரகசியம் – இஸபெல் அலென்டெ
 4. போர்வை – இஸ்மத் சுக்தாய்
 5. வாயிற்படி – கிறிஸ்டினா பெரி ரோஸ்ஸி
 6. பியோனிகள் மலரும் காலம் – ஸ்வெத்லானா வஸீலியேவா
 7. கட்டிலில் கிடக்கும் மரணம் – ரோஸா மரியா பிரிட்டன்
 8. பாட்டில்கள் – அல்ஸினா லுபிட்ச் டொமெக்

தொகுப்பில் மஹாஸ்வேதா தேவி எழுதிய ‘ரவிக்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது: சோளிக்கே பீச்சே’ என்ற கதையும், இஸ்மத் சுக்தாய் எழுதிய ‘போர்வை’ இரண்டு கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தன.

ஆனா ப்ளான்டியானா எழுதிய ‘திறந்த ஜன்னல்’, இஸபெல் அலென்டெ எழுதிய ‘நமது ரகசியம்’, அல்ஸினா லுபிட்ச் டொமெக் எழுதிய ‘பாட்டில்கள்’, ஸ்வெத்லானா வஸீலியேவா எழுதிய ‘பியோனிகள் மலரும் காலம்’ போன்ற கதைகளின் வடிவங்கள் எனக்குப் பிடித்திருந்தன.

மஹாஸ்வேதா தேவி எழுதிய ‘ரவிக்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது: சோளிக்கே பீச்சே’ என்ற கதை பிரிட்டிஷ் ஆட்சியால் குற்றப்பரம்பரை என அடையாளப்படுத்தப்பட்ட ‘காங்கோர் இன’ மக்களின் வலியினைப் பதிவு செய்கிறது. தூய எதார்த்தவாதக் கதையாக இல்லாமல் கதையை சொன்னவிதம் இன்று வாசிக்கையிலும் அவ்வளவு புதுமையாக இருக்கிறது. மற்றொரு கதையான ‘போர்வை’, உடல் சுகம் அனுபவித்திராத ஆனால் பெரிய செல்வந்தருக்குத் திருமணம் செய்விக்கப்பட்ட ஒரு பெண் தனது காம வேட்கையை போக்குவதற்காக மற்றொரு பெண்ணை நாடுவதை பதிவு செய்கிறது. இந்தக் கதை ஒரு சிறு பெண்ணின் பார்வையில் அவளுக்கே உரிய பார்வையில் சொல்லப்படுவதாக எழுதப்பட்டிருக்கிறது. தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் இவை இரண்டும் அடங்கும். மற்ற கதைகளும் ஒவ்வொரு காரணங்களுக்காகப் பிடித்திருந்தன.

‘கட்டிலில் கிடக்கும் மரணம்’ கதை கண்டிப்பாக மற்றவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பிருகிறது. எனக்கு சலிப்பினையே தந்தது. இதுபோன்ற பல கதைகளைப் படித்ததாலா அல்லது மேற்சொன்ன victim வாக்குமூலங்களைக் கேட்கும் ஆர்வம் இல்லாததாலா என்னவோ தெரியவில்லை.

பெர்தா மார்டின்ஸ் தந்தையை இழந்து தனது தாயுடனும் அவளது கண்டிப்புக் கணவனுடனும் வாழ்கிறாள். இளம் வயதில் வாலிபன் ஒருவன் பேச்சை நம்பி அவனிடம் ஏமாந்து விடுகிறாள். குழந்தையும் பிறக்கிறது. குழந்தையைத் தாயின் கணவன் ஏற்கவில்லை. குடிசை ஒன்றில் வசிக்கிறான். அப்போது வேறு ஒருவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. அவனை மணமுடிக்கிறாள். மேலும் இரண்டு குழந்தைகள். கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. அதனைக் கண்டிக்கிறாள். ஆனால கணவன் பிரிந்து அப்பெண்ணுடன் சென்றுவிடுகிறான். மூன்று குழந்தைகளுடன் வாழும் பெர்தா நீதிமன்றம் மூலம் கணவனிடமிருந்து மாதாமாதம் ஜீவனாம்சம் பெறுகிறாள். அப்போது வறுமை காரணமாகவும் பணத்தேவைகாகவும் (கணவன் அனுப்பும் தொகை போதவில்லை) சிலருடன் படுக்க நேரிடிகிறது. இது தெரிந்ததும் கணவன் பணம் தருவதை நிறுத்துகிறான். வேலை செய்யும் இடத்தில் (கடுமையாக உழைப்பினை உறிஞ்சும் எஜமானி) முதலாளிப் பெண்மணியால் துன்பப்படுகிறாள். வேலை போகிறது. கருத்தடை செய்தும் பலருடன் உறவு கொள்கிறாள். எல்லாம் குடும்ப நலம் காக்க. ஆனால் நிற்காத குருதிப்போக்கு ஏற்படுகிறது. மருத்துவமனை செல்கிறாள்…

இந்தக்கதை என்னைக் கவரவேயில்லை. மகத்தான கோபத்தினையே கிளப்பியது. இதனைத் தொகுப்பிற்குத் தலைப்பாக வைத்திருக்கும் மொழிபெயர்ப்பாளரின் இலக்கிய மதிப்பீட்டினை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் நான் மகாஸ்வேதா தேவி, இஸபெல் அலென்டெ, இஸ்மத் சுக்தாய் போன்றோர்களின் கதையினை வாசிக்கலாம் என்று தோன்றுகிறது.

வழக்கம் போல: இந்தக்கதைகளில் சம்பந்தப்பட்ட நாடுகளின் கலாச்சாரத்தையும் அந்தந்த நாடுகளில் பெண்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ளமுடிகிறது..

33543883

My goodreads ratings : 3/5