மொழிபெயர்ப்பு: Jon McGregor எழுதிய இரண்டு கதைகள்

1

நினைவு விமானம் 

இறுதிச்சடங்கிற்குப் பிறகான நீண்ட பயணத்தில், தாத்தாவை அவர் போர் காலத்தில் நிலைகொண்டிருந்த விமான தளத்தினைக் காண்பதற்காக அவர்கள் அழைத்துச் சென்றனர். இதுதான் அவர் விரும்பிச் செய்யக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும் என அவர்கள் நினைத்தனர். சுற்றுவேலியின், வெளியேறுவதற்கான வாயில்களில் ஒன்றின் பக்கத்திலிருந்த புல்வெளி விளிம்பில் தங்கள் காரினை நிறுத்திவிட்டு, தாத்தா இறங்குவதற்கு உதவி செய்தனர். அந்த மைதானம் மிகத் தட்டையானதாக இருந்ததால் அங்கு எதனையும் பார்ப்பது கடினமான ஒன்றாக இருந்தது. மைதானம் அவர்களைவிட்டு விலகியிருந்ததாகத் தோன்றியது. வேலியினூடாக அவர் பார்த்துக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். காற்று கிழக்கிலிருந்து வீசிக்கொண்டிருக்கையில், சுற்றுவேலிக்கருகே இருந்த நெடிய புற்கள்  ‘ஷ்’  என்ற மெல்லிய சப்தத்துடன் காற்றிற்கு அடங்கி அமிழ்வதும் தவிப்பதுமாக இருந்தன. அவர் விமான ஓடுதளத்தையும் விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தையும் தூரத்திலிருந்த உயரம் குறைவான கட்டிடங்களைப் பார்ப்பதையும் அவர்கள் பார்த்தனர். அவர்கள் இருந்த இடத்திலிருந்து அவர்களால் உண்மையில் நிறையப் பார்க்க முடியவில்லை. அவர் ஏதாவது சொல்லக்கூடுமென அவர்கள் அவருக்காக காத்திருந்தனர், ஆனால் அவர் ஏதோ யோசனையில் தன்னை மறந்து இருந்ததாகத் தோன்றியது. எதையோ சுட்டிக்காட்டுவது போல விரலை உயர்த்தி பின்பு விலக்கிக் கொண்டார். விளிம்பிலிருந்து சிறிது தூரத்திற்கு அவர்கள் நடந்தனர். அந்த இடத்தைப் பற்றிப் பேசுவதற்கு இசைபவராக தாத்தா இல்லை என்று தோன்றியது. மாறாக அவர், அடுத்த கிராமத்தில் பதுங்குக் குழிகளில் தனது புது மனைவி மற்றும்  குழந்தையுடன் வாழ்ந்ததைப் பற்றியும்  எவ்வாறு அவரது மனைவியால் மட்டும் எப்போதும்  (போர் உக்கிரமாக இருந்த காலகட்டம்) நடந்து திரும்பி வருவது முடிந்தது, ஏனெனில் எப்படி, நிலத்திலும் காட்டிலும் இருந்த மிகுதியான சேறானது குழந்தைத் தள்ளுவண்டிக்கு உவப்பானதாக இருந்திருக்கவில்லை  என்பது பற்றியும் பேசினார். காற்று வேகமெடுத்து குளிரத் தொடங்கியது. அவர்கள் காருக்குத் திரும்பி வந்து தெற்கு நோக்கி பயணமாயினர்.

தாத்தா ஆயுதங்களை தயாரிப்பவராகவும், சக்திவாய்ந்த குண்டுகளை வீசும் போர் விமானங்களில் குண்டுகளை நிரப்புபவராகவும், போர்விமானம் திரும்பி வரும்பொழுது குண்டுகள் வைக்கப்படும் கிடங்குகளை சுத்தப்படுத்துபவராகவும் பணிபுரிந்ததை அவர்கள் பின்னர் அறிந்துகொள்கிறார்கள். சமயங்களில் அவரது வேலை, இறந்தவர்களின் உடல்கள் மற்றும் உடற்பாகங்களை அப்புறப்படுத்துவதாகவும் இருந்தது, ஆனால் அது குறித்து எப்போதும் விவாதிக்கப்பட்டதில்லை. இந்த விமானத் தளத்திலிருந்து, விமானப் படையினர் பறந்து சென்று மொத்த நகரங்களையும் அழிப்பது; குடியிருப்புகளை குண்டுகள் மூலம் தகர்த்து அதன் இடிபாடுகளின் கீழ்வரை எரிப்பது, சடலங்களுக்கான நெருப்பினைக் கொளுத்துவது, அணைக்கட்டுகளை தகர்த்து  முழுப் பள்ளத்தாக்கினையும் மூழ்கச் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டனர். சில குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

போர் வெற்றி பெற்றது.

அவர்களது வீட்டிற்குச் செல்லும் வழியில், நவீன ராயல் விமானப்படை இயங்குதளத்தை கனிங்ஸ்பை என்ற இடத்தினில் கடந்தனர், நகரத்தை அடைவதற்கு முன்பாக சுற்று வேலியை ஒட்டி ஒன்று அல்லது இரண்டு மைல் பயணித்தனர். பிரதான ஓடுதளத்தின் இறுதிப்பகுதியை அவர்கள் கடந்த பொழுது, மஞ்சள் மலர்களாலான அடர்த்தியான புதரால், காற்றிலிருந்து மூன்று பக்கங்களில் தடுக்கப்பட்டிருந்த சிறிய சரளைக்கற்களான கார் நிறுத்துமிடத்தை சாலையின் மறுபுறம் பார்த்தனர். கார் நிறுத்துமிடம் நிரம்பியிருந்தது. ஒன்றிரண்டு பேராக கார்களுக்கு அருகே மடக்கு நாற்காலிகளில் முழங்கால் வரையிலான போர்வையுடன் அமர்ந்திருந்தனர், அவர்களது மடியில் குடுவைகள் அலங்கோலமாகக் கிடந்தன.  அவர்களிடம் தொலைநோக்கியும், நீண்ட லென்ஸ்களையுடைய கேமராக்களும் நோட்டுப்புத்தகங்களும் இருந்தன. தளத்தில் நிலைகொண்டிருந்த நவீன ரக போர் விமானம் கிளம்பிச்செல்வதற்காகவும் தரையிறங்குவதற்காகவும் அவர்கள் காத்திருந்தனர். அப்போது தான் அவர்களால் புகைப்படமெடுக்கவும், தங்களது நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுக்கவும் பிரமித்துப் போய் பார்க்கவும் முடியும். மேலும் அவர்கள் அன்றாடம் காட்டப்படும் பழைமையான குண்டெறி விமானமான ‘நினைவு விமானம்’ என்று அழைக்கப்படும் ஒன்றிற்காகவும்  காத்திருந்தனர், பழைமை என்ற வார்த்தை குண்டெறி விமானங்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது போலவே, கார், ஆடை, பொத்தான்களின் தொகுப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது.

அந்த இடத்தைக் கடந்து பயணிக்கையில், தாத்தா திரும்பி கார் நிறுத்துமிடத்திலிருந்த மக்களை பார்த்தார். அவர் எதுவுமே கூறவில்லை. பின் ஜன்னலினூடாக அவர் அவர்களை கவனித்தார். கனிங்ஸ்பையினூடாக பயணித்து, தேவாலயத்தைக் கடந்து ஆற்றின் மீதாக பிரதான சாலையை அடையும்வரை அவர் எதுவுமே பேசவில்லை. அவர்கள் வீட்டிற்குத் திரும்பும் வரையில் காத்திருந்தவர் காரிலிருந்து இறங்க அவர்கள் உதவி செய்ததும் “அந்த தொலைநோக்கிகளுடன் இருந்த மக்கள்  என்ன நினைப்புடன் தாங்கள் பார்க்கவிருப்பதற்காக காத்திருக்கிறார்கள்” என்று வினவினார்.

1.22 PM
12.10.16

கதை Airshow

எழுதியவர் John McGregor

தொகுப்பு This Isn’t The Sort Of Thing That Happens To Someone Like You

2

சிக்கலிலிருந்து தப்பித்தல்

நெருப்பு, அந்தச் சிறிய வேசிமகன் எதிர்பார்த்ததைவிட விரைவாகப் பரவியது.

கதை Fleeing complexity

எழுதியவர் Jon McGregor

தொகுப்பு  This Isn’t The Sort Of Thing That Happens To Someone Like You

//அன்பானவர்களே! மொழிபெயர்ப்புப் பயிற்சிக்காக இனி இந்த தளத்தில் இதுபோன்று ஏதாவது அடிக்கடி ஏதாவது பகிரப்படும். இதன் ஆங்கில மூலத்தைப் படிக்கும் வாசகர்களோ, அல்லது தமிழ் மூலத்தை மட்டும் படிக்கும் வாசகர்களோ இதிலுள்ள நிறை குறைகளை எடுத்துகூறினால் நல்லது//

Jon McGregorஇன் கதைகள் அற்புதமான வாசிப்பனுபவம் தரக்கூடியவை. மிக நுட்பமாக சில சமயங்களில் ஒரேயொரு படிமத்துடன், சில சமயம் வெறும் உணர்வு மற்றும் சமயங்களில் மிக மிக புதிதான உத்தியில் எழுதிப்பார்க்கப்பட்ட பரிட்சார்த்த கதைகள் என ஈர்க்கக்கூடியவை. கவித்துவமும் மேன்மையும் பொருந்திய எழுத்து இவருடையது. சமகால எழுத்தாளர்களில் நான் கவனிக்கும் குரல் இவருடையது. இவரது If Nobody Speaks of Remarkable Things படித்து சிலிர்த்தேன். சகாய விலையில் (பழைய புத்தகம்) அமேசானில் கிடைத்தது. இந்தத் தொகுப்பினில் That Color, In winter the sky, Looking up vagina, Air show, If its keep on raining, Fleeing complexity, Close, We wave and Call, Thoughtful, Memorial stone ஆகிய கதைகள் பல்வேறு காரணங்களுக்காக எனக்குப் பிடித்த கதைகள். அவற்றை வரும் காலங்களில் இங்கு மொழிபெயர்த்துப் பகிர்வேன்.

 

Advertisements