மிஷெல் ஃபூக்கோவை அறிதல்

மிஷெல் ஃபூக்கோ நம் காலத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவர் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரை முழுமையாக இங்கு புறக்கணிக்க முடியாது. அவருடைய கருத்தாக்கங்கள் தமிழில் எந்த அளவிற்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அதற்கான ஒரு முயற்சியினை சென்னை பல்கலைகழகம் எடுத்திருக்கிறது. மிஷெல் ஃபூக்கோ ஆய்வு வட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பயிற்சிப்பட்டறைகள் நடத்தி வருகின்றனர். ஆய்வு மாணவர்களால் மட்டும் வாசிக்கபப்டும் ஃபூக்கோ அனைவரையும் சென்றுசேர அவரைப்பற்றி தொடர்ந்து பேசவேண்டும். அதற்கு இந்தக் கருத்தரங்கு மிக இன்றியமையாததாக இருக்குமென நினைக்கிறேன். இந்த நிகழ்வில் பேசுபவர்கள் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் சூழல் அனுகூலமாக இருந்தால் கட்டாயம் இதில் கலந்து கொள்வேன்.

மிஷெல் ஃபூக்கோவை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவரது “power” குறித்த கருத்தாக்கத்தை வைத்து ஒரு கட்டுரை எழுதிப்பார்த்தேன். இன்னும் அவரிடம் உடைக்க வேண்டிய செங்கற்கள் நிறைய இருக்கின்றன. அவர் எழுப்பிய பிரமாண்ட கட்டிடம் முன்பு ஒரு எறும்பு நான். கட்டாயம் இதில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தகவலைப் பகிர்ந்தமைக்கு திரு சமயவேல்ந அவர்களுக்கு நன்றி.

ஆர்வமிருப்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

பெரியசாமி ராஜா 9842161619
இரத்தினக்குமார் 9489378358

Advertisements

ஒரு தவளை கிணற்றிலிருந்து வெளியே குதித்த தருணம் – பெங்களூர் கருத்தரங்கம் குறித்து ஒரு பதிவு

ஒரு ஆய்வு மாணவனுக்குண்டான தகுதி எனக்கு அந்தத் தருணத்தில் வந்துவிட்டதாகவே உணர்ந்தேன்

.

முன்பாக…

இதுவரை எனது மூன்று ஆராய்ச்சிக்கட்டுரைகள் கல்விப்புலம் சார்ந்த இதழ்களில் வெளியாகியுள்ளன. 2013ல் சென்னை Rajiv Gandhi Institute of Youth & Development கல்வி நிறுவனத்தில் Media and Youth என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வாசித்திருந்தேன். அந்த அனுபவம் இன்னும் பசுமையாக மனதிலிருக்கிறது. அற்புதமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் present பண்ணத்தெரியாமல் திக்கித் திணறி தொடை நடுங்கி ஒரு வழியாக வாசித்து முடித்தேன். அன்று நான் எந்த நிலையிலிருந்தேன் என்பதை உணர்ந்து கொண்டேன்.

1. நம்மிடம் உள்ளடக்கம் (content) இருக்கிறது, ஆனால் நமக்கு எதிரே திரளாக அமர்ந்திருக்கும் மனிதர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ளும் இலாவகமோ தெள்ளத் தெளிவான தங்குதடையற்ற ஆங்கிலமோ இல்லை.

2. பயந்து பின்வாங்கும் / பதற்றத்தில் உளறும் மனோபாவமே இருந்தது.

இவற்றை களைத்தெறிந்தால் மட்டுமே மேலெழ முடியும் இல்லையெனில் நாமும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவோம் என்ற பயமும் சேர்ந்துகொண்டது.

ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் ஆங்கிலவழிக்கல்வியை பயிலாமல் போய்விட்டோமே என்றொரு ஏக்கம் மனதில் இருந்துவந்தது. ஆனால் அதெல்லாம் ஒரு மாயை மட்டுமே. தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உழைத்தால் எதனையும் சாதிக்க முடியும். தொடர்ந்து தினமும் ஆங்கிலத்தில் கண்ணாடி முன்பாக நின்று பேசிப்பார்ப்பது, ஆங்கிலத்தில் சிந்திப்பது என்பதை வழக்கப்படுத்திக் கொண்டேன்.

எனது பேராசிரியர் ஜெய்சக்திவேல் அவர்கள் நான் முதலாமாண்டு படிக்கையில் ஒரு உபாயத்தினை கற்றுக்கொடுத்தார்.

அ) அனைவரும் Oxford Advanced Learner ஆங்கில அகராதி வாங்க வேண்டும்.

ஆ) ஆங்கில செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். முதல் முறை படிக்கையிலேயே நமக்கு புரிந்து விடும். இல்லையெனில் அடுத்தடுத்து வாசிக்கையில் அதன் மையத்தை பிடித்து விடலாம். எதாவது வார்த்தையின் பொருள் தெரியவில்லை எனில் அதற்கு அகராதியில் பொருள் தேடவேண்டும்.

இ) முதன் முறையாக ஒரு வார்த்தைக்கு அகராதியில் பொருள் பார்க்கும்பொழுது அதன் பக்கத்தில் பென்சிலால் ஒரு புள்ளியை வைத்துவிடவேண்டும்.

ஈ) அந்த குறிப்பிட்ட வார்த்தையின் பொருளை மனனம் செய்வதெல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரு சொற்றொடரில் / பேசும்பொழுது அந்த வார்த்தையை பயன்படுத்தும் முறை அகராதியிலேயே இருக்கும். அன்றைய நாளின் எதாவது ஒரு தருணத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தி பேசிவிட வேண்டும்.

உ) இந்தப் பயிற்சி தினமும் தொடரவேண்டும். ஏற்கனவே பொருள் பார்த்த வார்த்தையை முடிந்தளவு இன்னொரு முறை பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கநேர்ந்தால் இம்முறை பேனாவினால் புள்ளி வைத்து விட்டு நம் மண்டையில் நங் என ஒரு குட்டு வைத்து நம் ஞாபகமறதிக்கு தண்டனை தரவேண்டும்.

இப்படியொரு வழிமுறையை கற்றுக்கொடுத்தார். எத்தனை பேர் எங்கள் வகுப்பில் இதனை பின்பற்றினார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து பின்பற்றவில்லை என்றாலும் நானும் இந்தப்பயிற்சினை ஆர்வத்துடன் மேற்கொண்டேன்.

அடுத்து எனது மற்றொரு பேராசிரியர் பாலசுப்ரமணிய ராஜா. முதன் முதலாக எங்களது தேர்வுத்தாளை திருத்திவிட்டு ஒவ்வொருவருக்கும் சில அறிவுரைகளைக் கூறினார். எனக்கு அவர் கூறியது, ‘ஆங்கிலத்தில் பெரிய பிரச்சினையில்லை. ஆனால் நிறைய புதிய வார்த்தைகளை நீ கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். ஆங்கிலச் சொற்கள் (Vocabulary) தான் நம்மிடம் பிரச்சினை. வெறும் is was ஐ வைத்துக் கொண்டு இனி ஜல்லியடிக்கக்கூடாது என்று முடிவெடுத்த தருணமது.

இவரே தான் என்னை உலக சினிமா வெறியனாக்கியவர் என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும். Woody Allen ன் Midnight in Paris பற்றி ஒரு முறை வகுப்பில் கூறியுள்ளார். பிரெஞ்சின் கலை செயல்பாட்டில் நிகழ்ந்த புரட்சி ‘Renaissance’ பற்றி கூறும் பொழுது இந்தப்படத்தினைப் பற்றி கூறினார். அதனை நோட்டில் குறிப்பெடுத்து தேடிப்பார்த்து மிரண்டு பின்னர் Woody Allen ஐ தேடி… அப்படியிப்படியென அயல் சினிமா பரிட்சயம் கிடைக்கத்தொடங்கியது. இவரே City of God படத்தினை எங்கள் துறையில் திரையிட்டார். முதன் முதலில் நான் பார்த்த உலகசினிமா City of God. இப்பொழுது புரிகிறது என் வளர்ச்சியில் என் ஆசிரியர்களின் பங்களிப்பு எத்தகையது என்று.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இன்று தங்கு தடையின்றி ஆங்கிலம் பேசவும் படிக்கவும் முடிகிறதென்றால் இவர்களின் தூண்டுதலே காரணம். தொடர்ந்து உலக சினிமாக்களை sub title கொண்டு பார்த்தது + செய்தித்தாள் வாசிப்பு. அகராதியை பயன்படுத்துதல். தற்சமயம் தீவிர ஆங்கில இலக்கிய வாசிப்பு. இவைதான் எனது ஆங்கிலத்தை மேம்படுத்தின. என் துறையில் நான் ஆங்கிலம் பேசுவதற்கான சூழலே இல்லை. கட்டாயம் இருந்தால் தானே பேச முடியும். இங்கு தமிழ் மட்டும் தான். அதனால் எனது ஆங்கிலப்பயிற்சி இப்படித்தான் இருந்தது. ஆசிரியர்கள் எங்களை ஆங்கிலம் பேசச்சொல்லி தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மனது வைத்தால் தானே முடியும்.

சில மாதங்களாக ஆங்கில வாசிப்பில் கவனம் செலுத்திவருகிறேன். இவ்வளவு நாள் ஏன் ஆங்கில புத்தகங்களை வாசிக்காமல் விட்டோம் என்று என்மேலேயே கோபமாக வருகிறது. வாசித்த முதல் ஆங்கில நாவலே This blinding absence of light.

எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. திருநெல்வேலியில் மட்டுமே இருந்துகொண்டிருந்தால் பல விசயங்களை கற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கூட்டினை விட்டு பறந்து தூரமாக  சென்றால் தான் நம் வயதொத்தவர்கள் / நம் துறை சேர்ந்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், நாம் எந்த நிலையிலிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்று முடிவெடுத்தேன்.

அதன் முதல் முயற்சி தான் பெங்களூர் கிறைஸ்ட் பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச சினிமா கருத்தரங்கம் (International conference on cinema – Cinema breaking the fourth wall) ஆகஸ்ட் 4 & 5.

image

எனது கட்டுரையை தெளிவாக தயார் செய்து விட்டு எனது வழிகாட்டியும் எங்கள் துறை தலைவருமான பேராசிரியர் கோவிந்தராஜூ அவர்களிடம் திருத்தங்களை பெற்று அனுப்பி வைத்தேன். என் மேல் இவர் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருநாளும் உடைத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் ஒருவரும் என்னை நம்பாத (நானே நம்பவில்லை) சமயத்தில் என்னிடம் எதோ திறமையிருக்கிறது என்று நம்பியவர், நம்பியது மட்டுமல்லாமல் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பினையும் கொடுத்தவர்.

ஆனால் எனக்கு இவர் வாய்ப்பளித்த சமயத்தில் என் மேலேயே நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன். என் தகுதிக்கு மீறிய வாய்ப்பாகவே கருதிவந்தேன். முனைவர் பட்ட ஆய்வை நினைத்து பயமாகவும் இருந்து வந்தது.

மேடையேறிய சமயத்தில் கைகால்களில் உதறலெடுத்தது உண்மை தான். மிஷல் பூகோ குறித்து பேசிவிட்டு எனது கட்டுரைக்குச் சென்றேன். ‘பாரீஸில் மிஷல் பூகோ தத்துவ பாடமெடுக்கையில் அதனை கேட்க அத்தனை பேர் வரிசையில் நிற்பார்களாம். மிகப் பெரிய வரிசை அந்தக் கல்லூரி வாயில் வரை இருக்குமாம். முன்பே வருபவருக்கே வகுப்பில் இருக்கை கிடைக்குமாம். இங்கிருக்கும் கூட்டம் எனக்கு அளப்பரிய உற்சாகத்தை தருகிறது. பார்க்கலாம் எதிர்காலத்தில் நான் பூகோ போன்று என் துறையில் மின்னுவேனா என்று… அனைவருக்கும் வணக்கம்.. ‘ என்று ஆரம்பிக்கையில் ஒரு நம்பிக்கை வந்ததே அட அட. அங்கு உற்சாகமானேன்.

தெளிவாக ஆங்கிலம் பேச முடியும், தொடர்ந்து உரையாட முடியும், என்னுடைய கட்டுரையை defend செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எனக்களித்தது இந்தக் கருத்தரங்கம். அத்தனை பேர் முன்னிலையில் ஆங்கிலம் மட்டுமே தொடர்பு மொழி., நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். சற்றும் சளைக்கவில்லை. அமைதியாக அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளித்தேன். என் கட்டுரை மீது அபார நம்பிக்கையிருந்தது.

இனி தைரியமாக எந்த ஒரு கருத்தரங்கிலும் என்னால் கட்டுரை வாசிக்க முடியும். இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளின் கருத்தரங்கிற்கு செல்லவும் ஆர்வமாக இருக்கிறேன்.

இப்படி என்னிடமிருந்த பயத்தையெல்லாம் உடைத்து என்னால் முடியும் என்னிடமும் திறமை இருக்கிறது என்று என்னை உணரச்செய்தது பெங்களூர் கருத்தரங்கம். மறக்க முடியாத அனுபவம். குறித்து வைக்கப்படவேண்டிய தருணம். கிணற்றுத் தவளையாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பை உபயோகித்திருக்கமாட்டேன்… என்று நன்றாகவே தெரிகிறது.

இத்தனை மனிதர்களின் பங்களிப்பு என் வளர்ச்சியில் இருந்தாலும் அனைத்தையும் மீறி ‘போடா! உன்னால முடியும்’ என்று மனதினுள்ளே ஒரு உத்வேகத்தை உருவாக்கியது தீவிர இலக்கிய வாசிப்பு தான். இந்த தருணத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மையோ, பயமோ துளியுமில்லை. இது அதீத நம்பிக்கையில்லை 🙂