இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில்: குறிஞ்சிவேலன்

சாகித்திய அக்காதெமி

முதல் வெளியீடு: 2000

விலை: 140

IMG_20160222_211557

 

எப்போதும் பகைவர்களிடம் மட்டும் கருணை காட்டாதீர்கள். நாம் காட்டும் கருணையிலிருந்து அதிகப் பலத்தைத் தேடிக்கொள்ளும் பகைவன் மீண்டும் நம்மை எதிர்கொள்ளும்போது நாம் தோல்வியுற நேரிடும். இதுதான் எங்கள் நியதி. தேவையானால் மிருகத்தை இந்த நியதியிலிருந்து விட்டு விடலாம். ஆனால் மனிதனுக்கு மட்டும் இரண்டாவதாக ஒரு வாய்ப்பினை அளித்து விடாதீர்கள்.

லட்சியக் குறியை நாம் கண்ணால் காண வேண்டும் என நினைக்க வேண்டாம், அதை மனத்தால் தான் காண வேண்டும்.

வீழ்ந்த இடத்திலேயே தீர்த்துக் கட்டுவது என்பதுதான் காட்டின் சட்டம். ஒரு அடிபட்ட மிருகம் தப்பித்துக் கொள்ளக் கூடாது.

– நாகர் குலத்தலைவன், பீமனிடம் சொல்வது.

 

இந்திரியத்தை அழிக்கும் அக்னி ஜ்வாலைகள்

கீழே விழும் மற்றவர்களுக்காக காத்திருக்காமல் நீ  யாத்திரையைத் தொடர்வதே உத்தமம் – யுதிஷ்டிரன், பீமனிடம்
பயம் என்பதற்கு, நான் முன்பே விடை கொடுத்துவிட்டிருக்கிறேன் – பீமன்
பகைவனுக்கு அருள நான் ஒன்றும் தேவன் அல்லவே – பீமன்
‘முயலுங்கள்… நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் கிடைத்துவிட்டால்’… – குந்தி (திரௌபதையின் சுயம்வரத்திற்கு பாண்டவர்கள் செல்லும் முன்பாக)
அவள் மிகவும் அழகியாம். அவள் வியர்வைக்குக் கூட தாமரைப் பூவின் நறுமணமாம் – திரௌபதி பற்றி, அர்ச்சுனன் பீமனிடம் சொல்வது.
பீமன்: ஓ! பெண்களின் விருப்பு வெறுப்புகளைப் பார்ப்பது நமக்கு தான் பழக்கமில்லையே!
தருமன்: அப்படியென்று யார் சொன்னது? குரு வம்சம் எப்போதுமே பெண்களைப் பூஜித்து தான் வந்துள்ளது.
பீமன்: ஆமாமாம். பெண்களைப் பூஜித்துதான் வந்துள்ளார்கள்! ஒரு குருடனுக்காக காந்தாரியை விலைக்கு வாங்கினார்கள். நிச்சயம் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்ததும், தங்கத்திற்கு இரத்தினங்களும் ஆசைப்பட்ட சல்லியர் தன மகள் மாத்ரியைப் பாண்டுவுக்கு விற்றார்.
ஒரு வீரன் என்பவன் எப்போதுமே எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் நியதி.
‘லௌகீக இலட்சியத்திற்காக வாழும் விஷ ஆத்மாக்கள்’
ஆத்மாவின் ஆடை மாற்றல்தான் மரணம்!
Advertisements

எஸ்.எல்.பைரப்பா எழுதிய பருவம் : மகத்தான வாசிப்பனுபவம்

மகாபாரதக் கதையில் காணப்படும் போர் – அமைதி, அன்பு – இறப்பு, மனிதன் – கடவுள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட புகழ்பெற்ற கன்னட நாவல்.

கன்னட மூலம்: எஸ்.எல்.பைரப்பா 
தமிழாக்கம்: பாவண்ணன் 
சாகித்திய அக்காதெமி 
முதல் வெளியீடு: 2002
ISBN 81-260-1438-5
விலை: 350 ரூபாய் 


முன்னுரை

இந்த நாவலை தனது படைப்பூக்கதுக்கு ஆதார ஊற்றாக விளங்கும் தாயார் கௌரம்மாவுக்கு சமர்ப்பிக்கிறார் பைரப்பா.

*

பீடிகை 1

வருடத்திற்கு இப்படியொரு நாவல் படித்தால் போதும். இதுபோன்று எந்த நாவலும் என்னைப் புரட்டிப் போட்டதில்லை.மனதில் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதில்லை.

பீடிகை 2

இதுவரை படித்த ஆயிரம் பக்க நாவல்களில் எந்த நாவலுமே முதல் பக்கத்தில் தொடங்கி இறுதிப்பக்கம் வரை குன்றாத சுவாரஸ்யத்துடன் இழுத்துச் சென்றதில்லை.

பீடிகை 3

எங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத்தில் இந்த பருவம் நாவல் மட்டும் 3 பிரதிகள் உள்ளன. அடிக்கடி என் கண்ணில் பட்டுவிடும். ஒரு சோகமான செய்தி என்னவெனில் அந்த மூன்று புத்தகங்களையும் யாரும் இதுவரை எடுத்து வாசித்ததில்லை.

சில நாட்களாகவே எந்தவொரு புத்தகத்தையும் முழுமையாக வாசிக்க முடியாமல் பாதியில் நிறுத்திவிடும் நோய் பீடித்திருந்தது. இந்நாவலை வாசித்ததில் ஒரு ஆத்ம திருப்தி. Yes. I am Back to form. நெடுநாள் 50 ரன்கள் கூட அடிக்காத விராத் கோஹ்லி சதமடித்து பழைய பார்மிற்குத் திரும்புதல் போன்றது. நன்றி பைரப்பா, பாவண்ணன். எனது நண்பன் ஸ்ரீநிவாசன்  _ /\_

அறிமுகப்படலம் 

ஏற்கனவே வாய் மொழியாகக் கூறப்பட்டு, பின்பு பலரால் எழுதப்பட்டு (மறு உருவாக்கம்) தோல்பாவைக்கூத்தாக, வீதிநாடகமாக, சித்திரக்கதையாக…. தூர்தர்ஷன் முதல் ஸ்டார் விஜய் வரை நாடகமாக ஒளிபரப்பப்பட்டு நம் ஆன்மாவின் ஆழத்தில் ஊறிய மகாபரத்தக் கதைதான் இந்த நாவல்.

ஆனால் ‘முன்னொரு ஹாலத்தில ஒரு ராஜா இருந்தானாம்…….’ என்று தொடங்கி ‘…..பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். -முற்றும்-‘… என்று முடியும் நாவல் இல்லை இது.

மூல நூலான வியாசபாரதத்தை ஒரு முறை முழுக்கவும் படித்த பிறகு வேத காலத்தின் இறுதிப்பகுதியில் நிலவிய பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளைப் பற்றியும் சமய நிலைகளைப் பற்றியும் தீவிரமாக ஆய்வு செய்திருக்கிறார் பைரப்பா.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் ‘பருவம்; நாவலை 20.10.1975 ல் எழுதத் தொடங்கி 27.12.1976 ல் முடித்திருக்கிறார்.

ஆரியர்களின் சுபாவத்தைப் பிரதிபலிப்பதாகவும் அவர்களின் வாழ்க்கை முறையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சொல்வதாகவும் இந்த புத்தகத்தினை சித்தரிக்க வேண்டுமென்பதே பைரப்பாவின் முடிவாக இருந்திருக்கிறது.

IMG-20151121-WA0007
FRONT COVER OF Tamil FIRST EDITION

நாவலின் தொடக்கம்

மேலே கூறியதைப்போல வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து விலகி புதியதொரு உத்தியைக் கையாண்டிருக்கிறார் பைரப்பா.

துரியோதனன் தங்களுக்கு நாட்டைத் திருப்பித் தராததும் சமாதானப் பேச்சுக்கு வந்த கிருஷ்ணனை அவமதித்ததும் போருக்கு முக்கிய காரணமாகின்றன. ஆரியவர்த்தம் இதுவரை காணாத (மிகப்பிரமாண்டமாக / கோரமாக இன்னும் எல்லாமுமாக) போராக அது இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். போருக்கான முஸ்தீபுகளில் இரண்டு பக்க ஆட்களுமே தீவிரமாக இறங்குகின்றனர்.

1.படைபலம் திரட்டுவது: அதாவது ஒவ்வொரு நாட்டு அரசனையும் நேரில் கண்டு தங்கள் நிலைமையை எடுத்துக் கூறி தங்களுக்கு உதவும்படி கேட்பது. 2.பின்னர் தேர்களைச் சரி செய்வது, 3.படைக்கருவிகளை, 4.போர்த் தளவாடங்களை தருவிப்பது அல்லது உரியவர்களைக் கொண்டு தயாரிப்பது அல்லது பழுதானவற்றை செப்பனிடுவது போன்ற வேலைகைச் செய்ய பலர் முடுக்கிவிடப்படுகிரார்கள்.

இப்படியிருக்க..

மத்ர தேசத்து அரசனும் பாண்டவர்களின் தாயாராகிய மாதுரியின் (பாண்டுவின் இரண்டாம் மனைவி மாதுரி. முதல் மனைவி குந்தி) அண்ணனான சல்லியன் என்ற அரசனின் பார்வையில் தொடங்குகிறது நாவல்.

பாஞ்சால தேசத்து தூதுவன் பாண்டவர்கள், சார்பாக ‘போருக்கு உதவும்படி’ கேட்க., கௌரவர்கள் சார்பாக துரியோதனனின் சகோதரன் துச்சாதனனே நேரில் வந்து சல்லியனிடம் உதவி கேட்கிறான். “பிதாமகர் பீஷ்மரே கௌரவர்களுக்கு பக்கபலமாக (மன்னிக்கவும் முன்னின்று) இருக்கும்போது நாம் எப்படி பாண்டவர்களுக்கு உதவுவது” எனக் குழம்புகிறார் சல்லியன்.

இங்கிருந்து தொடங்கும் நாவல், பின்னர் குந்தியின் பார்வையில் விரிகிறது. பாண்டுவை மணமுடித்து, குழந்தை பிறக்காததால் பின்னர் தேவர்கள் மூலம் ‘நியோக’ அடிப்படையில் குழந்தைகளைப் பெற்றது.., என அவளது வாழ்க்கை நிகழ்வுகள் அவளின் மனவோட்டமாக வருகின்றது.

தொடர்ந்து பீமன், கிருஷ்ணை (திரௌபதி), அர்ச்சுனன், கிருஷ்ணனின் நண்பன் யுயுதானன், கர்ணன், பிதாமகர் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணதுவையபாணர், இறுதியாக துரியோதனன் பார்வையில் சென்று போருக்கு பின்பு தரையைத் துளைக்கும் மழையுடன் முடிகின்றது.

Narration

Chronological orderல் இல்லாமல் ஒவ்வொருவரின் மனதின் நினைவோடையாக இறந்தகாலம் வந்து போகின்றது. நிகழ்கால வால்விர்க்கிடையே அனைவரும் பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கின்றனர். (இந்தமுறை கதை சொல்லல் முறை சிலருக்கு கடுப்படிக்கலாம். ஓவர்டோசாக இருக்கலாம். I Liked it )

சிறப்பம்சங்கள் 

 • எந்தவித மாய, மந்திரமும் இல்லை.
 • (Blue ,Green mat & Chroma Key தொழில்நுட்பத்தில் பார்த்த மகாபாரத டிவி நாடகங்ககளை நினைத்துக்கொள்கிறேன். கௌரவர் சேனையிலிருந்து பீஷ்மர் அம்பு விடுகிறார். close upல் அவரது முகம், மினுங்கும் லிப்ஸ்டிக்குடன் பளபளக்கும் முகம். அதீத lighting. எதிர்த்தரப்பான பாண்டவர் சேனையிலிருந்து அர்ச்சுனன் அம்பு விடுகிறார். இரண்டையும் தனித்தனியே காட்டுகிறார்கள். பின்னர் இரண்டும் நடுவானில் மோதி அதில் ஒன்று மட்டும் சிதறுகிறது)
 • கதைமாந்தர்கள் அனைவரும் எளிய மனிதர்களாகவே வருகின்றனர்.
 • கர்ணனுக்கு வயது 65.
 • பாண்டவர்களில் மூன்று பேருக்கு வயது 50ற்கு மேல், இரண்டு பேருக்கு 30ற்கு மேல்.
 • கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் வயதானவன். தீராத பல்வலியால் அவதிப்படுகிறான்.
 • துரியோதனனின் தந்தை திருதராஷ்டிரனுக்கு சிறுநீரை சிறிது நேரம் கூட அடக்க முடியாது.
 • கருத்த நிறமுடையவளும் மூப்படைந்து தன அழகினை இழந்த தலை முடி நரைத்த திரௌபதி.
 • இப்படி பல விசயங்களில் என் மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றிய கற்பனைப் பிம்பங்களை (அதென்ன கற்பனை பிம்பங்கள்! எல்லாம் தூர்தர்ஷன் விஜய் தொலைக்காட்சிகளால் மனதில் பதிந்தவை) அடித்து நொறுக்குகிறது இந்த நாவலின் characterization.
 • சூதாட்டத்தில் துரியோதனனிடம் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர் பாண்டவர்கள். பின்னர் சபைக்கு இழுத்து வரப்படும் திரௌபதையின் உடையினை துச்சாதனன் அவிழ்க்க முயல்கையில் சத்தியமாக எந்தக் கடவுளும் வரவில்லை. அப்போது வீட்டுக்கு விலக்காக (இந்த ‘வீட்டு விலக்கு வார்த்தையை வெறுக்கிறேன். வேறு பொருத்தமான வார்த்தை இருந்தால் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். எனக்கும் சொல்லுங்கள்) இருப்பதால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள் திரௌபதை.
 • குந்திக்கும் பீமனின் தந்தை (நியோக முறைப்படி) தேவருலக சேனாதிபதிக்கும் வரும் காதல் அற்புதம். பிரதா பிரதா என அவன் உருகுவது … _ /\_
 • பீமன் வனவாசத்தின்போது இடும்பன் என்ற அரக்கனைக் கொள்கிறான். அப்போது இடும்பனின் தங்கை சாலகடங்கடியை மணக்க நேர்கிறது. அவர்களுக்குப் பிறக்கும் மகனே கடோத்கஜன். ஆனால் பீமன் கடோத்கஜன் பிறந்ததுமே, தாய் குந்தியின் வற்புருத்தலின் பேரில் சாலகடங்கடியை (இடும்பி) விட்டு விலகுகிறான். — ”போருக்கு உதவுமாறு” கிருஷ்ணன் யோசனைப்படி கடோத்கஜனின் உதவிகேட்டுப் புறப்படுகிறான். அங்கே முதன்முதலாக தன் மகனை பீமன் பார்க்கும் கணமும் இடும்பையைப் பார்க்கும்போது அவள் இவனைக் கட்டிக்கொண்டு அடிக்கும் கணங்கள்… வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அனுபவங்கள்.
 • க்ருஷ்ணதுவையபாணரின் மகன் இறந்த செய்தி பீஷ்மரை அதிர்ச்சியடையச் செய்வது.. (அந்தப் பகுதியை ஒரு தனி நாவலாகவே எழுதலாம்)
 • கர்ணன் தன் தாய் குந்தியை ஆற்றோரமாகச் சந்திப்பது & அவனிடம் சத்தியம் வாங்குவது … (நாவலில் எனக்கு மிகப்பிடித்த பகுதி)

இப்படி பல பகுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி சொன்னால் முழு நாவலையுமே இங்கே சொல்லிவிடும் அபாயம் இருப்பதாக உணர்கிறேன். ஆமாம். அந்தளவு சிறப்பான நாவல். ஆனால் ‘மகாபாரதம் பற்றிய முழுமையான தரிசனத்தை இந்நாவல் தருகிறதா?’ என்றால், இல்லை என்பதே எனது பதில். எனக்கு மிகப்பிடித்தமான ‘சகுனி; பற்றி அதிகமாக எதுவுமில்லை. காந்தாரியுடன் வந்த சகுனி அரண்மனையிலேயே தங்கிவிடுகிறான். இங்க்லீஸ்காரன் பட வடிவேலுவை ஞாபகப்படுத்துவது போல இந்த ஒரு வரியுடன் அவர் பற்றிய விவரணைகள் முடிந்துவிடுகின்றன. அந்தக் கதாபாத்திரத்தின் உளவியல் சார்ந்த விஷயங்கள், சகுனியின் மனவோட்டம் என எதுவுமில்லை.

சத்திரியர்களைத் தன் கோடாலியால் கொன்று குவித்த (அதொரு வயலண்ட் சாகா) பரசுராமர் பற்றியும் இரண்டு பக்கங்களே வருகிறது.

மொழிபெயர்ப்பு

மிக மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு. இந்தப் பணிக்காக பாவண்ணன் சாகித்திய அகாடமி விருது வாங்கியிருக்கிறார் என்பதனை அறிகிறேன். அந்தக் காலகட்டத்தில் வெளியான மற்ற மொழிபெயர்ப்புகள் குறித்து தெரியவில்லை. ஆனால் இதற்கு விருது கொடுத்தது மிக நியாயமான செயல் என்பேன். whatte work . பாவண்ணன் take a bow ..

சகிக்க முடியாத எழுத்துப்பிழைகள்

சாகித்திய அகாடமி வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் எழுத்துப்பிழைகள் இல்லாத பக்கமே இல்லை. அத்தனை எழுத்துப்பிழைகள். நாவல் வாசிக்க நன்றாக இருந்ததால்தான் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கீழ்க்குலத்தோர்

சத்திரியர் அல்லாதோரே கீழ்க்குலத்தோர். அரண்மனைப் பணிப்பெண்களுக்கும் அரசவம்சத்து பெருந்தலைகளுக்கும் பிறப்பவர்கள். யுயுத்ஸு, உட்பட திருதராஸ்டிரனுக்கு மட்டும் 86 பிள்ளைகள். அனைவரும் அரண்மனைப் பணிப்பெண்களுக்குப் பிறந்தவர்கள். கர்ணன் மேல் பீஷ்மருக்கும், துரோணருக்கும் வெறுப்பிருக்கக் காரணம் அவன் சத்திரியன் அல்ல என்பதே. (அனைவரும் அறிந்ததே)

— இவர்களது வாழ்க்கை மிக மிக மோசமானது.அரசியோடு அரசனின் ஆனந்தத்துக்கென்று அளவற்ற பெண்கள். சாதாரண வைசியர்களைப் போல விவசாயம் செய்கிற சுதந்திரமும் இல்லை, அரசகுமாரர்கள் என்ற அதிகாரமும் இல்லை. ஒருவகையில் இந்நாவல் இவர்கள் பற்றியா நாவல்தான்.

ஆசிரியர்

“பர்வம் எழுதிய அனுபவம் எனக்குள் புதிய உணர்வையூட்டியது. நான் புதிதாய்ப்பிறந்தேன். நம் பல நம்பிக்கைகளின் அடிப்படையே பழக்கம்தான். இவற்றைத் துறந்து வாழ்க்கையின் இறுதிப்புள்ளியான மரணத்தின் கோணத்திலிருந்து வாழ்க்கையைப் பார்த்தால் ஒரு புது தெளிவு பிறக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது. என் வயது என்ன ? இன்னும் எத்தனை ஆண்டுகால வால்ல்க்கை எஞ்சியுள்ளது? அதற்குள்  நான் காணக்கூடிய உண்மை ஏதேனும் இருக்குமா? என்கிறக் கேள்விதான் ஆதாரசுருதியாய் எழுந்து என் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.” – எஸ்.எல்.பைரப்பா

Bhyrappaa
Portrait of S. L. Bhyrappa Photograph circa 1984, Mysore (http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=1400)

எஸ்.எல்.பைரப்பா எழுதிய மற்ற நாவல்கலை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். அவர் எழுதிய ‘தாண்டு’ நாவல் (சாஹித்திய அகாடமி வெளியீடு) நூலகத்தில் இருக்கிறது. எஸ்.எல்.பைரப்பா ஒரு சூப்பர் ஸ்டார் 😉

முடிவுரை 

நான் ஏற்கனவே கூறிய மூன்று பீடிகைகளில் முக்கியமான அனைத்தும் சொல்லிவிட்டதாகவே நம்புகிறேன். இந்த நாவலில் எது புனைவு எது அபுனைவு என்பதை நீங்களே வாசித்து உணர்ந்துகொள்ளுங்கள்.

பெருங்கதையாடல், உள்மடிப்பு, படிமம், ஊடிழைப்பிரதி போன்ற வார்த்தைகளைத் தூவி ஆன்மா, மனம், உயிர், காலம், வெளி, கதை சொல்லி, சமகாலம், நிதர்சனம், பொருக்காடிப்போன சமூகம், ஸ்மரணையற்ற வாசகர்கள், நுண்ணுணர்வு, நுட்பம் போன்ற வார்த்தைகளின் உதவியுடன் நான் எந்த சிற்றிதழ்களுக்கும் எழுதவில்லை. மிக சாதாரண நடையில் எனக்குத் தோன்றியதை டைப் செய்கிறேன். எனக்கு எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லை. Self publishing அளப்பரிய சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் தருகிறது என்றால் அது மிகையல்ல. இந்நாவல் ‘வெண்முரசு’ வாசிப்பதற்கான ஒரு warm up என்பது எனக்குள்ளேயே இருக்கட்டும்.

என் வாழ்வில் நான் வாசித்த நாவல்களில் மிக அருமையான நாவல் இந்த ‘பருவம்’. எனது கன்னட நண்பர் ஒருவரைக்கொண்டு பைரப்பா என்னும் அந்த அற்ப்புத மனிதனுக்கு ஒரு கடிதம் எழுத முயலுவேன்.

பொறுமையாக நம்பி வாசித்தமைக்கு நன்றிகள் 🙂

NOTES

 • தலைப்பு வைத்து முன்னுரை முடிவுரையுடன் எழுதியது ஒரு காமடியான செயல் என்பது எனக்குத் தெரியும். சின்ன வயதில் இப்படி பல உட்டாலக்கடி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அந்த வடிவமைப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அவ்வளவே.
 • பருவம் நாவல் தற்சமயம் கடைகளில் கிடைக்கிறது.

 

Parva english
PARVA – ENGLISH NOVEL FRONT COVER

 

Parvam - kannadam
PARVAM – KANNADA NOVEL FRONT COVER
IMG-20151205-WA0001
NEW EDITION – PICTURE COURTESY: My Friend Balajai, Bangalore