எனக்கு பிடித்த கவிதைகள் 3 – றியாஸ் குரானா

றியாஸ் குரானா எழுதிய கவிதை

அதிகம் பாவிக்கப்பட்ட பறவை

இது அதிகம் பாவிக்கப்பட்ட ஒரு பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பல வருடங்களாக
திரும்பத் திரும்ப வரையப்பட்டபோதிலும்
ஒரு இறகும் தொலைந்துவிடவில்லை
நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும்
வண்ணங்களை மாற்றிக் காண்பிக்கும்
இந்தப் பறவை;
தினமும் அதிகாலையில்
சித்திரத்திலிருந்து வெளியில் சென்றுவிடுகிறது
அந்த நேரத்தில்தான்
சித்திரத்தில் திருத்த வேலைகள் செய்யமுடியும்
இரவில், சித்திரத்திலுள்ள
வர்ணங்களையெல்லாம் தின்றுவிடுகிறது
இப்படித்தான் அன்றொரு நாள்
ஒரு அழகிய பாடலை எழுதிவைத்தேன்
கண்முன்னே சொற்களைக்
கொத்தித் தின்றேவிட்டது
இலக்கியங்களும்
ஓவியங்களும்
மிக அதிகம் பாவித்த இந்தப் பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பெரும்பாலும்
அந்தப் பறவை எதுவென்று
இப்போது ஊகித்திருப்பீர்கள்
இல்லையெனில்; இனியும் ஊகிப்பதற்கான
அவகாசம் உங்களுக்கில்லை
வாசிப்பதை நிறுத்திவிட்டு
தயவு செய்து போய்விடுங்கள்
இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை
கவிதைக்குள் வருகின்ற நேரம்

°

image