தலைப்பு: இந்த மூன்று படத்திற்கும் தொடர்புள்ளது (அ) அறிமுகம்

  1. ஷவம் (2015) இயக்கம்: டான் பலதரா

www.TamilRockers.li

கேரள கிராமப்புறமொன்றில், நடுத்தர கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த தாமஸ் இட்டிக்கோரா விபத்தில் பலியானதையடுத்து அவரது சடலம் வீட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. அவரது மனைவி, வாரிசு; தாய்; மூத்த இளைய சகோதரர்கள், அவரது மற்ற உறவினர்கள்; நண்பர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றனர். ஒரு மணிநேரம் மட்டுமேயுள்ள இப்படத்தில் மனிதன் சக மனிதனின் இழப்பில் காட்டும் பொறுப்பின்மை குரூர பகடியாக வெளிப்படுகிறது. உறவுகளுக்குள் இறுதிச்சடங்கு செய்வதற்கான செலவினை ஏற்பதில் வரும் உரசல்கள்; சர்ச் கட்ட நிதி தராததால்தான் தாமஸ் மாண்டதாக இறுதிச்சடங்கிற்கு வரும் தலைமைப் பாதிரி போட்டுடைப்பது அதனையே மற்றவர்களுக்கு மிரட்டலாகச் சொல்வது போல பல உதாரணங்கள் சொல்லலாம். மெதுவாக நகரும் திரைக்கதை; ஆவணப்படம் போன்ற ஒளிப்பதிவு, முன்னணியில் பார்வையாளர்களை உருத்தாத பின்னணி இசை; கருப்பு வெள்ளை நிறம்; சற்றும் மிகையில்லாத இயல்பான வசனங்கள்; தொழில்முறையினரல்லாத நடிகர்கள் என 7 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த சுயாதீன சினிமா பல்வேறு காரணங்களுக்காக மிக உயர்வான இடத்தைப் பார்வையாளன் மனதினில் பெறுகிறது.

1, படத்தின் தலைப்பு ‘ஷவம்’: இதில் எவ்விதமான ‘சுட்டிக்காட்டுதலும்’ இல்லை. ‘பிணம்’. நல்லதோ, கெட்டதோ, அதற்கு என்ன ஆகிறது? அது எப்படியிருந்தது.. அதன் நிலை என தலைப்பில் எதுவுமில்லை. வெறும் பிணம். எனவே இயக்குநர் இதைத்தான் சொல்கிறார் என கறாராக ஒற்றை முடிவினைப் பார்வையாளரால் அடையவே இயலாது. சமயங்களில், நாவல்களிலும், சிறுகதை மற்றும் கவிதைகளில் அவற்றிற்கு வைக்கப்படும் தலைப்பு வன்முறையானதாக தெரிந்துள்ளது. காரணம் படைப்பாளி தான் வைக்கும் தலைப்பின் மூலமாக ’இதைத்தான்’ சொல்கிறேன் என நிறுவுகிறார். இது நம் தனிப்பட்ட கருத்து தான். ஆனாலும், தலைப்பினைத்தாண்டி படைப்பிலுள்ள இழைகளை வாசகன் கண்டுணரும்போதே படைப்பாளி மகிழ்வடைகிறான், அப்படைப்பும் மேன்மையடைகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

2. பின்னணி இசை: வழக்கமான திரைப்படங்களில், சோகத்திற்கு, மகிழ்விற்கு, காதல் மனநிலைக்கு, திகிலுக்கு என பின்னணி இசை கோர்க்கப்பட்டிருக்கும். மகிழ்வான காட்சியில் அதற்கேற்றாற் போல இசை வழங்கும்போது ‘நான் இந்த இடத்தில் பார்வையாளன் மகிழ்வுர வேண்டுமென நினைக்கிறேன்’ என இயக்குநர் முடிவெடுக்கிறார். மகிழ்வைத்தாண்டி வேறொன்றையும் பார்வையாளன் எய்துவதில்லை. ஷவம் படத்தைப் பொறுத்தமட்டில், அப்படி பார்வையாளர்களை ஒருதிசை நோக்கிச் செலுத்தும் தன்மை துளியும் இல்லை. இதனால், குறிப்பிட்ட காட்சி, அதீத சோகமா? பகடியா? வறட்டு எதார்த்தமா என இயக்குநரோ இசை அமைப்பாளரோ சொல்வதில்லை. இதன் மூலம் பார்வையாளனின் பங்களிப்பைக்கோரி அவனாக இங்கு ஒரு முடிவினை எடுத்துக்கொள்ள இயக்குநர் வழிவைகை செய்கிறார்.

3. மையநீரோட்ட சினிமாவின் பிரபலமான நடிகர்கள் இதில் நடிக்காதது: நடிகர்கள் என்னதான் பல்வேறு வகையான பாத்திரங்களை எற்று குரல், முகம், ஆடை என மாற்றி நடித்தாலும் அவர்கள் படங்களைப் பார்க்கையில் அவர்களுக்கென உள்ள பிம்பம் நம் மனதில் முன்பாகவே தோன்றிவிடும். அதைத்தாண்டி அக்கதாபாத்திரமாகவே மாறி நம்மை வீழ்த்துவது அந்நடிகனின் தனித்திறமை. இப்படத்தில் அனைவரும் புதுமுகங்கள். அவர்களை படத்தில் வருபவர்களாகவே நாம் அறிகிறோம். இது பார்வையாளனுக்கு அகண்ட வெளியை/ சுதந்திரத்தைத் தருகிறது.

ஆகவே நண்பர்களே, மேற்சொன்னபடி பார்வையாளனின் பங்களிப்பைக்கோரி அவனை நேரடியாக உள்ளே இழுக்கும் இப்படத்தை முழுநீள பகடியாக, எதார்த்த சூழலில் மனிதர்களின் அக அழுக்கினை அப்படியே படம்பிடிக்கும் ஆவணப்படமாகவும், இதையெல்லாம் தாண்டி இதுவரை இல்லாத வகையில் பிணத்தைச் சுற்றியுள்ள சூழலைக் காட்டியமைக்காக இதனை நவீன பிரதியாகவும் கொண்டு பல வகைகளில் அணுகலாம். நம்வரையில் இக்காரணிகளே இப்படத்தை உயர்வான தளத்தில் தூக்கி வைக்கின்றன.

நல்ல மலையாள திரைப்படங்களை தன் தளத்தில் வெளியிடும் நெட்பிளிக்ஸ் இப்படத்தை சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலேயே வெளியிட்டாலும் பலர் இதுகுறித்து அறியாமல் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்நேரத்தில் பார்த்துவிடுங்கள்.

  1. ஈ.மா.யாவு (2018) இயக்கம்: லிஜோ ஹோஸ் பெலிசெரி

/இப்படம் குறித்து எழுதும் எண்ணமில்லை. இது தந்த அனுபவத்தை எவ்வளவு முயன்றும் படம் பார்த்துமுடித்தவுடன் என்னால் எழுதமுடியவில்லை. ஷவம் குறித்து பேசுகையில் இதுகுறித்தும் சொல்வது கடமையாகிறது. எனவே இக்குறிப்பு ஒரு சிறு அறிமுகத்தையாவது வாசிப்பவருக்குத் தந்தால் நல்லது/ஈ.மா.யாவு கேரளாவில் வெளியாகி விமர்சனரீதியாக நல்ல வரவேற்பினைப் பெற்றுவந்த சமயத்தில் நண்பர் ஒருவர் உடனடியாக இதனைப் பார்க்கச்சொன்னார். ’Go attend this funeral’ என அவர் அனுப்பிய குறுஞ்செய்தி இன்னும் நினைவிலிருக்கிறது. சில நாட்கள் கழித்து, சென்னையில் இப்படம் வெளியானது. யாரையும் அழைக்காமல் தனியே சென்று பார்த்துவிட்டு வந்தேன்.

ee-ma-yau-moive-review-759

எர்ணாகுளத்தின் கடலோர மீனவ கிராமம் செல்லனம். அதில் ஒரு கிறித்தவ மீனவக் குடும்பம். வாவச்சன் மேஸ்திரி & பென்னம்மா. இவர்களது மூத்த மகன் ஈஷி. மகள் நிசா. மருமகள் சாபெத். நீண்ட நாள் கழித்து தன் குடும்பத்திற்கு திரும்பும் அந்தப் பகுதியின் பிரபலமான வாவச்சன் மேஸ்திரி கையில் ஒரு வாத்துடன் வருகிறார். அவர் இப்படித்தான். எப்பவாவது குடும்பத்தைப் பார்க்க வருவார். அன்று வந்ததும் மகனுடன் சேர்ந்து தாரளமாக மது அருந்துகிறார். பின்னணியில் கடலின் ஓங்காரமும் காற்றின் சப்தமும் அவ்வப்போது குரல் கொடுக்கும் கப்பல்களின் தீவிரமான ஹாரனும் இருக்கின்றன.போதை தலைக்கேரிய நிலையில், வாவச்சன் தன் மகனிடம், தனது தந்தை இறந்தபோது இந்த சுற்றுவட்டாரமே பிரமிக்கும் வகையினில் இறுதிச்சடங்கினை ஏற்பாடு செய்து அமர்க்களப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். அதற்கு ஈஷி, கவலைப்படவேண்டாம் உங்களுக்கும் நான் பிரம்மாண்டமாக அனைவரும் வாய்பிளக்கும்படி இறுதிச்சடங்கினை நடத்துவேன் என உறுதியகக் கூறுகிறான். பின்பு நாட்டுப்புறப்பாடலொன்றைப் பாடி, தள்ளாடியபடி நடனமாடுகிறார் வாவச்சன் மேஸ்திரி. கால் தடுக்கி கீழே விழுந்தவர் உயிர் அப்படியே பிரிந்துவிடுகிறது.

அதன் பிறகு ஈஷி தன் தந்தைக்கு எப்படி இறுதிச்சடங்கினை செய்து முடிக்கிறான் என்பதே முழுப்படமும். அவனுக்கு பொருளாதார நெருக்கடி வேறு. நண்பர்கள் உதவிக்கு வருகிறார்கள். இதில், வழக்கமாக கதையின் நாயகனுக்கு வரும் லட்சியமும், அதைச்சுற்றி அதன் முடிவு நோக்கி திரைக்கதை எழுதப்படுவதும் நிகழ்கிறது. இப்படம் ‘ஷவம்’ படத்திலிருந்து வேறுபடும் புள்ளி இதுதான். இப்படமும், மீனவ மக்களின் சமூக பொருளாதார நிலை, அவர்களை ஆட்டுவிக்கும் பாதிரியார், என அபத்த நகைச்சுவைக்கு தேவையான மிகைப்படுத்தல்களுடன் உக்கிரமான மனநிலைக்கு இட்டுச்செல்லும் முடிவைனையும் கொண்டுள்ளது. இதிலும் பின்னணி இசை இன்றி அமைதியும் இயல்பான சப்தங்களும் வலு சேர்க்கின்றன. மென்மையாக துவங்கும் படம் புயலென அடித்து ஆய்ந்து ஓய்கிறது. ஈஷியின் உக்கிர மனநிலை பார்வையாளனுக்குள்ளும் புகுந்து அது குறைய ஒரு நாளாவது ஆகும். ஆமென், அங்கமாலி டைரீஸ் படம் மூலம் தன் திறமையை நிரூபித்த லிஜோ ஹோஸ் இப்படம் மூலம் இந்திய சினிமா உலகில் முக்கியமான இடத்தினைப் பெறுகிறார். இதனை விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் எதிர்பார்க்கலாம்.

  1. டோக்யோ ஸ்டோரி (1953) இயக்கம்: யஜுசிரோ ஓசு

போருக்குப் பிறகான ஜப்பானிய நகரம். இன்னும் அதிலிருந்து முழுமையாக மீண்டுவராத தருணம். தங்களின் கடலோர கிராமத்தில் கடைசி மகளுடன் வசிக்கின்றனர் வயதான தம்பதிகள். தங்கள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள் எனலாம். அவர்களுக்கு நீண்ட தொலைவில் டோக்கியோ நகரத்தில் தங்கள் குடும்பங்களுடன் வசிக்கும் தங்கள் மகன், மகள் மற்றும் போரில் மாண்ட மகனின் மனைவி ஆகியோரைக் காண ஆசை வந்து டோக்யோவிற்கு ரயிலில் பயணமாகிறார்கள். அவர்களுக்கு பல ஆண்டுகள் கழித்து தங்கள் வாரிசுகளைக் காண்பதில் மகிழ்ச்சி. வாரிசுகளுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், தங்கள் அன்றாட பொருளீட்டும் வாழ்விலிருந்து நேரம் ஒதுக்கி பெற்றோர்களை டோக்கியோ நகரத்தைச் சுற்றிக்காட்ட அழைத்துச்செல்ல முடியவில்லை. மேலும், அவர்களுக்கு ஆர்வமோ, அதீத அக்கரையோ இருப்பதில்லை. ஆனால், சொந்த வாரிசுகளைக் காட்டிலும் வறுமையில் வாழ்ந்தாலும் அவர்களது ரத்த சொந்தமில்லாத மருமகள் நோரிக்கா நன்றாக கவனிக்கிறாள். அவர்களுக்கு டோக்கியோ நகரையும் சுற்றிக்காண்பிக்கிறாள். அவளது தூய்மையான உள்ளத்தைக் கண்டு நெகிழும் பெற்றோர்கள், அவள் தங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு 8 ஆண்டுகளாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியே வாழ்வது குறித்து கவலையுறுகின்றனர். வாரிசுகள் இணைந்து பெற்றோரை மலிவான ஸ்பா ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு பெற்றோர்களுக்கு தூக்கம் கெடுகிறது. விரைவிலேயே மகள் வீட்டிற்குத் திரும்பிவிடுகிறார்கள். இது மகளுக்கு பிடிக்கவில்லை. இப்படியே செல்லும் கதையில் ஒரு கட்டத்தில் தங்க இடமில்லாமல் அல்லல்படுகின்றனர். பின்னர், பெற்றோர்கள் இருவரும் யாருக்கும் தொல்லை தரவேண்டாம் என தங்கள் சொந்த கிராமத்திற்கே திரும்புகின்றனர். அங்கு அவ்ந்ததும் கலைப்புற்றிருந்த தாய் நோய்ப்படுக்கையில் வீழ்கிறார். இப்போது வாரிசுகளும், மருமகளும் டோக்கியோவிலிருந்து பெற்றோர்களின் கிராமத்திற்கு தங்கள் தாயாரைப் பார்க்க வருகிறார்கள்.

பிறகு கனத்த சில நிகழ்வுகளுக்குப் பிறகு ஆர்ப்பாட்டமில்லாமல் படம் முடிகிறது.

ஜப்பானிய கலாச்சாரத்தில் அமைதி முக்கிய பங்கு வகிப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். அமைதியாக இருக்கும் ஒருவரிடம் சென்று பேசிய பிறகு ‘உங்கள் அமைதியை குலைத்தமைக்காக மன்னிப்புக்கோருகிறேன்’ என்பார்களாம். ’டோக்கியோ ஸ்டோரி’ படம் பலருக்கு பல காரணங்களுக்காக இன்றும் பிடிக்கிறது. என்றும் பிடிக்கும். எனக்கு இப்படைப்பின் ’கலை அமைதிக்காக’ பிடிக்கிறது. இந்தக் கலை அமைதியை இதுவரை ஜப்பானிய படங்களில் மட்டுமே கண்டுள்ளேன்.

tOKYO sTORY 4

1953ம் வருடம் யஜுசிரோ ஓசுவின் இயக்கத்தில் வெளியான ‘டோக்கியோ ஸ்டோரி’ எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பினைத் தராத உணர்வுக்குவியல். இந்த மூன்று படங்களும் ஒரு புள்ளியில் இணைவதாக நம்புகிறேன் .அது மனிதர்களின் அக்கறையின்மை, சகிப்புத்தன்மையின்மை, உதவாமை என அக அழுக்காககவும் இருக்கலாம். இப்படத்தின் தாக்கம் தான் Nobody Knows, Like father; Like Son; our Little Sister, After the Storm, Shoplifters போன்ற படங்களை இயக்கிய சமகால ஜப்பானிய சினிமாவின் முதன்மை இயக்குநர் கொரிடாவிடமும் இருக்கிறதென அடித்துக்கூறலாம்.

ஒன்றைக் குறித்து எழுதும்போது ‘இதைக் குறித்து எழுதியே ஆகவேண்டுமா?’. நாம் எழுதவில்லை எனில் என்ன குடியா முழுகிவிடும்?’, ’திரைப்படம் தந்த காட்சி அனுபவத்தை வார்த்தைகளில் எப்படிக் கடத்துவது?’ என பல கேள்விகள் எழுந்தாலும். சுருக்கமாகவேணும் இதனைப் பகிர்ந்ததில் ஒரு மனநிறைவு.

சுக்ராளி கிராமம் | குர்கான் – ஹரியானா

21:00 மணி

ஜீ.முருகனின் கண்ணாடி சிறுகதை தொகுப்பினைக் குறித்து…

43a

1. ஜீ.முருகன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய ‘கண்ணாடி’ தொகுப்பின் கதைகள் மிக நேர்த்தியுடனும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவரது புனைவில் உருவாகும் நிலம், மனிதர்கள், நிகழ்வுகள், புதிர்த்தன்மை என அனைத்தும் சுவாரஸ்யத்துடன் இருக்கின்றன. ஆனால், சிறுகதையினை நகர்த்திச் சென்று முடிக்கும் இடத்தில் சோர்வே மேலிடுகிறது. அந்த சோர்வுக்கு அவற்றின் முடிவுகள் எதிர்பார்த்தபடியே இருப்பதும் அதனால் வாசகன் மனநிலையில் எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் போவதுமே காரணங்கள். ‘கண்ணாடி’ சிறுகதை எனக்கு நல்ல கதையாக தெரிந்தது. ஆனால், அதன் முடிவும் படு சாதாரணமாகவே இருந்தது. பொதுவாக, ஒரு படைப்பு இழுவையாக இருக்கிறது, கதை இல்லை, முடிவு சரியில்லை போன்றவை பாப்புலர் தளத்தில் புலங்கும் பிரயோகங்கள் என்பது தெரிந்ததுதான். இங்கு நான் குறிப்பிடுவது, கதைகள் வாசகனை அசைக்கவில்லை என்பதுதான். முதல் நான்கு கதைகளில் படு சாதாரண, செயற்கையான கதையாக ‘பாம்பு’ கதையினைக் குறிப்பிடலாம். இக்கதை கவுண்டர் சாதிக்குள் நிலவும் ஆதிக்க சாதி வெறியினையும், தங்கள் குலப்பெருமைக்காக எதுவரையிலும் செல்லக்கூடியவர்கள் என்பதனையும் பதிவு செய்கிறது. எனக்கு, கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக்கின் ‘கச்சார் கோச்சார்’ குறுநாவலே மனதில் வந்துகொண்டிருந்தது. மென்மையாக எழுதப்பட்டுள்ள அந்த நாவலின் பின்னணி முழுக்க வன்முறையானது இறுதியில் அது ஏற்படுத்தும் தாக்கமும் பெரிய அளவில் இருக்கும். 2. ‘எழுத்தாளனின் வசிப்பிடம்’ துள்ளலான கதையாக இருக்கிறது. காரணம் இதன் வடிவம் பழக்கப்பட்டதாக இருப்பினும் அதன் முடிவில் ஜீ.முருகன் செய்துள்ள ஒரு விசயம் முகத்தில் குறுநகை பூக்கச்செய்கிறது. ஒரு புதிரைக் கட்டமைப்பதைப் போல கட்டமைத்து அதனை சடாரென உடைத்துச் செல்கிறது. 3. ‘நீலா’ கதை அடங்காக் காமத்தை பேசுகிறது. இதுவும் சோர்வு தரக்கூடிய முடிவினையும், இதுதான் முடிவாக இருக்கும் என்பதனையும் முன்கூட்டியே உணர்த்தக் கூடிய கதையாகவும் அமைந்துள்ளது. ஆனால், அதிக வர்ணனைகள் இன்றி நேரடியாக கதைக்குள் வாசகனை இழுத்துச் சென்று ஆழத்தில் மூழ்கடிக்கும் கதை. 4. ‘கைவிடப்பட்ட கதை’யில் ஆசிரியர் இக்கதை எந்த நிஜ மனிதர்களின் வாழ்வை ஒத்திருக்கின்றன என்தைச் சொல்லாமலாவது விட்டிருக்கலாம் எனத் தோன்றியது. ’கியூபிச’ கதை என இதனைச் சொல்லலாம். பன்முக சாத்தியப் பாடுகளில் கதை சொல்லப்பட்டாலும், பல கதைகளாகப் பிரியாமல் முழுமையாக ஒரே கதையாக இருக்கிறது. ஆனால், இதன் பழைய பாணியிலான அங்கதமும் கதை சொல்லிய யுக்தியும் வாசகனுக்கு எரிச்சலூட்டுமடி அமைந்துள்ளன. 5. தொகுப்பில் மிகவும் கவர்ந்த கதைகளின் ஒன்று ‘ஆப்பிள்’. இதன் வடிவமும், மென்மையாக ஆரம்பித்து உச்சமனநிலையில் கொண்டுசென்று முடிக்கும் இடம் இதனை ’தொகுப்பின்’ சிறந்த கதையாக மாற்றுகிறது. 6. ‘நேர்காணல்’ ஒரு பாப்புலர் தள குறும்படமாக எடுக்க அனைத்துச் சாத்தியங்களையும் கொண்ட கதை. இதன் வடிவமும் போலியானதாக வாசகன் உணர்கிறான். 7. ‘வார்த்தை’ கதையில் ஆசிரியர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இதிலும், அவர் பயன்படுத்தியுள்ள புனைவுகளின் மிக வசதியான ஊடகமான ‘ஹலூசினேஷன்‘ அல்லது ‘இமேஜினேஷன்’ நன்றாக அமைந்துள்ளது. 8. தொகுப்பில் மிகுந்த உற்சாகம் தரக்கூடிய கதையாக வாசக மனம் ‘கரடிகளின் பாடல்’ கதையினையே தேர்ந்தெடுக்கும். ஆனால், இது கரடிகளின் பாடால் தானா? இக்கதையும், ’அற்புதம்’ என்ற கதையும் (அற்புதம்: இக்கதை வாழும் ஒரு மனிதரைப் பகடி செய்து எழுதப்பட்டது என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. நான் இக்கதையை வாசிக்கையில், கௌரவன் பாத்திரம் எனக்கு வேறொரு இலக்கியவாதியை நினைவுபடுத்தியது. ஆனால் இதெல்லாம் நமக்குத் தேவையில்லை. ஆனால், இப்படி வெறுப்பை வெளிப்படுத்தும் பகடி என தெரிந்ததும் இக்கதை பிடிக்காமல் போனது) மனிதர்களின் அபத்த நிலையை பகடி செய்கிறது. ’சர்க்கஸ்’ ஒரு சுவாரஸ்யமான புனைவுதான்.

முடிவாக, இக்கதைகளில் எதிலும் வாழ்வின் ஈரத்தை உணரமுடியவில்லை. ஆப்பிள் கதையில் ஓரளவு அதனை உணரமுடிந்தது. வெற்று புனைவுகளாக இவை எஞ்சிவிட்டதாக தோன்றுகிறது. பல கதைகள், கதைகளாகவில்லை. சில கதைகள் முடிந்தும் நீட்டி எழுதப்பட்டுள்ளன. மேலும், முழுக்க பிரக்ஞையுடன் கதைகள் கட்டமைக்கப்படுவது சோர்வினைத் தருகின்றது. தன் போக்கில் தானாக கதைகள் செல்லவில்லை என்பதும் பெரிய குறை. கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன எழுதப்படவில்லை என்பேன்.

சைதை | இரவு 10:34

தன் வெளிப்பாடு – ஒரு குறிப்பு

சுநீல் கங்கோபாத்யாய் எழுத்தில் வெளியான ’தன் வெளிப்பாடு’ (Atmaprakash) நாவல், சுநீல் கங்குலியின் வாக்குமூலங்களை 194 பக்கங்களுக்கு விவரிக்கிறது. மது, கஞ்சா, எல்.எஸ்.டி, செக்ஸ் என ஒருவகைக் கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது என்றால் மற்றொரு பக்கம் கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையால் சிதைந்த குடும்பங்களின் வாழ்வை அதே வலியோடு நாடகீயமாகவன்றி எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. சுநீல் மற்றும் அவனது நண்பர்களைப் போலவே நாவலுக்கு என்று எவ்வித அரசியல் சரித்தன்மையும் இல்லை. நாவலின் இறுதியில் யாரும் திருந்தும் மிகைப் பாவனைகளும் இல்லை. எதிலும் நழுவியோடும் குணவியல்பும் ’இன்றைக்கு வாழ்’ என்ற சித்தாந்தமும், சராசரி மனிதர்களின் மேல் ஒவ்வாமையும் கொண்ட பிச்சைக்காரர்களை வெறுக்கிற சுநீல், வாசக மனத்தில் பெரிய ஆத்ம சுத்தத்தையோ தரிசனத்தையோ வழங்கும் மனிதனில்லை. நாவல் தொடங்குகையில் அவனும் அவனது சகாக்களுடைய வாழ்க்கையும் எவ்வாறு இருக்கிறதோ அப்படியே முடிவிலும் இருக்கிறது. இடையே அவர்களது வாழ்வினை சுநீலின் வாயிலாக நாமும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறோம்.  தன் வாழ்வில் அனைத்தையும் கண்ட சுநீல் தன் கீழுள்ள மனிதர்கள் மீது தெரிந்தே அதிகாரம் செலுத்துவதில் சுகம் காண்கிறான். பல இடங்களில் தானொரு பிற்போக்குவாதி எனக் காட்டுகிறான். அவன் மீது நமக்கும் அனுதாபமும் தோன்றுவதில்லை. எப்படியாது ஒரு தூய காதலைப் பெற்று தன் அழுக்கினைக் கழுவ எத்தனிக்கிறான். ஏற்கனவே பல ‘வாக்குமூல’ நாவல்களைப் படித்தாலும் இந்நாவல் என்னிடத்தில் தனித்த மதிப்பினைப் பெறுகிறது. காரணம் இது நிகழும் காலம். இதில், அந்நாளைய அரசியல் கொதிநிலை ஸ்தூலமாகப் பதிவு செய்யப்படவில்லை எனினும், மனிதர்களின் சிதறுண்ட மனங்களினூடாக ஒரு சித்திரம் வரையப்படுகிறது. அட்டைப்படத்தில், நீண்ட கம்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மதிலை உடைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் தப்பிக்க முயல்கிறான். அந்தச் சிறுவனை சுநீலாகவும் அந்த கம்புகளின் மதிலை சமூகமாகவும், அவனுடைய சக மனிதர்களாகவும் கொள்ளலாம்.

தன் வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்தியாய்

தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி

National Book Trust, India.

First Edition 1996.

12

 

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பினை, முதல் 5 கதைகள் ஒரு நிறத்திலும் அடுத்த 5 கதைகள் மற்றொரு நிறத்திலுமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

unnamed

முதல் 5:

அனுபவப்பகிர்வுகள். கண்ட கேட்ட உணர்ந்த சொல்லப்படாத மனிதர்களின் கதைகள் என வகைமைப்படுத்தலாம். ’மனிதர்களின் கதை’ என்று சற்று அழுத்தியே சொல்லலாம். இத்தொகுப்பில் தெரியும் மற்றொரு விசயம், எழுத்தாளர் பழைமையையும் நவீனத்தையும் மோதவிடும் தருணங்கள்.

முதல் 5 கதைகளில், சில கதைகள் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாமல் கடக்கின்றன. ஆனால், ‘குறுதிச்சோறு’ மற்றும் ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதைகள் வாசிப்பில் நல்ல அனுபத்தைத் தருகின்றன. ’குறுதிச்சோறு’ மிக முக்கியமான பதிவாக இருக்கிறது. ஆனால் அதன் வடிவத்தில் மனம் ஒப்பவில்லை. ஆஹா.. இவ்வளவு நல்ல பின்புலம் இப்படி வீணாகிவிட்டதே என்று தோன்றியது. அந்தத் தொன்மம். ஒரு நாவலாகவே விரித்தெழுதப்படவேண்டிய களம் இது.

‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதை மிகச் சிறப்பான அனுபவத்தினை தந்த கதை. மேற்சொன்னமாதிரி இக்கதையிலும் பழமையும் நவீனமும் மோதும் கணம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. லெட்சுமண செட்டியார் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து அவ்வாழ்க்கையை ஒரு திணறலுடன் எதிர்கொள்கிறார். அவர் செய்துவந்த கணக்கு எழுதும் வேலை, கணினி என்ற நவீன வஸ்துவின் வரவால் இல்லாமல் போய்விடுகிறது. அவரது இருப்புக்கு எவ்வித அர்த்தமுமில்லை. ஆனால் வீட்டிலுள்ள குழந்தை வள்ளி இவருடையே பாடல் கேட்டால் தான் தூங்குகிறாள். அது அவருக்கு ஒருவித பெருமையையும் தன் இருப்பிற்கான அர்த்தத்தையும் தருவதாகவே உணர்கிறார். அதற்கு வேட்டு வைக்கவும் ஒரு நவீன வஸ்து செல்போன் வடிவில் குடும்பத்துள் நுழைகிறது. லெட்சுமண செட்டியார் பாடலுக்கும் இனி வேலையில்லை. வேதனையில் உடைந்து கதவை அடைத்துக்கொண்டு அழுகிறார். ஆனால் இக்கதை இங்கேயே (அழுவதோடு) முடிந்துவிட்டதாகத் தோன்றியது. ஆனால், ஆசிரியர், இத்தொகுப்பிலேயே ஒளியுள்ள கதையாக அடுத்த சில வரிகளில் மாற்றிவிடுகிறார்.

23559446_10214094575785957_6169924402894763461_n
சுனில் கிருஷ்ணன்

அடுத்த 5:

முதல் 5 கதைகளில் அனுபவங்களைச் சித்தரித்த சுனில், அடுத்த 5 கதைகளில் கண்டடைதலைக் கதையாக்கியுள்ளார் என்று சொல்லலாம். ’2016’ கதை, சுவாரசியமான புனைவாக்கம். ’பேசும் பூனை’ தொழிநுட்பம் மனித வாழ்வைச் சூறையாடும் வலியைப் பதிவு செய்கிறது என வாசித்தால் கடைசி வரியில் ஒரு புதிரை வைத்து சர்ரியலிஸ அந்தஸ்து பெற்றுவிடுகிறது அக்கதை.

’கூண்டு’. தொகுப்பில் மிகவும் கவர்ந்ததொரு கதை. கதை நிகழ்வது post apocalyptic களமென்றாலும், சுனில் அதனைச் சித்தரிப்பதோ மன்னர் காலத்தில். பொதுவாக மனிதர் வாழ மோசமான தகுதியில்லாத அச்சம் ஏற்படுத்தக்கூடிய சமூகமாக தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமுள்ள எதிர்காலமே சித்தரிக்கப்படும். (Black Mirror சமீபத்திய உதாரணம்) ஆனால், இங்கு மன்னர் காலம். இதுவொரு சிறப்பான முரண்.

‘திமிங்கலம்’ கதையும் மனிதர் வாழத் தகுதியே இல்லாத கொடூரமான எதிர்காலத்தில் நடக்கிறது. இக்கைதையிலொரு ஆகச்சிறந்த இடமொன்று வருகிறது. அன்பு, மனிதபிமானம், விட்டுக்கொடுத்தல் என எவையும் இல்லாத அந்த உலகத்தில், ஒரு கட்டத்தில் மனித மனங்கள் குற்றவுணர்ச்சி கொள்கின்றன, இதுவரையிலான dystopian வகைப் புனைவுகளில் என் மனதில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது இக்கதை.

இரண்டாவது 5 கதைகள் சுனில், கண்டடைந்த தத்துவப்பார்வையையும், உலகில் வீழ்ந்துவிட்ட விழுமியங்களையும், சம கால அரசியல் கொதிநிலைகளையும் கொண்டு படைத்துள்ளார் எனலாம்.

அனைத்து கதைகளிலும் ஒரு வித இருன்மை (வேதனையாகவே, வன்முறையாகவோ, அறமற்ற செயல்களாகவோ) இருந்துகொண்டே இருக்கிறது. இருன்மைக்கு நவீன கால உலகமும் சிந்தனையும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. தொகுப்பிலேயே இருன்மை இல்லாத ஒரே கதை என ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதையைச் சொல்ல முடியும், அதே போல முதல் கதைக்கும் கடைசி கதைக்கும் மொழியின் செறிவும் முற்றிலுமாக மாறி முதிர்ச்சியான நிலையை அடைந்திருக்கின்றன. முந்தைய கதைகளில் இருந்த தயக்கமின்றி தீர்க்கமான பார்வையுடன் நம்பிக்கையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சுனில் இக்கதைகளை அவை எழுதப்பட்ட காலத்தின்படி வரிசைப்படுத்தவில்லை எனினும், அவர் ஏன் இப்படி வரிசைப்படுத்தியுள்ளார் என்பதை உணர முடிகிறது. அவரது அடுத்த புனைவு எதைப்பற்றியதாக இருக்கும்? எந்தப்பார்வையில் எழுதுவார் என இப்போதே ஆவல் அதிகமாகிறது. புத்தகத்தை வாசித்து முடிக்கையில் அவரை நெருக்கமாக உணரமுடிகிறது. வாசகனுக்கும், ஆசிரியனுக்கும் இடையே உருவாகும் இணைப்பு அது.

அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

.

//கதைகள் படித்தவுடன் தோன்றியவை.//

28.12.2017

நத்தை நகரும் குறுகுறு மனது

சாம்ராஜ் எழுதியுள்ள இந்த மூன்று கவிதைகள் தான் மனதில் துள்ளலான பெயர்சொல்லமுடியாத உணர்வுநிலைக்கு என்னைத் தள்ளியிருக்கின்றன. அந்த மேலான உணர்வுநிலைக்கு ஒரு பெயரினை யோசிக்கையில் இந்த உவமானம் தோன்றியது. மனதினை ஒரு உயிருள்ள சதைப்பிண்டமாக நினைத்துக்கொள்ளுங்கள்; அதிலொரு நத்தை மெதுவாக ஊர்ந்து செல்லும்போது ஒரு குறுகுறுப்பு சதைப்பிண்டம் முழுக்க பயணித்து அதில் மயிரிக்கால்கள் இருப்பின் அதனை குத்திட்டு நிற்கச் செய்யும். அப்படி ஒரு குருகுருப்பினை இக்கவிதைகள் உணரச்செய்தன. இதுபோன்ற அதீத உணர்வுநிலைக்கு கவிதைகள் மட்டுமே என்னை இட்டுச்செல்கின்றன. புன்னகை, ஆச்சரியம், அதிர்ச்சி என்ற கலவையான முகப்பாவங்களைத் தோற்றுவிக்கிறது இக்கவிதைகள்.

1

ரப்பர் மரங்களுக்குள்
காலையின் சூரிய ஒளி

புழைக்கு போகிறது
இப்பாதை

சலவைக்கல் வீட்டில்
கர்த்தர் சட்டகத்துக்குள்
தெற்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்

ரோமம் இல்லாத தேகமாய்
நிற்கின்றன பாக்கு மரங்கள்

நல் இதயங்களுடன்
பள்ளிக்கு போகிறார்கள் சிறுமிகள்

மீன்காரனின் கூவலுக்கு
காத்திருக்கின்றன பூனைகள்

“சர்ப்பம் அழிச்சு” கீதம்
எங்கிருந்தோ மிதந்து வருகிறது

கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட

_0_

இந்தக் கவிதை வெறும் படிமங்களை மட்டுமே சொல்கிறது. காட்சிகளைக்ஆ காட்டுகிறது. ஆனால் இறுதி வரிகளில் ஒரு அதிர்ச்சி. என்ன என்பதை மட்டுமே காட்டுவது கவிதையில் ஒரு பாணி. ஏன்? எதனால்? என்பதற்கான பதில்களை இக்கவிதை நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால் என்ன என்பதை மட்டும் நமக்கு வார்த்தைகள் மூலமாக காட்டச்செய்ததில் இக்கவிதை அழகும் நளினமும் கொண்டு சாசுவதநிலை அடைகிறது. நிலக்காட்சிக்கான விவரிப்பு ‘ரப்பர் மரங்கள்’, ‘அதில் விழும் சூரிய ஒளி’; அடுத்த காட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுவழிப்பாதை; அடுத்ததாக சலவைக்கல் வீடு, வசதியானவர்கள், அவர்கள் வீட்டில் சட்டகத்திற்குள் தெற்கு நோக்கியபடி ஏசுநாதர்; மீண்டும் நிலக்காட்சி; பாக்கு மரங்கள் குறித்த வர்ணனை; சிறுமிகள் (சிறுவர்கள் பற்றி அவருக்குக் கவலையில்லை) வன்மமில்லாதவர்கள், நல்லிதயம் கொண்ட அவர்கள் பள்ளி செல்லும் காட்சி;  மீன்காரனின் கூவலுக்காகக் காத்திருக்கும் பூனைகள்; மீன்காரனின் கூவலுக்கு ஏன் மீன்கள் காத்திருக்க வேண்டும்? வேறு எதற்கு சிதறும் துண்டுகளை விழுங்குவதற்குத் தான்; எங்கிருந்து என்று சொல்லவில்லை, ஆனால் எங்கிருந்தோ ‘சர்ப்பம் அழிச்சு’ பாடல் காற்றின் ஊடாக வருகிறது; எவ்வளவு எளிமையான காட்சிகளைக் காட்டுகிறார். அடுத்த வரிகளில்

“கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட”

இந்த வரிகளில் இது அற்புதமான கவிதையாகிறது. யாருமறியாமல் உள்ளே தாழிட்டு, உத்திரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஜோசப் சாக்கோ வீட்டுக்கதவுகள் உடைக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. சரி, அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து எழுத்தாளருக்கோ வாசகருக்கோ புகாரில்லை; ஆஹா அற்புதம்.

2

இரண்டாவது ஒரு குறும்புக்கவிதை.

கையில் கூண்டோடு
ஜோசியக்காரன்
மரம் மறைவில்
சிறுநீர் கழிக்கையில்
முகத்தை திருப்பிக் கொள்கிறது கிளி.

3

சுரங்கங்களைப்பற்றிய பேச்சு
எப்பொழுதும்
மர்மாகவே இருக்கிறது.

கோவிலிருந்து கடற்கரைக்கு
அரண்மனையிலிருந்து கோவிலுக்கு
பொக்கிஷ அறைகளிலிருந்து
கைவிடப்பட்ட பழைய நந்தவனங்களுக்கு
போகின்றன அதன் ரகசிய பாதைகள்

பேசும்பொழுதே
மண் சரிகின்றன
வார்த்தைகளின் மீது

உரையாடும் எவரும்
நேரில் கண்டதில்லை அதை

பாதாள சாக்கடைக்காக
நகரமே தோண்டப்பட
மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன சுரங்கங்கள்

கழிவுநீர் குழாய்கள் பதிக்க வெட்டப்பட்ட
ஆழமான குழிகளை
சரித்திர சந்தேகங்களோடு
கடந்து செல்கின்றனர்.

கான்கீரிட் இடப்பட்ட
சாலைகளில் பயணிப்பவர்
மானசீகமாய்
நடக்கின்றனர்
ஒரு சுரங்கத்தின் மீது.

பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது.

_0_

இக்கவிதை பிடிக்க எனது தனிப்பட்ட, சுரங்கங்கள் மீதான என் காதலும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் படித்த பொன்னியின் செல்வன் (கந்தன் மாறன் மர்ம உருவத்தால் தள்ளிவிடப்படுவானே! பழி கூட வந்தியத்தேவன் மீது விழும்) சில வருடங்களுக்கு முன்னர் பார்த்த கொரிய நியோ ந்வார் திரைப்படமான The Moss ஆகியவை நினைவுக்கு வருகின்றன. சுரங்கங்கள் ரகசியம் பொருந்தியவை. அது அரசர் உட்பட வெகுசிலருக்கே தெரிந்திருக்கும்; அந்த அரசரும் வேகுசிலரும் மாண்டபின்பு அந்த ரகசியமும் மண்ணோடு புதைந்துபோகின்றன; கேபிள் வயர் பதிக்க, பாதாள / சாதாரண சாக்கடைக்காக, ஏனைய பிற கட்டுமானப்பணிகளுக்காக  குழி தோண்டப்படுகையில், அதுவரை புதைந்திருந்த ரகசியச் சுரங்கங்கள் “மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன”; கடைசிவரிகள்

“பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது”

சாதாரணத்தை ஒரு வரியில் அசாதாரண நிலைக்குக் கொண்டு செல்கிறார் சாம்ராஜ். இவரது பார்வைதான் எவ்வளவு அழகு; அதனை எழுத்தில் வடிக்கையில் எவ்வளவு அடர்த்தி, நிதானம், எளிமை. இவரின் கவிதைத் தொகுப்புகளை வாசித்தே ஆகவேண்டும் என ஆவல் மீதுருகிறது. கே.என்.செந்திலுக்கு மனமார்ந்த நன்றிகள். சாம்ராஜ் அவர்களை கேரள சர்வதேசத் திரைப்படவிழாவில் நண்பர் சுரேன் அறிமுகம்செய்ய முதல்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் கவிதைகளை வாசித்திருக்கவில்லை. அதற்கு இவ்வளவு நாட்கள் பிடித்திருக்கிறது. அதுவும் முற்றிலும் புதிய நகரம், புதிய சூழலில், வெக்கையே வியாபித்திருக்கும் கசகசப்பான கான்கிரீட் கூடுகள் நிறைந்த சென்னையில் வாசிப்பு கைகூடுமோ என்ற சந்தேகத்தில் இருந்த எனக்கு பேய் வாசிப்பு சாத்தியம் என கட்டியம் கூறுகிறது இந்த மூன்று கவிதைகள்.

நன்றி ‘கபாடபுரம்’ இணைய இதழ்.

இணைப்புகள்:

ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

எத்தனை கைகள்! -சாம்ராஜ்

அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு(1)

Poem 1

https://twitter.com/arasu1691/status/640940859819626496

Poem 2

https://twitter.com/arasu1691/status/735887276060745728

 

 

 

 

 

 

 

 

வாசிப்பு: யுகியோ மிஷிமா எழுதிய Confessions of a Mask

Confessions of a Mask – Yukio Mishima (Japanese)

English Translation by: Meredith Weatherby

Publication: A NEW DIRECTIONS BOOK

1  

யுகியோ மிஷிமா எழுதிய Confessions of a Mask என்ற ஜப்பானிய நாவல், “Beauty is a terrible and awful thing! It is terrible because it never has and never can be fathomed, for God sets us nothing but riddles…” என்ற தஸ்தயாவ்ஸ்கியின் the brothers Karamazov என்ற அதியற்புத நாவலிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோளுடன் தொடங்குகிறது. இப்போதே இந்த நாவல் எதனைக் குறித்து பேசப்போகிறது என்பதனை ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

 

62794

 

எதிலும் நிலையான ஆர்வமோ பிடிப்போ இல்லாத தன்னையொத்த விடலைகளிடமிருந்து வேறுபட்டுத் தெரியும்; மன அலைகளைப்புகளில் துயருற்ற ஆன்மாவின் வாக்குமூலங்களை நிதானமாக அவனுடைய (கொச்சன்) பார்வையிலேயே பதிவுசெய்கிறது. அதாவது வாசகருடன் நேரடியாக ‘நேயர்களே!..’ என விளித்து உரையாடுகிறான். அவனது பிறப்பு முதலே விநோதமான குழந்தையாக ஆரோக்கியமற்ற நோஞ்சான் உடலையும் முரட்டுத்தனம், வன்முறை, ஆண்மை ஆகியவற்றில் மையல் கொண்டவனாக வளர்கிறான். அவனுக்கு எதில் ஆர்வமிருக்கிறது என்பதனைக் கண்டடையவே அவனுக்குப் பலகாலம் பிடிக்கிறது. ஆனால் உள்ளுக்குள் ஒரு மாதிரியாகவும் வெளியே பொதுவெளிக்கு ஒரு முகமூடி அணிந்தும் வாழ்கிறான். அத்தகைய முகமூடியை வாசகன் முன் கழட்டிவிட்டு தனது குற்றங்களுக்கு குற்ற உணர்ச்சிக்கு ஆறுதல் தேட முயல்கிறான். உண்மையில் அவன் தேடுவது ஆறுதலும் இல்லை. அவனது வாக்குமூலத்தில் ஒரு கழிவிரக்கம் கோரும் தொனியும் இருப்பதில்லை. வாசக மனம் இதனை எப்படி புரிந்துகொள்கிறதோ அப்படி இந்த நாவலை அணுகிக்கொள்ளலாம். நாவலில் தொடக்கம், அவனது பிறப்பு வளர்ப்பு ஆகிய சூழல்களை விளக்குகிறது. பின்பு ஆண்மை, வன்முறை, தனிமை ஆகியவற்றை அவன் எதிர்கொள்வதைக் காட்டுகிறது. பிறந்த சில நாட்களிலேயே செத்துப்பிழைக்கிறான். தாய் தந்தையரிடமிருந்து பிரிக்கப்பட்டு அவனது பாட்டி தாத்தாவுடன் வாழ நேர்கிறது. நோய்வாய்பட்ட / வினோதமான / மர்மம் நிறைந்த பாட்டியின் அரவணைப்பில் நோய் நெடி பீடித்த அறையில் தனது வாழ்வைத் தொடங்குகிறான்.

பிறந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அவர்களுடைய மூளையிலிருக்கும் நினைவுசேகரம் செயல்படத் துவங்காது என்பதே அறிவியல். ஆனால் இவனுக்கோ தான் பிறந்தது முதல் நிகழ்ந்த அனைத்து விடயங்களுமே அப்படியே நினைவிலிருக்கின்றன. இவன் தன் சிறுவயது நினைவுகளை பெரியவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது அவர்கள் இவனைப் பகடி செய்கிறார்கள். அறிவியல் ரீதியாக அது சாத்தியமில்லை என்றும் இவனுக்கு விளக்கம் தரமுயல்கிறார்கள். ஆனால் இவனுடைய முதல் வாக்குமூலமே தனக்கு தான் பிறந்த தினம் முதல் நடந்த அனைத்துமே நினைவிருக்கிறது என்றும் அதனை எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய நினைவு சேகரத்திலிருந்து மீட்டெடுத்து மிதக்கவிடமுடியும் என்றும் கூறுகிறான்.

மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு இரண்டு வருடங்கள் கழித்தும், இவனது தாத்தா சிலரின் பேச்சைக்கேட்டு தனது ஒட்டுமொத்த சொத்தையும் இழப்பதற்கு இரண்டு வருடம் முன்பாக இவன் பிறக்கிறான். (I am not speaking euphemistically: until now I have never seen such a totality of foolish trust in human beings as that my grandfather possessed) இவனுடைய தாத்தா தனகுக்க் கீழே பணியாற்றியவர்களின் தவறான செயல்களுக்குப் பொறுப்பேற்று அவருடைய கௌரவம்மிக்கப் பணியினைத் துறக்க நேரிடுகிறது. அவனது குடும்பமே நடுத்தெருவிற்கு வருகிறது. இதன் முடிவாக டோக்கியோ நகரத்தின் ஒரு பழைய வாடகை வீட்டில் வாழ ஆரம்பிக்கிறான். அவனது பாட்டியுடன் இவன் வசிக்க இவனது தாய் தந்தையர் இரண்டாவது மாடியில் வசிக்கிறார்கள். அங்கு அவனுக்கு ஒரு வயது இருக்கும்பொழுது படியிலிருந்து தவறி விழுந்துவிடுகிறான். அவனைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பாட்டி தியேட்டருக்குச் சென்றிருக்க, அவனது தாய் மற்றும் உறவினர்கள் ஓய்வுநேர களிப்பில் ஆழ்ந்திருக்க இந்த சம்பவம் நிகழ்கிறது. பாட்டி தொலைபேசி மூலம் வரவழைக்கப்படுகிறாள். அவனுக்கு எதுவும் ஆவதில்லை. அதன் பிறகு பாட்டியுடனேயே வாழ்கிறான். அவனுக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது காபி நிறத்தில் எதையோ வாந்தி எடுக்கிறான். பின்பு பேச்சு மூச்சில்லாத ஜட நிலை. இனி செய்வதற்கொன்றுமில்லை என குடும்ப மருத்துவரும் கைவிட அனைவரும் துக்கத்தில் வீழ்கின்றனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவன் சிறுநீர் கழிக்க அனைவர் முகத்திலும் ஒரு நிம்மதி.. அப்போது முதலே அடிக்கடி காரணமில்லாமல் நோயில் வீழும் மிக பலவீனமான சிறுவனாக வளர ஆரம்பிக்கிறான்.

2

அவனது சிறு பிராயத்தில் அவன் பார்த்த விஷயம் ஒன்று அவன் மனதில் மிக ஆழத்தில் சில கீறல்களை ஏற்படுத்தி அவனைவிட்டு அகலாமல் இறுதிவரை தொடர்கிறது. அவனது எதிர்கால குணவியல்புகளைத் தீர்மானிப்பதாக இருக்கிறது அந்தக் காட்சி. (Led by the hand od the unremembered woman. I was climbing the slope toward home. Someone was coming down the slope, and the woman jerked my hand. We got out of the way and stood waiting at one side) செறிவான அந்தக்காட்சி, மிக உன்னிப்பாக இவனால் கவனிக்கப்படுகிறது. (this very image is the earliest of those that have kept tormenting and frightening me all my life) “அது, ஒரு இளைஞன், அவன் மேலிருந்து பாதை வழியாக கீழே, இவனும் ஒரு பெண்மணியும் ஒதுங்கி நின்றிருந்த (அவனுக்கு பாதைவிட்டு) இடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். வியர்வை வலிந்து காய்ந்து போன அவன் மிக அழுக்கான அங்கிகளை அணிந்திருந்தான். அவனது ஆண்மை நான்கு வயது சிறுவனான இவனைப் பெரிதும் கவர்கிறது. முதன் முதலாக வலிமையை அதன் திமிரும் முருக்கை அழகினை காண்கிறான் இவன். அந்த இளைஞன் மூலமாக அது இவனுக்கு காட்டப்படுகிறது எனச் சொல்லலாம். அதனைப்பர்ததும் ‘நான் அவனைப்போல மாறவேண்டும்’, ‘அவனாக நான் இருக்க வேண்டுமென’ இவன் நினைக்கத் தொடங்குகிறான். அந்த இளைஞனின் தொழிலுக்குப் பின்னேயுள்ள அந்த துன்பம் இவனைக் கவர்கிறது. இறுதிவரை இவன் ரசிக்கும் ஒவ்வொன்றின் பின்னேயும் துன்பம் இருந்துகொண்டே இருக்கிறது. அல்லது துன்பமிகு ஒன்று இவனுக்கு விருப்பமாகிவிடுகிறது. அன்று முதல் அந்த இளைஞனைப்போல ஆகவேண்டுமென தீர்மானம் கொள்கிறான். ஆனால் அடுத்து அவனுடைய காதல் மற்ற தொழில் செய்பவர்கள் மீது மாறுகிறது. எதிலும் அவன் நிலையான பற்றினைக் கொண்டிருப்பதில்லை. தான் எதில் பற்று கொண்டிருக்கிறோம் என்பதனையும் அவனால் தெளிவாகக் கண்டுணர முடிவதில்லை.

ஒரு படப்புத்த்கத்தை வைத்து இன்னுமொரு நினைவு. ஒரு போர்வீரன் குதிரையில் அமர்ந்து போரிடும் காட்சி இவனைப் பெரிதும் கவர்கிறது. அப்போது அவனுக்கு ஐந்து வயது. அவன் தினமும் அந்தப்பக்கத்தை எடுத்துவைத்து நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறான். பின்னர் ஒரு சமயம் அந்தப் படத்திலிருப்பது ஒரு பெண் எனத் தெரிந்ததும் (அதனை அவனுடைய செவிலிப்பெண் மூலமாக அறிந்துகொள்கிறான்) மிகுந்த சுயவெறுப்பும் அதனைப் போய், ஒரு பெண்ணைப் போய் இரசித்துவிட்டோமே என்று அருவருப்பும் கொள்கிறான். (I felt as though I had been knocked flat. The person I had thought a he was a she. If this beautiful knight was a woman and not a man, what was there left?)

அடுத்ததாக வியர்வை நாற்றம் மீது இவன் கொண்டிருக்கும் பிரேமையை விளக்கும் மற்றுமொரு நினைவு அவனது வீட்டு வாசலில் வரிசையாக நடந்து செல்லும் போர் வீரர்களை வெறிக்க வெறிக்க பார்த்தது; திடும் திடுமென நிலத்தில் ஓங்கி மிதிபடும் பூட்ஸ்களின் சப்தம், இருகிய அங்கி, தோளில் தொங்கும் துப்பாக்கி ஆகியவை எந்தக் குழந்தையையும் வசீகரித்துவிடும்தான். ஆனால் இவனுக்கோ அவர்களுடைய வியர்வை நாற்றம் தான் வசீகரிக்கும் சங்கதியாக இருக்கிறது. கொச்சன் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்கிறான். வாழவேண்டுமெனில் தனக்கிருக்கும் விநோத இச்சைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் மறைக்கவேண்டும் என்பதைத்தான். அப்படியே வாழவும் செய்கிறான். நமக்கு எவ்வளவு கட்டுபடுத்தியும் கொச்சன் மீது பரிதாபம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அவனது இந்த நிலைக்கு இங்கு யார் மீதும் குற்றம் சுமத்த இயலாது என்பது இன்னொரு வேதனை.

3

இப்படியே அவனது பால்யகால நினைவுகளை அவன் உள்ளுக்குள் ஒருவனாகவும் வெளியே ஒருவனாகவும் வாழ்ந்த வேடத்தைக்களைந்து வாக்குமூலங்களாகக் கூறிச் செல்கிறான். ஆனால் இறுதிவரை அவனுக்கு மரணம் குறித்த பயம் மட்டுமே அகல்வதேயில்லை.

சிறுவயதில் அவனுடைய பாட்டியால் அண்டைவீட்டு சிறுவர்களுடன் விளையாடுவதிலிருந்து தடுக்கப்படுகிறான். காரணம் அவர்களுடன் சேர்ந்தால் கெட்டுப்போய்விடுவான் என அவனது பாட்டி நம்புகிறாள். அவன் மென்மேலும் சொல்லிச்செல்லும் நினைவுகள் அவனுக்கு ஆண்மை மீதும் வன்முறை மீதும் இருந்துள்ள பிரேமையை நமக்குச் சொல்கின்றன. சமூக வாழ்க்கைக்குப் பழகாத அதன்மீது விருப்பமில்லாத மனிதனாக, அனால் பொதுவில் சாதாரணமாக முகமூடி அணிந்து வளர்கிறான் கொச்சன்.

இடைநிலைக் கல்விக்காக பள்ளி சென்ற காலத்தில் அவனனுக்கு (வாசகருக்கும்) பாலியல் இச்சைகள் அடையாளம் காணத்துவங்குகின்றன. ஒருவாறாக தானொரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதை கொச்சன் உணர்வது இந்தக்காலகட்டத்தில் தான். அப்போதும் ஒரு குழப்பம் அவனிடமிருந்துகொண்டே இருக்கிறது. ஓமி என்ற இவனது வகுப்பு மாணவன் மேல் இவன் கொள்ளும் காதல் அடுத்ததாக வாக்குமூலத்தில் வருவது. ஓமி தன் வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறான். இவனைவிட இருவயது மூத்தவன். பல பெண்களுடன் அவனுக்கு உறவு இருக்கிறது. இந்த வயதிலேயே பெண்களுடன் கலவியில் ஈடுபடுவதும், பெரியமனிதத் தோரணையும் இவனை வெகுவாக அவன்பால் ஈர்க்கிறது. இந்தகாலகட்டத்தில் கொச்சன் பாலியல், வன்முறை ரீதியாக சதாசர்வகாலமும் கற்பனையில் ஆழ்ந்திருக்கிறான். ஓமி மீது கொச்சன்  கொண்ட காதல் முறியும் இடம் மிக கொச்சனைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

அடுத்ததாக இருபது வயதில் ஒரு பெண்ணுடன் ஏற்படும் உறவு. அவளை மிகவும் / மனதார நேசிக்கிறான் கொச்சன். ஆனால் அவள் மேல் காமமோ, அவளை நிர்வாணமாகப் பார்க்கவேண்டும் என்ற உந்துதலோ கொச்சனுக்கு சிறிதுமில்லை.        பொதுவாகவே இது அவன் வயது பையன்களுக்குத் தோன்றுவதுதான். ஆனால் நன்றாக துளிரும் அந்த உறவை இவனாக முறிக்கிறான். மீண்டும் அதனைத் துளிர்க்க வைக்க எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் முடிவதில்லை. இறுதியாக, அத்தனைக்குப் பிறகும் தனக்கு எதில் ஆர்வம் / பிரேமை என அவன் கண்டுகொள்வதுடன் நாவல் முடிகிறது.

நாவலின் இறுதியில் ஒரு நடன அரங்கத்திற்கு சொனோகுவை அழைத்துச் செல்கிறான் கொச்சன். அங்கு காட்டுமிராண்டிதனமாக இளைஞர்கள் போதைவெறியில் ஆடிகொண்டிருக்கின்றனர். சொனோகுவை இவன் திருமணம் செய்ய மறுத்தாதால் அவளுகொன்றும் நஷ்டமில்லை. அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்கிறாள். திருமணத்திற்குப் பிறகும் கொச்சனை அடிக்கடி சந்தித்து வருகிறாள். அனால் அவர்களுக்குள் இருந்த எதோ ஒன்று என்றோ முறிந்துவிட்டதாகவே அவளது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அந்த நடன அரங்கினில் வைத்து அவள் அவனிடம் ஏன் என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை எனக்கேட்கிறாள். அவன் அதற்கு சரிவர பதில் சொல்வதில்லை. அவன் பார்வை முழுக்க ஆடைகளைக் களைந்து அமர்ந்திருக்கும் ஒரு இளைஞன் மேலேயே இருக்கிறது. அப்போது அதனைக் கவனிக்கும் சொனோகு ஏன் அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்துகொல்கிறாள். அங்கு அவளைக் கூட்டிவந்திருக்கக்கூடாது என வருந்தும் கொச்சன் அவளை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான். இருவரும் நடக்கின்றனர். நாவல் முடிகிறது.

பெண்கள் மீது சிறிதும் இச்சை இல்லாதவன் என்றாலும் கொச்சன் மற்றவர்கள் முன்னால் தன்னைத் ‘தெளிவானவனாக விநோதமற்ற அனைவரையும் போன்ற மனிதனைப்போல’ காட்டிகொள்ள இந்த உறவில் ஈடுபடுவதை வாசகமனம் உணர்ந்துகொள்ளும். நாவல் முழுக்க இவன் இந்த ‘சாதரணன்’ வேடமணிவதை உணர முடிகிறது. பெண்கள் மீது தனக்கு ஆர்வமிருக்கிறதா என அவன் சில சோதனைகளைச் செய்து பார்ப்பான். உதாரணமாக நிர்வாணப் பெண்களின் படங்களை நெடுநேரம் உற்றுப் பார்ப்பது. அதில் தோல்வியே கிட்டும்.

சொனோகோ (கொச்சனின் பள்ளித்தோழனின் தங்கை)  மேல் தவறேதும் இருப்பதில்லை. இவன்தான் அவளைத் தூண்டிவிட்டுவிடுகிறான். பின்பு அமைதிகொள்கிறான். வேண்டிய பரிசெல்லாம் கொடுத்து, நகைச்சுவைகள் பகிர்ந்து, பாதுகாப்பாக உணரச்செய்து, ஆளில்லா இடங்களில் மாலைநேரத்தில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்தால் யாருக்குத்தான் காதல் வராது. அவளுடைய காதல் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவளைவிட்டு விலகுகிறான் கொச்சன். காரணம் அந்த உறவே இவனுக்கு புதிராக இருப்பதுதான். அதனை மறக்க நினைக்கிறான். ஒரு பெண்ணை திருமணம் செய்வதை அவனால் கற்பனை கூட செய்துகொள்ள முடியவில்லை.

4

தன் நினைவுகளை எடுத்து அடுக்கி தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்கிறான் கொச்சன். ஒருமுறை நண்பன் விபச்சார விடுதிக்கு அழைத்துப்போக (பெண்ணுடன் உடலுறவு கொள்வது ஒரு ஆணுக்கு முக்கியமானது என அவன் இவனுக்கு உணர்த்துகிறான். பல நாட்களுக்குப் பிறகு கொச்சனும் அதற்குச் சம்மதிக்கிறான்) அங்கு சென்றதும் தன்னால் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய இயலாது என்பதை அறிந்து மனமுடைகிறான். கொச்சனின் நண்பன் அவனுடைய நண்பனுடன் இவனை வீட்டில் வந்து பார்க்கிறான். இயல்பாக பேச்சு சென்றுகொண்டிருக்கையில் நண்பனின் நண்பன் தான் எத்தகையப் பெண்ணாக இருந்தாலும் பதினைந்து நிமிடத்தில் வீழ்த்துவேன் என்று அவனுடைய காமக் கதைகளைச் சொல்லத்தொடங்க இவன் வேதனையில் துடிக்கிறான். அந்த நண்பனின் நண்பன் இறுதியாக ஒன்றைச் சொல்கிறான் ‘என்னால் இதனை அடக்கவே முடியவில்லை. சமயங்களில் நான் ஏன் ஆண்மையற்றவானாக இருந்திருக்ககூடாது என்று நினைப்பேன்’ என்கிறான். அந்த வார்த்தைகள் இவனை மேலும் காயமுறச் செய்கிறது. அன்றிரவு தூக்கமின்றி படுக்கையில் கதறி அழுகிறான். நம்மை உலுக்கும் பகுதி அது.

தனது உண்மையான நிலையை உணராத ஒரு மனிதனின் நிலையும், உணர்ந்தும் முகமூடி களையாமல் வாழும் ஒரு மனிதனின் நிலையும் நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மிகச்செறிவான மொழி மிஷிமாவினுடையது. மொழிபெயர்ப்பில் பொதுவாக இந்த செறிவுத்தன்மை மங்கிவிடும். ஆனால் இது ஆங்கிலம் கண்டும் மூல மொழிக்குரிய வனப்பு குலையாமல் இருக்கிறது. இதனை மூல மொழியில் வாசித்திருந்தால்தான் சொல்லமுடியும் என்றில்லை. ஒரு உள்ளுணர்வு தான். மேலும் இந்நாவல் ஆங்கிலத்திலேயே இப்படியென்றால், ஜப்பானிய மொழியில் எப்படியிருக்கும் என்று தோன்றுகிறது. தாஸ்தயவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் மட்டுமல்ல அவரது தாக்கம் இல்லாமல் 20 நூற்றாண்டில் வேறு ஏதேனும் எழுதப்பட்டிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. Confession / சுயவிசாரணை வகை இருத்தலியல் நாவல்கள் பெரும்பாலும் வாசிப்பதில்லை என்றாலும் இந்த நாவல் மனதிற்கு நெருக்கமான நாவலாகவும் என்னுடைய விருப்பபட்டியலில் எப்போதுமிருக்கும் நாவலாகவும் ஆகிறது. மிகவும் தொந்தரவு செய்யக்கூடிய புத்தகம் என்றாலும் ஏனோ படித்துமுடித்தவுடன் இதுவரை நான் அனுபவித்திராத ஒரு அமைதிக்கு இட்டுச் செல்கிறது.

5

இரண்டாம் உலகப்போர் ஜப்பானில் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் நாவலும் தீவிரமடைகிறது. எப்போது விமானங்கள் வரும் அவை எப்போது குண்டுமழை பொழியும் என மக்கள் அச்சத்திலிருந்தனர். இதனால் பல குடும்பங்கள் சிதைகிறது. கொச்சன் போரில் பணியாற்ற அழைக்கப்பட்டு அவனது உடல்நிலை காரணமாக மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படுகிறான். அப்போது அவனது சகோதரி இறந்துவிடுகிறாள். தான் மற்றவர்களைப் போல கதறியழுததை ஆச்சரியமுடன் நினைவுகூர்கிறான் கொச்சன். அவளது மரணம் வெகுவாக இவனைப் பாதிக்கிறது. நாவல் ஆரம்பிக்கையில் மையநீரோட்ட கலாசாரத்திலிருந்து வெளியே இருக்கும் சிறுவனாக வரும் கொச்சன் இறுதிவரை அனைத்திலிருந்தும் விலகியிருக்கும் மனிதனாகவே நாவல் முடிவடைகிறது.

7

கார்த்திகைச் பாண்டியன் (காபா) இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. அந்தப்பிரதி எனக்கு கிடைக்கவில்லை. வாங்குவதற்கு பணம் ஒதுக்கவும் முடியவில்லை. ஆங்கிலத்தில் மின்னூல் கிடைத்ததால் எளிதாக வாசிக்கமுடிந்தது. ஒரு முறை ஒரு இலக்கிய நிகழ்வில் தன்னை ‘முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவல் எப்படி பாதித்தது என்று குறிபிட்டார். சார்லஸ் புகோவ்ஸ்கியின் அஞ்சல் நிலையம் அறிமுகக் கூட்டம் , த மு எ க ச ஏற்பாடு செய்த கூட்டம் என்று நினைவு. அப்போது முதலே அந்த நாவலைப் படிக்கவேண்டும் என்று ஆவல்கொண்டிருந்தேன். இதனை அறிமுகப்படுத்தியமைக்கு / தமிழப்படுத்தியமைக்கு கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பேசும்போது ‘மிஷிமா தற்கொலைக்கு பயந்தவன். ஆனால் கடைசில தற்கொலை பண்ணிக்கிட்டு தான் இறந்தான்’ என்றார். இந்த நாவலின் கொச்சன் கூட தற்கொலை / மரணத்திற்கு பயந்தவனாக, வன்முறை மற்றும் விநோத கற்பனைகளில்.ஈடுபடும் ஓரினச்சேர்க்கையாளனாக வருகிறான். இதனையே மிஷிமாவின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதியதாகவே கொள்ள முடிகிறது. முழுப்புனைவாக இப்படியொரு நாவலை எழுதுவதென்பது சாதாரணகாரியமில்லை. மிஷிமாவின் மற்ற படைப்புகளைப் படிப்பதற்கு அச்சமாக இருக்கிறது. இதுதந்த அனுபவமே போதும் என்றும் தோன்றுகிறது.அவரது மரணம் குறித்து வாசிக்க நேர்ந்தது. என்னவொரு மனிதன்!!

இன்னும் இருக்கிறது.

 

 

மிஷெல் ஃபூக்கோவை அறிதல்

மிஷெல் ஃபூக்கோ நம் காலத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவர் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரை முழுமையாக இங்கு புறக்கணிக்க முடியாது. அவருடைய கருத்தாக்கங்கள் தமிழில் எந்த அளவிற்கு விவாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அதற்கான ஒரு முயற்சியினை சென்னை பல்கலைகழகம் எடுத்திருக்கிறது. மிஷெல் ஃபூக்கோ ஆய்வு வட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பயிற்சிப்பட்டறைகள் நடத்தி வருகின்றனர். ஆய்வு மாணவர்களால் மட்டும் வாசிக்கபப்டும் ஃபூக்கோ அனைவரையும் சென்றுசேர அவரைப்பற்றி தொடர்ந்து பேசவேண்டும். அதற்கு இந்தக் கருத்தரங்கு மிக இன்றியமையாததாக இருக்குமென நினைக்கிறேன். இந்த நிகழ்வில் பேசுபவர்கள் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் சூழல் அனுகூலமாக இருந்தால் கட்டாயம் இதில் கலந்து கொள்வேன்.

மிஷெல் ஃபூக்கோவை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அவரது “power” குறித்த கருத்தாக்கத்தை வைத்து ஒரு கட்டுரை எழுதிப்பார்த்தேன். இன்னும் அவரிடம் உடைக்க வேண்டிய செங்கற்கள் நிறைய இருக்கின்றன. அவர் எழுப்பிய பிரமாண்ட கட்டிடம் முன்பு ஒரு எறும்பு நான். கட்டாயம் இதில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தகவலைப் பகிர்ந்தமைக்கு திரு சமயவேல்ந அவர்களுக்கு நன்றி.

ஆர்வமிருப்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

பெரியசாமி ராஜா 9842161619
இரத்தினக்குமார் 9489378358

சுரேன் எழுதிய ‘பகல் கனவு’ வாசிப்பு

சுரேன் எழுதிய கதை குறித்த எனது வாசிப்பினை அவருக்கு அனுப்பினேன். அதனை இங்கு பகிர்கிறேன். ஒருவேளை சிறுகதை (அது எந்த வகைமை கதையாகினும்) குறித்து எனது மதிப்பீட்டினை ஓரளவு என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சுரேன் எழுதிய இந்தச் சிறுகதையை தீவிர இலக்கிய வகைமைக் கதையாக என்னால் அணுகமுடியவில்லை.

1

கதைச்சுருக்கம்:      

கிருஷ்ணன் பகல் கனவு காண்கிறான். தான் தற்கொலை செய்வதைப்போல. கடைசியாக அவன் கண்ட கனவு அவனது எட்டு வயதில் அவனது தாயும் தந்தையும் கிருஷ்ணனை பாட்டியிடம் விட்டுவிட்டு வெளியூர் சென்றபோது நள்ளிரவில் அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எறிவதுபோல கனவு கண்டு பதறி மூன்று நாள் பயத்திலேயே இருக்கிறான். பின்னர் அவர்கள் வந்ததும் அவர்களை நேரில் பார்த்ததுமே தெளிகிறான்.

இப்போது அவன் கண்ட பகல் கனவு. அவனுக்கு அச்ச்சதைக்கொடுக்கிறது. அந்த நாளில் நடக்கும் எதோ ஒரு சம்பவம் அவனது தற்கொலைக்குக் காரணமாக இருக்கும் என நம்புகிறான்.

கிருஷ்ணன் அலுவலகத்தில் மிகக் கவனமாகப் அன்றைய பணிகளைச் செய்கிறான். அலுவலகத்தில் அவனுக்கு எவ்விதப்பிரசினையும் இல்லை; என்ன நடக்கும் என வாசக மனம் அவனைப்போலவே ஆவல் கொள்கிறது; (இக்கதையில் எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று – கதையின் பிரதான பாத்திரமும் வாசக மனமும் அடுத்து நடப்பதைத் தெரியாமல் இருவருமே ஒன்றாகப் பார்வையாளர்களாக இருப்பது. இது அடிக்கடி பயன்படுத்தப்படும் யுக்தி என்றாலும் கூட. ‘கம்மட்டிபாடம்’ படத்தில் கையாளப்பட்ட யுக்தி) அந்தக் கனவினால் அவனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவன் தனியனாகிறான். இங்கு ஒன்றை சுரேன் திறம்படச் செய்திருக்கிறார் அதாவது அவனுக்குப் பிரச்சினை ஏற்படுவது போல காட்டி அதனை அவரே உடைக்கவும் செய்கிறார்; (ஹாலிவுட் த்ரில்லர் படங்களின் தாக்கம் இருப்பது போல உணர்ந்தேன்) கனவு கண்ட அந்த நாளில் அவனது அலுவலக நேரத்தில்,  மேலாளர் அழைப்பது – வேறு எதற்குமல்ல வாழ்த்துவதற்கு; புதிய நபர் வருகை – வேறு யாருமல்ல அவன் பழைய நண்பன் தான்; கிருஷ்ணன் ஒருதலையாய்க் காதலிக்கும் பெண் அதுநாள் வரை பேசாதவள் அழைப்பது – வேறு எதற்குமல்ல அவனை தனியாகச் சந்திக்க வேண்டும் என்பதை சொல்வதற்காக. ‘மௌனம் பேசியதே’ கதையைக் கூறி அதனையும் உடைப்பது; இவையெல்லாம். தன் நண்பனிடம் அவனது பயத்தைக் கூறும்போது “இல்லை மணி நீ நினைப்பது போல தற்கொலை என்பது நீண்ட நாட்களா திட்டம் போட்டுச் செய்யக் கூடிய காரியமில்லை, அது ஒரு நொடிப் பொழுதில் நிகழக் கூடியது, அந்த ஒரு நொடி தூண்டக் கூடிய உணர்வெழுச்சியில் நடக்கக்கூடியது. நீ சொல்வது போல அது வெறும் ஒரு நாளாகவோ அல்லது இருபத்தி நாலு மணி நேரமாகவோ இருக்கலாம் ஆனால் அந்த இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் எண்பத்தி ஆறாயிரத்தி நானூறு நொடிகள் ஒளிஞ்சுருக்கு. இதுல என்னத் தற்கொலைக்குத் தூண்டக்கூடிய ஒரு நொடி எதுவாயிருக்குமோன்னு நினச்சுதான் நான் பயப்படறேன்” என கிருஷ்ணன் சொல்லுமிடம் கதை மேலும் தீவிரமடைகிறது. எனது வாசக மனதிற்கு தீவரமடையவில்லை எனினும் கதையாக இது அங்கே ஒரு உச்சத்தைக் காண்கிறது. இவனது பயத்தை அறியும் நண்பன் அவனைக் காப்பதற்கு முன்வருகிறான். அவனது யோசனையின்படி இருவரும் திரையரங்கம் சென்று இரவு வெளியே உணவுண்டு தத்தமது வீடுகளை நோக்கிச் செல்கிறார்கள். இடையே வரும் தொலைபேசி அழைப்புகளை புறக்கணித்து நேரத்தைப் போக்குகிறார்கள். கிருஷ்ணன் இரவு 11.45க்கு (so conscious) வீடு வருகிறான். அப்போது அந்த (அவன் திரையரங்கில் இருந்த பொழுது பல முறை அழைத்த அதே எண்) அழைப்பு வருகிறது. யாரென்று தெரியவில்லை. பெண் குரல். அழைத்து ‘உன்னைக் காதலித்து ஏமாந்துவிட்டேன். நீ வாங்கித் தந்த புடவையைக் கொண்டு தூக்கில் தொங்கப்போகிறேன் எனக்கூறி அழைப்புத் துண்டிக்கப்படுகிறது. கிருஷ்ணன் யாரையும் காதலித்ததில்லை;.அழைத்த பெண் யாரென்று தெரியவில்லை. அவள் இப்போது சாகப்போகிறாள். காரணம் இவனது கனவு. பயந்து அதே எண்ணிற்கு அழைக்கிறான், அது அனைத்து வைக்கப்பட்டுள்ளது.

2

வாசிக்கத் தொடங்குகையில் பகல் கனவு என்ற தலைப்பும் கதையின் தொடக்கமும் கச்சிதமாக அமைந்துள்ளன எனத் தோன்றியது. முதலில் கிருஷ்ணனுக்கு வரும் பகல் கனவினை நான் ஒரு படிமமமாகவே பார்த்தேன். பின்னரே சுரேன் அதனை நேரடியாகவே விளக்கத் தொடங்கியபின் இது ‘நேரடியாக சொல்லப்படும் கதை’ என்று தோன்றியது. கிருஷ்ணன் சிறிய வயதிலேயே ஒரு கெட்ட கனவு கண்டு அதனால மூன்று நாட்கள் பயத்திலிருந்தவன் என்றொரு பின்னணி சொல்லப்படுகிறது; அதற்குக் காரணமாக கதையிலேயே ஒரு பாத்திரம் (கிருஷ்ணனின் பாட்டி) ‘தாய் தந்தையர் கிருஷ்ணனை அழைத்துப்போகாத ஏக்கம் தான் இந்தக் கெட்ட கனவிற்குக் காரணம் (தாய் தந்தையர் சென்ற பேருந்தானது தீப்பிடித்து எறிவது) என்று சொல்கிறது. எனவே ஏக்கம் தான் அவனுக்குக் கெட்ட கனவினைத் தருகிறது என்று வாசகமனதிற்குக் கடத்தப்படுகிறது. ‘எந்த ஏக்கம் அவனுக்கு இந்தப் பகல் கனவினைத் தோற்றுவித்தது என்ற கேள்வி இங்கு எழாமலில்லை. அவன் மென்மையான, ஏக்கம் கொண்ட மனிதனாக வளர்கிறான்; ஃப்ராய்டை படித்திருக்கிறான் (ஃபிராய்ட் மேற்கோள் வருமிடம் கிருஷ்ணன் அவரை வாசித்திருப்பதாகத்தான் தெரிகிறது); அவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான், இதனால் அவன் anti social அல்ல என்பது தெரிகிறது; அவன் அலுவலகப்பணிகளைத் திறம்பட செய்பவன்; அங்கு சிறந்த பணியாளன்; பிறகு ஏன் அவனுக்கு அந்தக் கனவு வந்தது என்ற நோக்கில் கதை வாசகமனதில் ஒரு சுவாரசியத்தை உண்டாக்குகிறது. கெட்ட / கொடுங்கனவு வந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்று கதைத் தொடக்கத்தில் சொல்லப்படவில்லை; அவனது தாய் தந்தையர் இறப்பது போல கண்ட கனவிற்குப் பிறகு (அப்போது அவன் எட்டு வயது சிறுவன்) எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. சில காலங்களுக்குப் பிறகு அவர்கள் இறக்கின்றனர். வயது முதிர்ச்சியால் அவர்கள் இறந்திருக்கலாம். அப்படித்தான் கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்கள் இறப்பு குறித்த விளக்கங்கள் ஏதுமில்லை. அவனைவிட்டு எங்கேயும் செல்லமாட்டார்கள் என்று (அவன் அம்மாவே சொல்லியது) நம்புகிறான்; அவனது பெற்றோர்கள் அவனை ஏமாற்றிவிட்டு / கொடுத்த வாக்கினை காப்பாற்றாமல் சென்றுவிட்டதாக வருந்துகிறான்;

இங்கு காலையில் கண்ட கனவிற்காக அவன் ஏங்குவது / பயப்படுவது மற்றும் மனம் சமநிலையற்று இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அன்றே அசம்பாவிதம் நடக்கும் என அவன் நினைப்பது வலுவானதாக இல்லை. இப்படி நினைக்கையில் சுரேன் “ஆனால் முதலில் சொன்ன கூற்றின்படி இந்தக் கதை தொடங்கும் நேரமும், அவன் கனவு கண்ட நேரமும் அந்த நாள் முடியக்கூடிய தருணமாக இல்லாமல். அந்த நாளின் தொடக்கமாக இருப்பதால். மீதமிருக்கக் கூடிய நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்புள்ளது ஆகவே நடப்பவைகளின் நிகழ்தகவுகளின் வழியேதான் நம்மைப் போலவே கிருஷ்ணனும் மீதமிருக்கும் நாளைத் தொடர வேண்டியிருக்கிறது” என்று சொல்லிவிடுகிறார். இப்போது வாசக மனம் கிருஷ்ணனின் எட்டு வயதில் அவன் கண்ட கனவு நள்ளிரவில் (நாளின் முடிவில்) கண்டதால் அசம்பாவிதம் நடக்கவில்லை; இப்போது நாளின் தொடக்கத்தில் ([பகல் கனவு) கனவு கண்டதால் அவனுக்கு அசம்பாவிதம் நடக்கும் என ஆசிரியர் சொல்வதை வலுவற்றதாகப் பார்க்கிறது. இதனை ஆசிரியத் தொனியில் அதாவது வாசகர்களை விளித்து அவரே சொல்கிறார். பகல் கனவு என்பது நம் வாழ்வில் எப்படி பார்க்கப்படுகிறது? நடக்காத ஒன்றையே பகல் கனவாக காண்போம் என்றொரு பேச்சு உண்டு; மேலும் பகல் கனவு என்பது அரைத் தூக்கநிலை. ‘என்னடா பகல் கனவு கண்டுட்டு இருக்க’ பழக்கப்பட்ட கேள்வி தானே! ‘பகல் கனவு பலிக்காது’ என்பதும் சொல்லப்படுவது தானே!

  1. சிறுகதையில் ஒரு கதாபாத்திரமும் அதன் போக்கும் ஆசிரியர் முன்கூட்டியே விவரிக்கும் சிலவற்றால் கட்டமைக்கபடுகிறது. இல்லையெனில் பிரதான பாத்திரம் எத்தகையது என்பது உணர்த்தப்படவேண்டும். இங்கு கிருஷ்ணனின் பின்னணி குறித்து சொல்லபடுவது அந்த எட்டு வயது கதை தான். அதை வைத்தே நாம் அவன் காணும் கனவுகளை / அவனை எடை போடுகிறோம்.
  2. கதைக்கு ‘பகல் கனவு’ என்று தலைப்பு பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கிறது. அதவாது பகல் கனவு பலிக்காது என்பது தான். ஆசிரியர் பகல் கனவு பலிக்கும் என வாதாடலாம். ஆனால் நாம் சமூகத்திடம் கற்ற குழந்தைகள் தானே! ‘கனவு’ என்று மட்டும் வைத்திருக்கலாம். சில குழப்பங்கள் வாசகனுக்குத் தோன்றாமல் இருக்கும்.
  3. இதுபோன்ற முடிவில் சுவாரசியமாக முடிக்கப்படும் கதைகள் இன்னொரு தொடக்கத்தைக் கொண்டிருத்தல் தான் இக்கதைகளுக்குச் சிறப்பான முடிவாக இருக்கும். அதுவே இக்கதையின் வடிவப்பிரசினை. இறுதியில் அவன் மேலும் ஒரு கனவு காண்பதுபோல விவரித்து, அந்தக் கனவிலிருந்து / தூக்கத்திலிருந்து விளிப்பது போல முடித்திருந்தால் இது வடிவ ரீதியாக முழுமையடைந்திருக்கும் என நினைக்கிறேன். (இக்கதை வடிவ ரீதியாக முழுமையடைவில்லை) அதாவது அந்தக்கனவில் அவன் வாள் கொண்டு யாரையே வெட்டுவதைப்போல.. இப்போது வாசகமனம் ‘அடுத்து இவனது வாழ்வில் என்ன நடக்கும்?’ என எண்ணத்தொடங்கும். ஆனால் இக்கதையின் கட்டுமானமே வலுவற்றது. அவனது எட்டு வயதில் நடந்ததாகக் கூறும் சம்பவத்தில், அவன் கண்ட கனவில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. அது நள்ளிரவில் நடந்தது அதனால் ஒன்றும் ஆகவில்லை. இது நாளின் தொடக்கத்தில் கண்ட ‘பகல் கனவு’ எனவே நிச்சயம் ஏதாவது நடக்கும் என்பதை எப்படி ஆசிரியர் கட்டமைக்கிறார் என்று புரியவில்லை. என்ன அனுமானத்தில் இதனைக் கட்டமைத்தார்? பகல் கனவு குறித்து முதல் மேலே சொல்லிவிட்டேன்.
  4. இதனால் பாத்திரத்தை கட்டமைத்தல், கதை சொல்லல், துவக்கம், தலைப்பு என அனைத்திலும் பிரச்சினையும் வலுவற்ற தன்மையும் கொண்ட கதையாக இருக்கிறது ‘பகல் கனவு’. .
  5. பகல் கனவில் கிருஷணன் தற்கொலை செய்துகொள்கையில் ஒரு பெண் வருவதும் இறுதியில் ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஒரு பெண் காரணமாக இருப்பதும் நன்றாகத்தானிருக்கிறது. அனால் இவை எல்லாம் பழையவை.

3

கதையின் பேசு பொருளைப் பழையது என்று சொல்ல முடியவில்லை. யதார்தக்கதை என்றாலும் அந்த கனவு குறித்த mystry இதனை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது. அந்த mystryயினை நிறுவியவிதமும் கையாண்ட விதமும் ‘கதையினை’ வலுவற்றதாக ஆக்குகிறது. மொழி பிரச்சினை இல்லை எனினும் விவரிப்புகள் பழையவையாக எனக்குத் தோன்றுகின்றன. ஓரளவு எனக்குக் கதையில் பிரச்சினையாகத் தோன்றியதை சொல்லியிருக்கிறேன். உங்களது அடுத்த கதைகளில் இவைகள் களைந்தெரியப்பட்டால் இது சொல்லப்பட்டதற்கு அர்த்தம் கிடைத்துவிடும். இதனை தீவிர இலக்கிய வகைமைக்குள் என்னால் சேர்த்துக்கொள்ள இயலவில்லை. தமிழ் இலக்கியத்தில் இப்போதுள்ள scenario வேறு. இது pulp fiction வகையறா. அதிலும் முழுமையடையாத கதை. வாழ்த்துக்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.

யமுனை செல்வன்

கிருஷ்ணபுரம்

02.06.2017

 

 

A Look at Michaël Dudok de Wit

Michaël Dudok de Wit.

michael-dudok-de-wit
IMAGE CREDIT: http://www.acmefilmworks.com/directors/michael-dudok-de-wit/

Hope you all heard about him. An animator from Dutch, who is known for his enchanting, yet beautiful animation shorts.

  1. Tom Sweep (1992)
  2. The Monk and the Fish (1994)
  3. Father and Daughter (2000)
  4. The Aroma of the Tea (2006)
  5. அவர் இயக்கிய விளம்பரப்படங்கள் 
  6. Interview of Michael Dudok De Wit

மென்மையான இசை, பாந்தமான வண்ணங்களுடன் சாதாரண கதையினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவார் டுடோக். தத்துவமும் நுட்பமும் நிறைந்த இவரது படைப்புகள் என்றுமே சலிக்காதவை. வசனம் என்பதே இல்லாத படைப்புகள் இவருடையது. நம்மூர் கார்டூன்கள் தொண்டை நீர் வற்றும் வரை கத்துவது நினைவுக்கு வருகிறதா? (அப்படிக் கத்தினாலும் டிமோன் அண்ட் பும்பாவை மறக்கத்தான் முடியுமா?)

சரி இப்போது எதற்கு இதெல்லாம் எனில், குறும்படங்கள் விளம்பரப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்த டுடோக் சென்ற வருடம் இயக்கிய The Red Turtle என்ற அனிமேஷன் திரைப்படத்தினை இன்று பார்த்தேன். அவர் இவ்வளவு காலம் திரைப்படம் இயக்காமல் இருந்து ஏன் திடீரென்று ஒரு திரைப்படம் இயக்கியிருக்கிறார் எனில் அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கவேண்டுமல்லவா? இருக்கிறது.

// According to Vincent Maraval, head of Wild Bunch, he visited Studio Ghibli in Japan in 2008 and met with Hayao Miyazaki. Miyazaki showed him the short film Father and Daughter and asked him to find its director, Michaël Dudok de Wit, with the prospect of co-producing a feature film. Wild Bunch approached Dudok de Wit in London and convinced him to take on the project. The screenplay was written by Dudok de Wit and Pascale Ferran – WIKI //

ஒரு அனிமேஷன் படம் எப்படி இப்படியொரு உணர்வினைக் கடதவியலும் என்பதற்கு இப்படம் ஒரு அதிசிறந்த உதாரணம். ஏற்கனவே The Monk and the Fish, Father and Daughter போன்ற குறும்படங்களில் நிகழ்த்தியவர் என்றாலும், இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. மிகச்சாதாரண கதை. நான் முழுமையாகக் கதையினை சொல்லிவிட்டாலும் கூட அது உங்களுக்கு எந்தவிதமான ஸ்பாயிலாராகவும் இருக்கப்போவதில்லை. இருந்தாலும் SPOILER ALERT.

2016 Red Turtle

கொந்தளிக்கும் கடல்.

அதிலொருவன். அனேகமாக கப்பலில் இருந்து ஏனையோர் இறக்க இவன் மட்டும் உயிர்பிழைத்திருகக்கூடும். அதுபற்றி எதுவும் காட்டப்படவில்லை. முதல் காட்சியே கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் ஒருவன்.

ஆளில்லா ஒரு தீவுக்கு அடித்து வரப்படுகிறான் அவன். அவனுக்குப் பெயரேதும் சொல்லப்படவில்லை. தீவின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று கத்துகிறான். எந்தவொரு கூப்பாட்டிற்கும் பதில் வருவதில்லை. ஆட்கள் இருந்தால் தானே!

அங்கு அவனுக்கு உணவுக்கு பஞ்சமில்லை. சிறிது நாளில் காட்டிலுள்ள மூங்கில்களை வைத்து மிதவை தயார் செய்து வெற்றிகரமாக கடலில் இறங்குகிறான். தீவினை விலகி சிறிது தூரம் சென்றது கண்ணுக்குத் தெரியாத ஒரு கடல் விலங்கால் அவனது மிதவை உடைக்கப்படுகிறது. மீண்டும் தீவுக்கே திரும்புகிறான். அங்கு அவனையும் மணலில் விளையாடும் நண்டுகளையும் தவிர வேறு யாருமில்லை. மீண்டுமொரு மிதவை தயார் செய்கிறான். மீண்டும் கடல். மீண்டும் அதே போல ஏதோவொரு பெரிய கடல் உயிரினத்தால் அது உடைக்கப்படுகிறது. மீண்டும் தீவு. மீண்டும் மிதவை தயாரிப்பு. மீண்டும் கடல். இப்போது கையில் ஒரு பெரிய மூங்கில் கம்பு, பாதுகாப்பிற்காகவும்; தன் மிதவையினை தாக்கி உடைக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிரினத்தை தாக்கவும்; இம்முறை அந்த உயிரனத்தைப் பார்த்துவிடுகிறான். அது ஒரு பெரிய சிவப்பு ஆமை.

மீண்டும் தீவு. என்ன செய்வதென்று தெரியவில்லை. விரக்தியில் கத்துகிறான். கடலிலிருந்து தீவிற்குள்ளாக ஏதோவொன்று ஊர்ந்து வருவதைப் பார்க்கிறான். அவனது தப்பிக்கும் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆமையே தான் அது. ஆத்திரத்தில் ஒரு மூங்கில் கம்பால் அதன் தலையில் அடிக்கிறான். பின்பு அது மேலும் நகராதவாறு அதனைத் திருப்பிப் போடுகிறான். போட்டுவிட்டு மீண்டுமொரு மிதவை செய்வதில் சிரத்தையுடன் ஈடுபடுகிறான். அப்போது அவனது மனம் கேட்கவில்லை. ஆமை அசையாமல் கிடக்கிறது. அதற்காக ஒரு மீனைப் பிடித்துச் செல்கிறான். பின்பே அது இறந்தது தெரியவருகிறது.

இதற்கு பின்பு நடப்பதையெல்லாம் பார்த்து தான் அனுபவிக்க இயலும். எங்கிருந்தோ வந்த ஆமை; அவனுக்குத் தொல்லை தந்த ஆமை அவனது வாழ்க்கையினேயே மாற்றுகிறது.

2003 Dogville

இப்படம் போல என்னை சமீபத்தில் வேறெந்த படமும் தொந்தரவு செய்திருக்கவில்லை. Lars von Trier இயக்கிய ‘Dogville’ படம் பார்த்ததுண்டா?

dogville
Dogville கிராம அரங்கம். இங்குதான் படம் முழுக்க நிகழும்.

படம் முழுக்க ஒரு நாடக அரங்கில் (ஒரு கிராமத்தைப் போன்று சித்தரிக்கப்பட்ட அரங்கு) நடக்கும். வீடுகளுக்கு சுவர்களோ கூரையோ இருக்காது. ஆனால் நடிகர்கள் இயல்பாக ஒரு வீட்டில் குடியிருப்பதைப் போல நடிதிருபார்கள். கிட்டத்தட்ட மூன்று மணிநேரப்படம். எனக்கு மிகப்படித்த படம். ஏனெனில் இயக்கியது Lars von Trier அல்லவா. My Man. அதுதான். இப்படம் ஒரு நாடக அரங்கினில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது அந்த செயற்கை அரங்கையும் மீறி மிகப்பெரிய வலியினை உண்டாக்கக்கூடிய படம். அது போலவே எனக்கு இந்த The Red Turtle படம் இருந்தது. படத்தில் ஒரு வசனம் கூட இல்லை.

கண்களில் கண்ணீர் நிறைய பார்த்து முடித்தேன்.

Simply breathtaking movie.

PS: மேலே டுடோகின் நேர்காணலுக்கு லிங்க் கொடுத்திருப்பேன். கட்டாயம் பாருங்கள்.

 

 

 

மொழிபெயர்ப்பு: Jon McGregor எழுதிய இரண்டு கதைகள்

1

நினைவு விமானம் 

இறுதிச்சடங்கிற்குப் பிறகான நீண்ட பயணத்தில், தாத்தாவை அவர் போர் காலத்தில் நிலைகொண்டிருந்த விமான தளத்தினைக் காண்பதற்காக அவர்கள் அழைத்துச் சென்றனர். இதுதான் அவர் விரும்பிச் செய்யக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும் என அவர்கள் நினைத்தனர். சுற்றுவேலியின், வெளியேறுவதற்கான வாயில்களில் ஒன்றின் பக்கத்திலிருந்த புல்வெளி விளிம்பில் தங்கள் காரினை நிறுத்திவிட்டு, தாத்தா இறங்குவதற்கு உதவி செய்தனர். அந்த மைதானம் மிகத் தட்டையானதாக இருந்ததால் அங்கு எதனையும் பார்ப்பது கடினமான ஒன்றாக இருந்தது. மைதானம் அவர்களைவிட்டு விலகியிருந்ததாகத் தோன்றியது. வேலியினூடாக அவர் பார்த்துக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். காற்று கிழக்கிலிருந்து வீசிக்கொண்டிருக்கையில், சுற்றுவேலிக்கருகே இருந்த நெடிய புற்கள்  ‘ஷ்’  என்ற மெல்லிய சப்தத்துடன் காற்றிற்கு அடங்கி அமிழ்வதும் தவிப்பதுமாக இருந்தன. அவர் விமான ஓடுதளத்தையும் விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தையும் தூரத்திலிருந்த உயரம் குறைவான கட்டிடங்களைப் பார்ப்பதையும் அவர்கள் பார்த்தனர். அவர்கள் இருந்த இடத்திலிருந்து அவர்களால் உண்மையில் நிறையப் பார்க்க முடியவில்லை. அவர் ஏதாவது சொல்லக்கூடுமென அவர்கள் அவருக்காக காத்திருந்தனர், ஆனால் அவர் ஏதோ யோசனையில் தன்னை மறந்து இருந்ததாகத் தோன்றியது. எதையோ சுட்டிக்காட்டுவது போல விரலை உயர்த்தி பின்பு விலக்கிக் கொண்டார். விளிம்பிலிருந்து சிறிது தூரத்திற்கு அவர்கள் நடந்தனர். அந்த இடத்தைப் பற்றிப் பேசுவதற்கு இசைபவராக தாத்தா இல்லை என்று தோன்றியது. மாறாக அவர், அடுத்த கிராமத்தில் பதுங்குக் குழிகளில் தனது புது மனைவி மற்றும்  குழந்தையுடன் வாழ்ந்ததைப் பற்றியும்  எவ்வாறு அவரது மனைவியால் மட்டும் எப்போதும்  (போர் உக்கிரமாக இருந்த காலகட்டம்) நடந்து திரும்பி வருவது முடிந்தது, ஏனெனில் எப்படி, நிலத்திலும் காட்டிலும் இருந்த மிகுதியான சேறானது குழந்தைத் தள்ளுவண்டிக்கு உவப்பானதாக இருந்திருக்கவில்லை  என்பது பற்றியும் பேசினார். காற்று வேகமெடுத்து குளிரத் தொடங்கியது. அவர்கள் காருக்குத் திரும்பி வந்து தெற்கு நோக்கி பயணமாயினர்.

தாத்தா ஆயுதங்களை தயாரிப்பவராகவும், சக்திவாய்ந்த குண்டுகளை வீசும் போர் விமானங்களில் குண்டுகளை நிரப்புபவராகவும், போர்விமானம் திரும்பி வரும்பொழுது குண்டுகள் வைக்கப்படும் கிடங்குகளை சுத்தப்படுத்துபவராகவும் பணிபுரிந்ததை அவர்கள் பின்னர் அறிந்துகொள்கிறார்கள். சமயங்களில் அவரது வேலை, இறந்தவர்களின் உடல்கள் மற்றும் உடற்பாகங்களை அப்புறப்படுத்துவதாகவும் இருந்தது, ஆனால் அது குறித்து எப்போதும் விவாதிக்கப்பட்டதில்லை. இந்த விமானத் தளத்திலிருந்து, விமானப் படையினர் பறந்து சென்று மொத்த நகரங்களையும் அழிப்பது; குடியிருப்புகளை குண்டுகள் மூலம் தகர்த்து அதன் இடிபாடுகளின் கீழ்வரை எரிப்பது, சடலங்களுக்கான நெருப்பினைக் கொளுத்துவது, அணைக்கட்டுகளை தகர்த்து  முழுப் பள்ளத்தாக்கினையும் மூழ்கச் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டனர். சில குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

போர் வெற்றி பெற்றது.

அவர்களது வீட்டிற்குச் செல்லும் வழியில், நவீன ராயல் விமானப்படை இயங்குதளத்தை கனிங்ஸ்பை என்ற இடத்தினில் கடந்தனர், நகரத்தை அடைவதற்கு முன்பாக சுற்று வேலியை ஒட்டி ஒன்று அல்லது இரண்டு மைல் பயணித்தனர். பிரதான ஓடுதளத்தின் இறுதிப்பகுதியை அவர்கள் கடந்த பொழுது, மஞ்சள் மலர்களாலான அடர்த்தியான புதரால், காற்றிலிருந்து மூன்று பக்கங்களில் தடுக்கப்பட்டிருந்த சிறிய சரளைக்கற்களான கார் நிறுத்துமிடத்தை சாலையின் மறுபுறம் பார்த்தனர். கார் நிறுத்துமிடம் நிரம்பியிருந்தது. ஒன்றிரண்டு பேராக கார்களுக்கு அருகே மடக்கு நாற்காலிகளில் முழங்கால் வரையிலான போர்வையுடன் அமர்ந்திருந்தனர், அவர்களது மடியில் குடுவைகள் அலங்கோலமாகக் கிடந்தன.  அவர்களிடம் தொலைநோக்கியும், நீண்ட லென்ஸ்களையுடைய கேமராக்களும் நோட்டுப்புத்தகங்களும் இருந்தன. தளத்தில் நிலைகொண்டிருந்த நவீன ரக போர் விமானம் கிளம்பிச்செல்வதற்காகவும் தரையிறங்குவதற்காகவும் அவர்கள் காத்திருந்தனர். அப்போது தான் அவர்களால் புகைப்படமெடுக்கவும், தங்களது நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுக்கவும் பிரமித்துப் போய் பார்க்கவும் முடியும். மேலும் அவர்கள் அன்றாடம் காட்டப்படும் பழைமையான குண்டெறி விமானமான ‘நினைவு விமானம்’ என்று அழைக்கப்படும் ஒன்றிற்காகவும்  காத்திருந்தனர், பழைமை என்ற வார்த்தை குண்டெறி விமானங்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது போலவே, கார், ஆடை, பொத்தான்களின் தொகுப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது.

அந்த இடத்தைக் கடந்து பயணிக்கையில், தாத்தா திரும்பி கார் நிறுத்துமிடத்திலிருந்த மக்களை பார்த்தார். அவர் எதுவுமே கூறவில்லை. பின் ஜன்னலினூடாக அவர் அவர்களை கவனித்தார். கனிங்ஸ்பையினூடாக பயணித்து, தேவாலயத்தைக் கடந்து ஆற்றின் மீதாக பிரதான சாலையை அடையும்வரை அவர் எதுவுமே பேசவில்லை. அவர்கள் வீட்டிற்குத் திரும்பும் வரையில் காத்திருந்தவர் காரிலிருந்து இறங்க அவர்கள் உதவி செய்ததும் “அந்த தொலைநோக்கிகளுடன் இருந்த மக்கள்  என்ன நினைப்புடன் தாங்கள் பார்க்கவிருப்பதற்காக காத்திருக்கிறார்கள்” என்று வினவினார்.

1.22 PM
12.10.16

கதை Airshow

எழுதியவர் John McGregor

தொகுப்பு This Isn’t The Sort Of Thing That Happens To Someone Like You

2

சிக்கலிலிருந்து தப்பித்தல்

நெருப்பு, அந்தச் சிறிய வேசிமகன் எதிர்பார்த்ததைவிட விரைவாகப் பரவியது.

கதை Fleeing complexity

எழுதியவர் Jon McGregor

தொகுப்பு  This Isn’t The Sort Of Thing That Happens To Someone Like You

//அன்பானவர்களே! மொழிபெயர்ப்புப் பயிற்சிக்காக இனி இந்த தளத்தில் இதுபோன்று ஏதாவது அடிக்கடி ஏதாவது பகிரப்படும். இதன் ஆங்கில மூலத்தைப் படிக்கும் வாசகர்களோ, அல்லது தமிழ் மூலத்தை மட்டும் படிக்கும் வாசகர்களோ இதிலுள்ள நிறை குறைகளை எடுத்துகூறினால் நல்லது//

Jon McGregorஇன் கதைகள் அற்புதமான வாசிப்பனுபவம் தரக்கூடியவை. மிக நுட்பமாக சில சமயங்களில் ஒரேயொரு படிமத்துடன், சில சமயம் வெறும் உணர்வு மற்றும் சமயங்களில் மிக மிக புதிதான உத்தியில் எழுதிப்பார்க்கப்பட்ட பரிட்சார்த்த கதைகள் என ஈர்க்கக்கூடியவை. கவித்துவமும் மேன்மையும் பொருந்திய எழுத்து இவருடையது. சமகால எழுத்தாளர்களில் நான் கவனிக்கும் குரல் இவருடையது. இவரது If Nobody Speaks of Remarkable Things படித்து சிலிர்த்தேன். சகாய விலையில் (பழைய புத்தகம்) அமேசானில் கிடைத்தது. இந்தத் தொகுப்பினில் That Color, In winter the sky, Looking up vagina, Air show, If its keep on raining, Fleeing complexity, Close, We wave and Call, Thoughtful, Memorial stone ஆகிய கதைகள் பல்வேறு காரணங்களுக்காக எனக்குப் பிடித்த கதைகள். அவற்றை வரும் காலங்களில் இங்கு மொழிபெயர்த்துப் பகிர்வேன்.