நத்தை நகரும் குறுகுறு மனது

சாம்ராஜ் எழுதியுள்ள இந்த மூன்று கவிதைகள் தான் மனதில் துள்ளலான பெயர்சொல்லமுடியாத உணர்வுநிலைக்கு என்னைத் தள்ளியிருக்கின்றன. அந்த மேலான உணர்வுநிலைக்கு ஒரு பெயரினை யோசிக்கையில் இந்த உவமானம் தோன்றியது. மனதினை ஒரு உயிருள்ள சதைப்பிண்டமாக நினைத்துக்கொள்ளுங்கள்; அதிலொரு நத்தை மெதுவாக ஊர்ந்து செல்லும்போது ஒரு குறுகுறுப்பு சதைப்பிண்டம் முழுக்க பயணித்து அதில் மயிரிக்கால்கள் இருப்பின் அதனை குத்திட்டு நிற்கச் செய்யும். அப்படி ஒரு குருகுருப்பினை இக்கவிதைகள் உணரச்செய்தன. இதுபோன்ற அதீத உணர்வுநிலைக்கு கவிதைகள் மட்டுமே என்னை இட்டுச்செல்கின்றன. புன்னகை, ஆச்சரியம், அதிர்ச்சி என்ற கலவையான முகப்பாவங்களைத் தோற்றுவிக்கிறது இக்கவிதைகள்.

1

ரப்பர் மரங்களுக்குள்
காலையின் சூரிய ஒளி

புழைக்கு போகிறது
இப்பாதை

சலவைக்கல் வீட்டில்
கர்த்தர் சட்டகத்துக்குள்
தெற்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்

ரோமம் இல்லாத தேகமாய்
நிற்கின்றன பாக்கு மரங்கள்

நல் இதயங்களுடன்
பள்ளிக்கு போகிறார்கள் சிறுமிகள்

மீன்காரனின் கூவலுக்கு
காத்திருக்கின்றன பூனைகள்

“சர்ப்பம் அழிச்சு” கீதம்
எங்கிருந்தோ மிதந்து வருகிறது

கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட

_0_

இந்தக் கவிதை வெறும் படிமங்களை மட்டுமே சொல்கிறது. காட்சிகளைக்ஆ காட்டுகிறது. ஆனால் இறுதி வரிகளில் ஒரு அதிர்ச்சி. என்ன என்பதை மட்டுமே காட்டுவது கவிதையில் ஒரு பாணி. ஏன்? எதனால்? என்பதற்கான பதில்களை இக்கவிதை நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால் என்ன என்பதை மட்டும் நமக்கு வார்த்தைகள் மூலமாக காட்டச்செய்ததில் இக்கவிதை அழகும் நளினமும் கொண்டு சாசுவதநிலை அடைகிறது. நிலக்காட்சிக்கான விவரிப்பு ‘ரப்பர் மரங்கள்’, ‘அதில் விழும் சூரிய ஒளி’; அடுத்த காட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுவழிப்பாதை; அடுத்ததாக சலவைக்கல் வீடு, வசதியானவர்கள், அவர்கள் வீட்டில் சட்டகத்திற்குள் தெற்கு நோக்கியபடி ஏசுநாதர்; மீண்டும் நிலக்காட்சி; பாக்கு மரங்கள் குறித்த வர்ணனை; சிறுமிகள் (சிறுவர்கள் பற்றி அவருக்குக் கவலையில்லை) வன்மமில்லாதவர்கள், நல்லிதயம் கொண்ட அவர்கள் பள்ளி செல்லும் காட்சி;  மீன்காரனின் கூவலுக்காகக் காத்திருக்கும் பூனைகள்; மீன்காரனின் கூவலுக்கு ஏன் மீன்கள் காத்திருக்க வேண்டும்? வேறு எதற்கு சிதறும் துண்டுகளை விழுங்குவதற்குத் தான்; எங்கிருந்து என்று சொல்லவில்லை, ஆனால் எங்கிருந்தோ ‘சர்ப்பம் அழிச்சு’ பாடல் காற்றின் ஊடாக வருகிறது; எவ்வளவு எளிமையான காட்சிகளைக் காட்டுகிறார். அடுத்த வரிகளில்

“கதகளி கோலத்தில்
உத்திரத்தில் தொங்கும்
ஜோசப் சாக்கோ
காத்திருக்கிறார் கதவு உடைபட”

இந்த வரிகளில் இது அற்புதமான கவிதையாகிறது. யாருமறியாமல் உள்ளே தாழிட்டு, உத்திரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஜோசப் சாக்கோ வீட்டுக்கதவுகள் உடைக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. சரி, அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து எழுத்தாளருக்கோ வாசகருக்கோ புகாரில்லை; ஆஹா அற்புதம்.

2

இரண்டாவது ஒரு குறும்புக்கவிதை.

கையில் கூண்டோடு
ஜோசியக்காரன்
மரம் மறைவில்
சிறுநீர் கழிக்கையில்
முகத்தை திருப்பிக் கொள்கிறது கிளி.

3

சுரங்கங்களைப்பற்றிய பேச்சு
எப்பொழுதும்
மர்மாகவே இருக்கிறது.

கோவிலிருந்து கடற்கரைக்கு
அரண்மனையிலிருந்து கோவிலுக்கு
பொக்கிஷ அறைகளிலிருந்து
கைவிடப்பட்ட பழைய நந்தவனங்களுக்கு
போகின்றன அதன் ரகசிய பாதைகள்

பேசும்பொழுதே
மண் சரிகின்றன
வார்த்தைகளின் மீது

உரையாடும் எவரும்
நேரில் கண்டதில்லை அதை

பாதாள சாக்கடைக்காக
நகரமே தோண்டப்பட
மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன சுரங்கங்கள்

கழிவுநீர் குழாய்கள் பதிக்க வெட்டப்பட்ட
ஆழமான குழிகளை
சரித்திர சந்தேகங்களோடு
கடந்து செல்கின்றனர்.

கான்கீரிட் இடப்பட்ட
சாலைகளில் பயணிப்பவர்
மானசீகமாய்
நடக்கின்றனர்
ஒரு சுரங்கத்தின் மீது.

பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது.

_0_

இக்கவிதை பிடிக்க எனது தனிப்பட்ட, சுரங்கங்கள் மீதான என் காதலும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் படித்த பொன்னியின் செல்வன் (கந்தன் மாறன் மர்ம உருவத்தால் தள்ளிவிடப்படுவானே! பழி கூட வந்தியத்தேவன் மீது விழும்) சில வருடங்களுக்கு முன்னர் பார்த்த கொரிய நியோ ந்வார் திரைப்படமான The Moss ஆகியவை நினைவுக்கு வருகின்றன. சுரங்கங்கள் ரகசியம் பொருந்தியவை. அது அரசர் உட்பட வெகுசிலருக்கே தெரிந்திருக்கும்; அந்த அரசரும் வேகுசிலரும் மாண்டபின்பு அந்த ரகசியமும் மண்ணோடு புதைந்துபோகின்றன; கேபிள் வயர் பதிக்க, பாதாள / சாதாரண சாக்கடைக்காக, ஏனைய பிற கட்டுமானப்பணிகளுக்காக  குழி தோண்டப்படுகையில், அதுவரை புதைந்திருந்த ரகசியச் சுரங்கங்கள் “மறுபடியும் சொற்களில்
உயிர் பெறுகின்றன”; கடைசிவரிகள்

“பின்னிரவில்
வெளிவரும் பெருச்சாளி
தன் அநாதி மூதோன்
கல்லாகப் பார்த்த தூணின் மிச்சத்தில்
சற்று நேரம் பதுங்கிப்போகிறது”

சாதாரணத்தை ஒரு வரியில் அசாதாரண நிலைக்குக் கொண்டு செல்கிறார் சாம்ராஜ். இவரது பார்வைதான் எவ்வளவு அழகு; அதனை எழுத்தில் வடிக்கையில் எவ்வளவு அடர்த்தி, நிதானம், எளிமை. இவரின் கவிதைத் தொகுப்புகளை வாசித்தே ஆகவேண்டும் என ஆவல் மீதுருகிறது. கே.என்.செந்திலுக்கு மனமார்ந்த நன்றிகள். சாம்ராஜ் அவர்களை கேரள சர்வதேசத் திரைப்படவிழாவில் நண்பர் சுரேன் அறிமுகம்செய்ய முதல்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் கவிதைகளை வாசித்திருக்கவில்லை. அதற்கு இவ்வளவு நாட்கள் பிடித்திருக்கிறது. அதுவும் முற்றிலும் புதிய நகரம், புதிய சூழலில், வெக்கையே வியாபித்திருக்கும் கசகசப்பான கான்கிரீட் கூடுகள் நிறைந்த சென்னையில் வாசிப்பு கைகூடுமோ என்ற சந்தேகத்தில் இருந்த எனக்கு பேய் வாசிப்பு சாத்தியம் என கட்டியம் கூறுகிறது இந்த மூன்று கவிதைகள்.

நன்றி ‘கபாடபுரம்’ இணைய இதழ்.

இணைப்புகள்:

ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

எத்தனை கைகள்! -சாம்ராஜ்

அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு(1)

Poem 1

https://twitter.com/arasu1691/status/640940859819626496

Poem 2

https://twitter.com/arasu1691/status/735887276060745728

 

 

 

 

 

 

 

 

எனக்கு பிடித்த கவிதைகள் 7 – ஸ்ரீநேசன்

மூன்று பாட்டிகள் – ஸ்ரீநேசன்

படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி
எதையோ தவறவிட்டதான முகபாவம்
சுமக்க முடியாத புத்தக மூட்டையை
யாரோ ஒரு சிறுமி
அவள் மடியில் இறக்குகிறாள்
என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது
தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல

°
கோயில் பிரசாதமெனினும்
நீ கொடுக்கும் சுண்டலை
மயக்க மருந்திட்டதோ என இப்பேருந்து பயணிகள்
ஒருவரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்
உன் அன்பை
அழுகையைப் போல அடக்கிக் கொள் பாட்டி

°
பச்சை வேர்க்கடலை
கிடைக்காத பருவத்தில் ஒரு மரக்கால் பைநிறைய
மாமியார் பெருமையோடு கொடுத்தனுப்பியவை
அம்மாவுக்குக் கொண்டு செல்வேன்
விடிகாலை உறக்கத்தைப் பயன்படுத்தி
ஒரு கிழவி தன்னுடையதைப் போல்
என்னுடைய பையோடு இறங்கிச் செல்கிறாள்
தூக்கக் கலக்கத்தில் கவனித்துவிட்ட நான்
பதற்றமடைந்து விட்டேன்
யாரும் பாட்டியை பிடித்துவிடக்கூடாது
யாரும் அவமானப்படுத்தி விடக்கூடாது

°
நன்றி :
கல்குதிரை 24
இளவேனிற்கால இதழ்
ஏப்ரல் 2015
பக்கம் – 21

எனக்கு பிடித்த கவிதைகள் 6 – ஞானக்கூத்தன்

ஸ்ரீலஸ்ரீ – ஞானக்கூத்தன்

image

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

1971

நன்றி : http://www.gnanakoothan.com/2006/07/30/ஸ்ரீலஸ்ரீ/

அவருடைய கவிதைகளை வாசிக்க: http://www.gnanakoothan.com/about-2/
.

எனக்கு பிடித்த கவிதைகள் 5 – லிபி ஆரண்யா

கார்கால நாயொன்றின் புறப்பாடல்

image
லிபி ஆரண்யா (நன்றி: கபாடபுரம்)

(‘நாய்’ என்பதை வசைச்சொல் என நம்புகிறவர்கள் தொடரவேண்டாம்)

சதா கார்களைத் துரத்தும்
இந்தத் தெருநாயைப்
புரிந்துகொள்ள முடிவதில்லை
புழுதி பறக்கும் அதன் அறச்சீற்றம்
விரையும் சக்கரங்களில் சிக்கிடுமோவென
பதட்டத்துடன் பரிவும் தளும்புகிறது
அக்கணங்களில்

கூறுகெட்ட அதன் செய்கைமீது
நமக்கு கோபமும் வருகிறது

அதன் சாலையோர வன்மத்திற்கு
நெடுஞ்சாலைக் கார்கள்தான் காரணமா
அதற்கு முலையூட்டிய தாயையோ
அது முலையூட்டிய மகவையோ
எதோவொரு காரின் சக்கரத்தாழ்வான்
தார்க்கித்தானில் வைத்து
ரத்தச்சித்திரம் தீட்டிப் போயிருக்கலாம்

ஒருமுறை சிறுவனை
பிற்பாடு ஒரு நடுத்தரவயதுக்காரனை
நேற்று ஒரு மூதாட்டியை
அந்த நாய்
வாய் வைத்திருக்கிறது

தேடிப்போய் உரியவர்களைக் குதறத் துப்பற்ற இது
அண்மிக்கிற எளிய இலக்குகள் மீது
பல் பதித்து ஆசுவாசம் கொள்கிறது

காரைப் புரட்டி ஒரு பூனையாக்கி
கழுத்தைக் கவ்விப் போகும் மூர்க்கத்தோடுதான்
ஒவ்வொரு முறையும் விரட்டிப் போகிறது
தன் நகக்கீறலின் சாத்தியமுமற்று
மூச்சிறைக்க மீளும்
அதன் சிவந்த கண்களை
வேறெங்கோ நான் சந்தித்திருக்கிறேன்

கட்சித் திட்டமொன்றின் இறுதி வாக்கியத்திலோ
பழைய செய்கைக்கு நீதிமன்றம் வந்து போகிறவனிடமா
இப்பவும் புஜம் காட்டும் கவிதை வரியிலா
நினைவில்லை

ஆற்றாமையின் வன்மத்தில் மினுங்கும்
அவை நேசிப்பிற்குரியவை

ஒரு காரை
காருக்குள்ளிருக்கும் ஒருவரைக்
கடித்துவிட்டால்கூடப் போதும்
இது அமைதி கொள்ள
°
லிபி ஆரண்யா

எனக்கு பிடித்த கவிதைகள் 4 – விக்ரமாதித்யன் நம்பி

‘டாஸ்மாக்’கைக் கடந்து
செல்லும் கவிஞன்

டாஸ்மாக்கை கடந்து
செல்கிறான் கவிஞன்

உலகத்திலேயே வேறெதுவும்
கவிஞனை
இந்த அளவுக்கு
சலனப்படுத்துவதில்லை
(பெண் சபலம்
தனி)

கோயிலை
கடந்து செல்கிறான்

உணவுவிடுதியை
கடந்து செல்கிறான்

ஜவுளிக்கடையை
லாலாக் கடையைக் கடந்து
செல்கிறான்

புக்ஸ்டாலை வங்கியை
எவ்வளவோ இடங்களை கடந்து
செல்கிறான்

எதுவுமே
தொந்தரவு தந்ததில்லை

கடக்க முடியாத இடம்
இது ஒன்றுதான்

கட்டிப்போடும் டாஸ்மாக்கை
கடக்க முடியாமல் தவிக்கிறான்
கவிஞன்

ஒரு டாஸ்மாக்கிலிருந்து
இன்னொரு டாஸ்மாக்குக்கு

உள்ளூர் டாஸ்மாக்கிலிருந்து
வெளியூர் டாஸ்மாக்குக்கு

கடந்துக்கொண்டெ
இருக்கிறான் கவிஞன்

கடக்க கடக்க
வந்துக்கொண்டேயிருக்கிறது
டாஸ்மாக்

(கவிஞனை
அன்பாக நடத்துகிறார்கள்
டாஸ்மாக் விற்பனையாளர்கள்

கனிவாக
பழகுகிறார்கள் ‘பார்’
நடத்துபவர்கள்

இன்முகத்துடன்
இருக்கிறார்கள் வேலையாள்கள்

வளவுக்காரர்களைவிட
தெருக்காரர்களை விட
ஊரில் உள்ளவர்களை காட்டிலும்
நாட்டில் உள்ளவர்களை
காட்டிலும்
நிரம்ப நிரம்ப
நல்லவர்களாகத் தெரிகிறார்கள்
டாஸ்மாக்கில்
இருப்பவர்கள்

இவ்வளவுக்கு கவிஞன்
அவர்களிடம் தன்னை காட்டிக்
கொள்வதேயில்லை)

கவிஞனுக்கும்
டாஸ்மாக்குக்குமான உறவு
பூர்வஜென்மத்து தொடர்பு போல

கவிஞனும்
டாஸ்மாக்கை விடுவதில்லை
டாஸ்மாக்கும்
கவிஞனை ஒதுக்குவதாயில்லை

டாஸ்மாக்கின் வசீகரம்
அரசனின் கம்பீரம் போல

டாஸ்மாக்கின் கவர்ச்சி
கணிகையின் ஒய்யாரம் போல

கவிஞனை
மண்டியிட செய்கிறது

கவிஞனை
விழ வைக்கிறது

டாஸ்மாக்கை
கடந்துவிடப் பார்க்கிறான்
கவிஞன்

கடந்து கடந்து
தீரவில்லை தொலையவில்லை
டாஸ்மாக்குகள்

ஒவ்வொரு ஊரிலும் எப்படியோ
பேருந்து நிலையத்துக்குப்
பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்

சிரம பரிகாரம்
செய்துக்கொண்டு
செல்லும்படி கேட்டுக்
கோள்கிறது ஒரு அருமையான
டாஸ்மாக்

பணவிடை அனுப்பப் போகையில்
வழிமறித்து
பந்தி உபசரிப்பது போல
அழைக்கிறது இன்னொரு நல்ல
டாஸ் மாக்

கல்யாண வீட்டுக்குக்
கிளம்புவதை எவ்வாறோ
கண்டறிந்து கொள்கிறது
வேறொரு புத்திசாலி
டாஸ்மாக்

கருத்தரங்குக்குப் புறப்படுவதை
எவ்விதமோ
கண்டுபிடித்து விடுகிறது
ஒரு கெட்டிக்கார டாஸ்மாக்

கையில் பணம் வைத்திருப்பதை
கவனித்துவிடுகிறது டாஸ்மாக்

சன்மானம் வருவதை
சரியாகத் தெரிந்துகொள்கிறது
டாஸ்மாக்

நண்பர்களை
நேரம் காலம் பார்த்து
அனுப்பிவைக்கிறது டாஸ்மாக்

கவிதை வருமென்று வேறு
ஆசை
காட்டுகிறது டாஸ்மாக்

டாஸ்மாக்கை கடந்தும் கடக்க
முடியாமல்
உழன்று கொண்டிருக்கிறான்
கவிஞன்.
°

image

எனக்கு பிடித்த கவிதைகள் 3 – றியாஸ் குரானா

றியாஸ் குரானா எழுதிய கவிதை

அதிகம் பாவிக்கப்பட்ட பறவை

இது அதிகம் பாவிக்கப்பட்ட ஒரு பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பல வருடங்களாக
திரும்பத் திரும்ப வரையப்பட்டபோதிலும்
ஒரு இறகும் தொலைந்துவிடவில்லை
நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும்
வண்ணங்களை மாற்றிக் காண்பிக்கும்
இந்தப் பறவை;
தினமும் அதிகாலையில்
சித்திரத்திலிருந்து வெளியில் சென்றுவிடுகிறது
அந்த நேரத்தில்தான்
சித்திரத்தில் திருத்த வேலைகள் செய்யமுடியும்
இரவில், சித்திரத்திலுள்ள
வர்ணங்களையெல்லாம் தின்றுவிடுகிறது
இப்படித்தான் அன்றொரு நாள்
ஒரு அழகிய பாடலை எழுதிவைத்தேன்
கண்முன்னே சொற்களைக்
கொத்தித் தின்றேவிட்டது
இலக்கியங்களும்
ஓவியங்களும்
மிக அதிகம் பாவித்த இந்தப் பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பெரும்பாலும்
அந்தப் பறவை எதுவென்று
இப்போது ஊகித்திருப்பீர்கள்
இல்லையெனில்; இனியும் ஊகிப்பதற்கான
அவகாசம் உங்களுக்கில்லை
வாசிப்பதை நிறுத்திவிட்டு
தயவு செய்து போய்விடுங்கள்
இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை
கவிதைக்குள் வருகின்ற நேரம்

°

image

எனக்குப் பிடித்த கவிதைகள் 2: கேட்கப்படுவதும் கேட்கப்படாததும் – ஆத்மாநாம்

கேட்கப்படுவதும் கேட்கப்படாததும்

உலகத்திடமிருந்து நான்  எதிர்பார்ப்பது
அன்பை
கருணையை
மனிதாபிமானத்தை
புரிந்துகொள்ளுதலை
உண்மை வெளிப்பாட்டை
இன்னும் பிற
நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்
என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை
உணவைக் கேட்கவில்லை
குடியிருப்பைக் கேட்கவில்லை
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
நான் வேறு நீ வேறு
என்பது பொய்
நானும் நீயும் ஒன்றுதான்
என்பதை உணர்
என்றுதான்

ஆத்மாநாம்

எனக்குப் பிடித்த கவிதைகள் 1: கொலை விண்ணப்பம் – ஸ்ரீநேசன்

கொலை விண்ணப்பம்

நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள் மோசமான
காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப் படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக்
கண்டு இப்போது எரிச்சலடையுங்கள்
அதன் நிமித்தமாக என்னைச் சபியுங்கள்
நான் லாரியில் மாட்டிக்கொண்டு சாக வேண்டுமென்று
இல்லையெனில் நள்ளிரவில் நான் வந்து திறக்கும்
என் வீட்டுப் பூட்டில் மின்சாரத்தைப் பாய்த்து வையுங்கள்
அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும் என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசியமான வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சிவா கத்தியால் குத்துங்கள்
நீங்கள் தைரியம் கொஞ்சம் குறைவானவரெனில்
ஆள் வைத்துச் செய்யுங்கள்
தடயமே தெரிய வரக்கூடாது என்றால்
பில்லி சூன்யமாவது வையுங்கள்
இதுவெதுவும் பொருந்தவில்லையெனில்
ஆற்றில் மூழ்கடிக்கலாம்……
தூக்கேற்றிக் கொல்லலாம்…..
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தலாம்……
இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்
ஒன்றினாலும் பலனில்லாத பட்சத்தில்
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும் போது
பாறாங்கல்லால் தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.

– ஸ்ரீநேசன்